Jul 10, 2023 07:16 PM

’சித்தரிக்கப்பட்டவை’ திரைப்பட விமர்சனம்

294011ee4075d2dcf861aa0d760fb1b8.jpg

Casting : Ramkumar, Preethi, Ganesh Kumar, Kumaresh Babu, Durga, Ravi, Mani,

Directed By : Ramkumar

Music By : Thyagu

Produced By : Y Visual Creations - Ramkumar

 

குற்றமற்றவர்களை சித்தரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் மூலம் சட்டத்தின் முன்பு குற்றவாளியாக எப்படி மாற்றுகிறார்கள், என்பதை சொல்வது தான் ‘சித்தரிக்கப்பட்டவை’ படத்தின் ஒன்லைன் கதை.

 

நாயகன் ராம்குமார், நாயகி பிரீத்தி இணைந்து பென்சில் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் சிறி தொழிற்சாலையை நடத்தி வருவதோடு, ஏழை மாணவர்களுக்கு இலவசமாகவும் வழங்கி வருகிறார்கள். அவர்களிடம் பழகும் வில்லன் கும்பல், பள்ளி பொருட்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை தாங்கள் செய்வதாக கூறி, அதன் மூலம் மாணவர்களை போதை பழக்கத்திற்கு ஆளாக்குகிறார்கள். இதை அறிந்துக்கொள்ளும் நாயகியை வில்லன் கும்பல் கொலை செய்வதோடு, அந்த கொலை பழியை நாயகன் ராம்குமார் மீது சுமத்தி, அவருக்கு எதிராக பொய்யான ஆதாரங்களை சித்தரித்து, அவரை சட்டத்தின் முன் குற்றவாளியாக நிறுத்துகிறார்கள். குற்றம் செய்யாத ராம்குமாரை சட்டம் தண்டித்தாலும், நிஜ குற்றவாளிகள் எப்படி தண்டிக்கப்படுகிறார்கள், யார் மூலமாக தண்டிக்கப்படுகிறார்கள், என்பதை சொல்வது தான் படத்தின் மீதிக்கதை.

 

படத்தை எழுதி இயக்கியிருக்கும் ராம்குமார் தான் நாயகனாக நடித்திருக்கிறார். நடிப்பின் மீது ஆர்வம் அல்ல பேரார்வம் கொண்ட ராம்குமார், இந்த ஒரு படத்திலேயே தான் கற்று வைத்த மொத்த நடிப்பு வித்தையையும் வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார். அவருடைய இந்த முயற்சி பாராட்டும்படி இருந்தாலும், பல இடங்களில் ஓவர் டோஸாக இருப்பது, பழைய மேடை நாடகத்தை பார்க்கும் உணர்வை கொடுக்கிறது.

 

நாயகியாக நடித்திருக்கும் பிரீத்தி பக்கத்து விட்டு பெண் போல் எளிமையாகவும், இயல்பாகவும் இருக்கிறார். அவரது நடிப்பும் அதே ரகம் தான்.

 

வழக்கறிஞராக நடித்திருக்கும் கணேஷ் குமார், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு.

 

வில்லனாக நடித்திருக்கும் குமரேஷ் பாபு மற்றும் வில்லனின் உதவியாளர்களாக நடித்திருக்கும் ரவி, மணி, மணி, மதன், ராணி, ஜெயஸ்ரீ என அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

சுதன் மற்றும் குருமூர்த்தியின் ஒளிப்பதிவும் தியாகுவின் இசையும் படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது. 

 

ஒரு எளிமையான கதையை எவ்வளவு எளிமையாக சொல்ல முடியுமோ, அவ்வளவு எளிமையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம்குமார்.

 

போதையில் எடுக்கும் ஒரு முடிவு எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது என்பதை நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் ராம்குமார், சித்தரிக்கப்பட்ட ஆதாரங்கள் மூலம் ஒரு நிரபராதியை சட்டம் எப்படி குற்றவாளியாக மாற்றுகிறது, என்பதையும் நேர்த்தியாக சொல்லியிருக்கிறார். இதேபோல், முழு படத்தையும் நேர்த்தியாகவும், சற்று தரமாகவும் கொடுத்திருந்தால் படம் நிச்சயம் கவனம் ஈர்த்திருக்கும்.

 

முழுக்க முழுக்க புதியவர்களால் சிறிய பட்ஜெட்டில் ஒரு திரைப்படத்தை எடுத்து, அதை திரையரங்குகளில் வெளியிட்டிருக்கும் இவர்களுடைய இந்த முயற்சியை பாராட்டினாலும், சினிமாவுக்கு என்று இருக்கும் தரத்தை மறந்து சினிமாவையே சிதைக்கும் விதமாக எடுத்திருக்கும் இந்த ‘சித்தரிக்கப்பட்டவை’ ரசிகர்களை நிச்சயம் சித்ரவதை செய்யும்.

 

ரேட்டிங் 1.5/5