‘செல்ல குட்டி’ திரைப்பட விமர்சனம்
Casting : Dr.Ditto, Magesh, Deepshika, Simran, Chaams, Madhumitha, Thidiyan, Chaplin Sundar, Mani, Lakshmi, Pushpatha
Directed By : Sagayanathan
Music By : T.S. Muralidharan, Background Music - Sirpy
Produced By : Sri Chitra Pournami Film - V. Manibhai
90-களில் கதை நடக்கிறது. நாயகர்கள் டிட்டோ, மகேஷ் மற்றும் நாயகி தீபிக்ஷா ஒரே பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கிறார்கள். தாய், தந்தை இல்லாத மகேஷ் மீது தீபிக்ஷா இரக்கம் காட்ட, அதை காதல் என்று புரிந்துக்கொள்ளும் மகேஷ், அவரை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், தீபிக்ஷா மகேஷின் நண்பர் டிட்டோவை ஒருதலையாக காதலிக்கிறார். மகேஷ் தீபிக்ஷாவிடம் தனது காதலை சொல்ல, அதை அவர் நிராகரித்து விடுகிறார். இதனால் படிப்பில் கவனம் செலுத்தாத மகேஷ் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார். மற்றவர்கள் தேர்ச்சி பெற்று பொறியியல் பட்டம் பெற்று வாழ்க்கையில் முன்னேறி விடுகிறார்கள்.
இதற்கிடையே, தீபிக்ஷாவின் மனதில் இருக்கும் டிட்டோ அவரது வாழ்க்கை துணையாவதற்கான சூழலை காலம் உருவாக்குகிறது. ஆனால், நண்பன் காதலித்த பெண்ணை தான் திருமணம் செய்வது துரோகம், என்று கருதும் டிட்டோ தீபிக்ஷாவை நிராகரித்து விடுகிறார். தான் ஆசைப்பட்டாலும், விருப்பம் இல்லாதவரை மணக்க கூடாது என்று தீபிக்ஷாவும் டிட்டோவை நிராகரித்து விட, அதன் பிறகு இவர்களது வாழ்க்கை என்ன ஆனது?, காதலுக்காக வாழ்க்கையை தொலைத்த மகேஷ் என்ன ஆனார்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகர்கள் டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ் இருவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்களாகவும், படிப்பு முடிந்து முதிர்ச்சி அடையும் காலக்கட்டத்திலும் நடிப்பில் வேறுபாட்டை காண்பித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
நாயகியாக நடித்திருக்கும் தீபிக்ஷா குடும்ப பாங்கான முகத்தோடு, அளவான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் சிம்ரன் குறைவான காட்சிகளில் வந்தாலும், இன்னும் சற்று கூடுதலான காட்சிகளில் வந்திருக்கலாமே!, என்று நினைக்க வைத்துவிடுகிறார்.
கல்லூரி முதல்வராக நடித்திருக்கும் மதுமிதாவும், ஆசிரியராக நடித்திருக்கும் சாம்ஸும் சில இடங்களில் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள். மற்ற வேடங்களில் நடித்திருக்கும் திடியன், சாப்ளின் சுந்தர், மணி, லட்சுமி, புஷ்பதா என அனைத்து நடிகர்களும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
டி.எஸ்.முரளிதரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் மெல்லிசை. சிற்பியின் பின்னணி இசை காதல் போல் இனிமையாக பயணிக்கிறது.
ஒளிப்பதிவாளர் பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஆகியோரது கேமரா கதைக்கு ஏற்ப பயணித்திருந்தாலும், பாடல் காட்சிகளை அழகியலோடு காட்சிப்படுத்தியிருக்கிறது.
திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் ’சிந்துநதி பூ’ செந்தமிழன், 90-ம் காலக்கட்ட காதலை மிக நேர்த்தியாக பதிவு செய்திருப்பதோடு, காதலர்களுக்கான மெசஜையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
கதை எழுதி இயக்கியிருக்கும் சகாயநாதன், உண்மையான காதல் என்றால் என்ன? என்பதை அழகியலோடு சொல்லியிருப்பதோடு, படம் பார்ப்பவர்களை தங்களது கடந்த கால நினைவுகளுடன் பயணிக்க வைத்துவிடுகிறார்.
முக்கோண காதல் கதையாக இருந்தாலும், ஒவ்வொரு காலக்கட்டங்களிலும் காதலை பல திருப்பங்களுடன் பயணிக்க வைத்து, இறுதியில் இரண்டு மனங்களிலும் ஒன்றாக பூப்பது தான் உண்மையான காதல், என்பதை கமர்ஷியலாகவும், கருத்தாகவும் சொல்லியிருக்கிறார்.
சில காட்சிகள் திணிப்பது போல் இருந்தாலும், தான் சொல்ல வந்ததை எந்தவித நெருடலும் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்க கூடிய நல்ல பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சகாயநாதன்.
மொத்தத்தில், இந்த ’செல்ல குட்டி’ சில குறைகள் கொண்டிருந்தாலும் வெல்லக்கட்டியாய் இனிக்கிறது.
ரேட்டிங் 2.8/5