காக்டெய்ல் விமர்சனம்
Casting : Yogi Babu, Mime Gopi, Rashmi Gopinath, Swaminathan
Directed By : Vijaya Murugan
Music By : Sai Bhaskar
Produced By : PG Muthaiah
யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து நேரடியாக ஒடிடி-யில் வெளியாகியிருக்கும் ‘காக்டெய்ல்’ எப்படி என்று பார்ப்போம்.
விலை மதிப்பற்ற பழங்காலத்து முருக கடவுள் சிலை ஒன்று காணாமல் போகிறது. அதை கண்டுபிடிக்கும் பணியில் காவல் துறை இறங்குகிறது. மறுபக்கம், யோகி பாபு தனது நண்பர்களுடன் ரூமில் சரக்கடித்து மட்டையாக, மறுநாள் அவர்களது அறையில் பெண் பிணம் ஒன்று இருக்கிறது. அந்த பிணத்தை அப்புறப்படுத்த யோகி பாபு தனது நண்பர்களுடன் சேர்ந்து முயற்சிக்க, காணாமல் போன முருகன் சிலைக்கும், அந்த பெண் பிணத்துக்கும் உள்ள தொடர்பும், அந்த பிணம் யோகி பாபு அறைக்குள் எப்படி வந்தது, அதன் பின்னணி என்ன, என்பது தான் படத்தின் மீதிக்கதை.
யோகி பாபு வந்து நின்றாலே சிரிக்கும் ரசிகர்கள், இந்த படத்தில் அவர் எது செய்தாலும், சிரிக்க மாட்டோம், என்று அடம் பிடிக்கிறார்கள். யோகி பாபுவும் சளிக்காமல், தனது பழைய கடி ஜோக்குகளை, மெண்ணு துப்பிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில், யோகி பாபுவையே கடித்து திண்ணும் அளவுக்கு ரசிகர்கள் கோபமடைந்து விடுகிறார்கள்.
பிறகு, விஜய் டிவி பிரபலங்கள் சிலர் தங்களது நகைச்சுவை மூலம் ரசிகர்களை ஆறுதலடைய செய்தாலும், அவர்கள் மேகி நூடுல்ஸ் போல 2 நிமிடம் மட்டுமே காமெடி செய்வதால், அங்கேயும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
ஷாயாஜி ஷிண்டே, மைம் கோபி, ராஷ்மி கோபிநாத், சுவாமிநாதன் உள்ளிட்ட படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தாலும், படம் முழுவதும் காமெடிக் காட்சிகளுக்கு பற்றாக்குறை இருக்கிறது.
படத்தில் கடி ஜோக்குகள் இருக்கலாம், ஆனால் ஒரு படத்தையே கடி ஜோக்காக இயக்குநர் விஜய முருகன் இயக்கியிருப்பது, படம் பார்ப்பவர்களை கட்டி வைத்து கடிப்பது போல இருக்கிறது.
ஒளிப்பதிவு, இசை என அனைத்திலும் பட்ஜெட்டின் பற்றாக்குறை தெரிகிறது. யோகி பாபுவின் கல்ஷீட் மட்டும் போதும், என்று முடிவு செய்த தயாரிப்பாளர், அவரை மட்டுமே நம்பி படத்தை எடுத்திருக்கிறார். ஆனால், அவரது நம்பிக்கையை யோகி பாபு வீணடிக்கும் விதமாக சொதப்பியிருக்கிறார்.
மொத்தத்தில், சாதாரண தண்ணீரை காக்டெய்ல் என ஏமாற்றியிருக்கிறார்கள்.
ரேட்டிங் 2/5