Apr 16, 2021 12:28 PM

’சேசிங்’ திரைப்பட விமர்சனம்

3ee6d64ff572936f9325ef596aed9cfa.jpg

Casting : Varalakshmi Sarathkumar, Sona, Super Subarayan, Balasaravanan,

Directed By : K.Veerakumar

Music By : Thasi

Produced By : Asiasin Media - Mathialagan Muniyandi

 

மர்ம நபர்களால் கடத்தப்பட்ட இளம் பெண் ஒருவரை மீட்கும் போலீஸ் அதிகாரியான வரலட்சுமி சரத்குமார், கடத்தியவர்கள் பற்றி விசாரிக்கும் போது, பல திடுக்கிடும் உண்மைகளும், பெண்ணை கடத்தியவர்களின் பகீர் பின்னணியும் தெரிய வருகிறது. இதையடுத்து அந்த கூட்டத்தை தகுந்த சாட்சியங்களோடு பிடிக்கும் பணியில் வரலட்சுமி சரத்குமார் இறங்க, குற்றவாளிகள் ஒவ்வொருவரும் மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். அந்த கொலைகளை செய்வது யார்? அவர்களின் பகீர் பின்னணி என்ன, அவர்களை வரலட்சுமி பிடித்தாரா இல்லையா, என்பதை சமூக பொறுப்புடனும், விறுவிறுப்புடனும் சொல்லியிருக்கிறார்கள்.

 

காவல்துறை சீருடையில் கம்பீரமாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார், கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு, அறிமுக காட்சியில் குற்றவாளிகளை சேசிங் செய்பவர், படத்தின் இறுதிவரை யாரையாவது சேசிங் செய்துக் கொண்டே இருக்கிறார்.

 

வில்லன்களாக நடித்திருக்கும் சூப்பர் சுப்பராயன், மதிழகண் முனியாண்டி, வில்லியாக வரும் சோனா என அனைவரும் மனதில் நிற்கும் வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

 

வரலட்சுமியின் குழுவில் இருக்கும் காவலரான பாலசரவணன், சீரியஸான காட்சிகளில் கூட கவுண்டர் பேசி சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். சில இடங்களில் அவரது முயற்சி எடுபட்டாலும், பல இடங்களில் சலிப்பு ஏற்பட செய்கிறது.

 

ஒளிப்பதிவாளர் ஈ.கிருஷ்ணமூர்த்தி கதைக்கு ஏற்ப பணியாற்றியுள்ளார். மலேசியா என்றாலே வழக்கமாக காட்டப்படும் லொக்கேஷன்களை தவிர்த்துவிட்டு புதிய லொக்கேஷன்களை தேடி தேடி படம் பிடித்துள்ளார்.

 

தசியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. பாலசுப்ரமணியனின் படத்தொகுப்பு கச்சிதம்.

 

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எத்தகைய தண்டனை கொடுக்க வேண்டும், என்பதை மேலோட்டமாக சொல்லியிருந்தாலும், ஒரே காட்சியில் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் கே.வீரகுமார், போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் எத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள், என்பதையும் விரிவாக விவரித்துள்ளார்.

 

இளம் பெண்கள் கடத்தல் பற்றிய விசாரணையில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் அதனை தொடர்ந்து வரும் அடுத்தடுத்த காட்சிகள் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தினாலும், இடையில் வரும் பிளாஷ்பேக் அதனை தொடர்ந்து வரும் சம்பவங்கள் ரெகுலரான பார்மெட்டில் இருப்பது சிறிது சலிப்படைய செய்தாலும், கமர்ஷியலான படதை சமூக அக்கறையுடன் இயக்கியிருக்கும் இயக்குநர் கே.வீரகுமாரை பாராட்டலாம்.

 

ரேட்டிங் 3/5