’கோப்ரா’ திரைப்பட விமர்சனம்
Casting : Vikram, Irfan Pathan, Srinidhi Shetty, Mirnalini, Meenakshi
Directed By : Ajay Gnanamuthu
Music By : AR Rahman
Produced By : Lalith Kumar
பல கெட்டப்புகளில் அவதரிக்கும் விக்ரம், முதலமைச்சர், ஸ்காட்லாந்து அரசர் உள்ளிட்ட பல முக்கிய புள்ளிகளை கொலை செய்கிறார். இந்த கொலைகள் பற்றி விசாரிக்கும் இண்டர்போல் ஆபிஸராக வரும் இர்பான் பதான், கொலையாளி ஒரு கணித மேதாவி என்பதை கண்டுபிடிப்பதோடு, அதை வைத்தே குற்றவாளியை பிடிக்க முயற்சிக்கிறார். விக்ரமை காட்டிக்கொடுப்பதற்காக ஹேக்கர் ஒருவர் இண்டர்போலுக்கு அடிக்கடி தகவல் கொடுக்க, விக்ரம் பிடிபட்டாரா? இல்லையா? , அவர் எதற்காக இத்தனை கொலைகள் செய்கிறார்? என்பதை விறுவிறுப்பாகவும், பிரம்மாண்டமாகவும் சொல்லியிருப்பது தான் ‘கோப்ரா’ படத்தின் மீதிக்கதை.
விக்ரமின் உழைப்பும், நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. வித்தியாசமான கெட்டப் போடுவதும், கதாப்பாத்திரத்திற்காக தன்னை வருத்திக்கொள்வதும் விக்ரமுக்கு புதிதல்ல என்றாலும், இந்த படத்தில் அவர் போட்டிருக்கும் ஏழு கெட்டப்புகளுடம் வியக்க வைக்கிறது. வித்தியாசமான பல கெட்டப்புகள் மட்டும் இன்றி அந்த கெட்டப்புகளுக்கு ஏற்ற உடல்மொழியை அவர் வெளிப்படுத்திய விதம் ரசிக்க வைக்கிறது. நடிப்போடு ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கும் விக்ரம், மூன்று வருடம் தனது ரசிகர்களை காக்க வைத்ததற்கு சரியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்.
ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்ணாளினி, மீனாக்ஷி என மூன்று கதாநாயகிகளும் கதையோடு பயணிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். தமிழுக்கு அறிமுகமாகியிருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி அளவாக நடித்திருக்கிறார். மீனாட்சி மற்று மிர்ணாளினி இருவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இண்டர்போல் ஆபிஸராக நடித்திருக்கும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், முதல் படத்திலேயே நடிப்பில் மிரட்டியிருக்கிறார். ஏதோ பல படங்களில் நடித்தவர் போன்று எக்ஸ்பிரஷன் உள்ளிட்ட அனைத்தையும் மிக நேர்த்தியாக கொடுத்திருப்பவர் இனி நடிகராக பிஸியாவது உறுதி.
காமெடிக்காக சேர்க்கப்பட்டிருக்கும் ரோபோ சங்கர், வழக்கம் போல் காமெடி என்ற பெயரில் மொக்கை போடுகிறார்.
ஒளிப்பதிவாளர் புவன் ஸ்ரீனிவாசன் காட்சிகளை பிரம்மாண்டமாக படமாகியிருக்கிறார். விக்ரமின் வித்தியாசமான கெட்டப்புகள் மற்றும் அதை காட்டிய விதம் சிறப்பாக உள்ளது. முழு படமே ஏதோ ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருந்தாலும், சில இடங்களில் எதிர்ப்பார்த்த அளவு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாக நகர்த்தி செல்லும் இயக்குநர் அஜய் ஞானமுத்து, புத்திசாலித்தனமான திரைக்கதை மூலம் நம்மை சீட் நுணியில் உட்கார வைக்கிறார்.
கதைக்காக பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் இயக்குநர் அஜய் ஞானமுத்து மேக்கிங்கிலும் அதிகம் மெனக்கெட்டிருப்பது படம் முழுவதும் தெரிகிறது.
படத்தின் நீளம் சிறிது பலவீனமாக இருந்தாலும், ஆக்ஷன் காட்சிகள் மற்றும் இண்டர்போலிடம் இருந்து விக்ரம் தப்பிக்கும் காட்சிகள் போன்றவற்றால் அந்த குறையும் காணாமல் போய்விடுகிறது.
மொத்தத்தில், ‘கோப்ரா’ விக்ரமை மீண்டும் கிங் என்று நிரூபித்திருக்கிறது.
ரேட்டிங் 4/5