’காபி வித் காதல்’ திரைப்பட விமர்சனம்

Casting : Jiiva, Jai, Srikanth, Malvika Sharma, Amritha Aiyer, Raiza Wilson, Aishwarya Dutta, Samyuktha, Shanmuganathan, Dhivyadharshini
Directed By : Sundar C.
Music By : Yuvan Shankar Raja
Produced By : Khushbu, A.C.S.Arun Kumar, A.C.Shanmugam
மூத்த அண்ணன் ஸ்ரீகாந்துக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. ஆனாலும் அவர் மனைவியை கவனிக்காமல் மாடன் பெண்கள் மீது மோகம் கொண்டிருக்கிறார். இவரது தம்பியான ஜீவா பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றுவதோடு, அங்கேயே திருமணம் செய்துகொள்ளாமல் ஐஸ்வர்யா தத்தாவுடன் குடும்பம் நடத்துகிறார். இளைய தம்பியான ஜெய், ஊட்டியில் ஓட்டல் வைக்கும் முயற்சியில் இருக்கிறார். அவரது சிறுவயது தோழி அமிர்தா ஐயர் அவரை ஒரு பக்கமாக காதலிக்க, ஜெய் அவரை வெறும் தோழியாகவே பார்ப்பதோடு, மாளவிகா சர்மாவை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார். இந்த மூன்று சகோதர்களுக்கும் பாலமாக இருக்கும் தங்கை டிடி, கர்ப்பமாக இருக்கிறார். அவரது கணவர் வானில் பறந்துக்கொண்டிருக்கிறார்.
இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை இருந்தாலும் அனைவரும் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வசிக்க, இவர்களுடைய வாழ்க்கையில் இருக்கும் காதல் மற்றும் திருமண ஏற்பாட்டால் மிகப்பெரிய குழப்பமும் சிக்கலும் ஏற்படுத்துகிறது. அத்தனை பேருடைய வாழ்க்கையும் கேள்விக்குரியாக்கும் அந்த சிக்கலும், குழப்பமும் என்ன? அதில் இருந்து இந்த குடும்பத்தார் மீண்டு வந்தார்களா? இல்லையா? என்பதை கலகலப்பாகவும், கசமுசா சமாச்சாரத்தோடும் சொல்வது தான் ‘காபி வித் காதல்’.
சுந்தர்.சி-யின் படங்களில் நட்சத்திர பட்டாளத்துக்கு பஞ்சமே இருக்காது. அதே போல தான் இந்த படத்திலும் ஏகப்பட்ட நட்சத்திரங்கள். ஆனால், அனைவரையும் கதைக்கு முக்கியம் வாய்ந்தவர்களாக பயன்படுத்தியிருப்பதோடு, சரியான முறையிலும் பயன்படுத்தி படத்தை காமெடியாக நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.
ஸ்ரீகாந்த் மூத்த சகோதரர் வேடத்தில் நடித்திருந்தாலும் ரோஜா கூட்டத்தில் பார்த்த அதே இளமையோடு இருக்கிறார். மனைவியை கண்டுக்கொள்ளாமல் ரைசா வில்சன் பின்னாள் சுற்றும் ஸ்ரீகாந்த், அதே ரைசா வில்சன் தனது தம்பிக்கு மனைவியாக போகிறாள், என்பதை அறிந்ததும் பதறும் காட்சிகள் கொஞ்சம் ஓவராக இருந்தாலும், காமெடியாக இருக்கிறது.
இளைய சகோதரராக நடித்திருக்கும் ஜீவா, தனது வேடத்தில் எந்தவித குறையும் இல்லாமல் நடித்திருக்கிறார். தம்பிக்கு பார்த்த பெண் மீது அவருக்கு காதல் வருவதும், பிறகு சூழ்நிலையை புரிந்துக்கொண்டு விலகி போகும் காட்சிகளில் நடிப்பில் கவனம் பெறுகிறார்.
கடைசி பிள்ளையாக நடித்திருக்கும் ஜெய், வேடத்திற்கு ஏற்றவாறு ஜாலியாக நடித்திருக்கிறார். முதலில் ஓட்டல் வைப்பதற்காக திருமணத்திற்கு ஒகே சொல்பவர், பிறகு உண்மையான காதல் பற்றி புரிந்துக்கொண்டு தவிப்பதும், அதற்காக செய்யும் முட்டாள்தனமான விஷயங்கள் காமெடியாக இருக்கிறது.
கதாநாயகிகளாக நடித்திருக்கும் மாளவிகா சர்மா மற்றும் அம்ரிதா ஐயர், கமர்ஷியல் படங்களுக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள். காதல், காமெடி, ஆட்டம், பாட்டம் என்று அவர்கள் படம் முழுவதும் வருகிறார்கள்.
காமெடி காட்சிகளை கையில் எடுத்தியிருக்கும் யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி வரும் காட்சிகள் அனைத்தும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. ஆனால், பல கெட்டப்புகளில் வரும் யோகி பாபு, கெட்டப்பின் எண்ணிக்கையை விட காமெடி காட்சிகளை குறைவாகவே கொடுத்திருக்கிறார்.
ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடித்திருக்கும் சம்யுக்தா, கதாபாத்திரத்திற்கு ஏற்ற வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். மூன்று சகோதர்களின் தங்கையாக நடித்திருக்கும் டிடி-யின் நடிப்பு அளவு. ரைசா வில்சன், பிரதாப் போத்தன் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் பொருத்தமான தேர்வு.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. பாடல்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தாலும், படம் முடிந்த பிறகு வரும் “ரம்பம்பம்...ஆரம்பம்...” பாடல்கள் ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஈ.கிருஷ்ணசாமி காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். சில இடங்களில் கதாநாயகிகளை விட கதாநாயகர்களை கவர்ச்சியாகவும், கலர்புல்லாகவும் காட்டியிருப்பவர் முழு படத்தையும் அழகாக படமாக்கியிருக்கிறார்.
குழப்பமான காதல் கதை, கலாட்டா நிறைந்த திருமண ஏற்பாடு, இரண்டையும் ஒரே கதையில் சொல்வதோடு, அதை பலவித திருப்புமுனைகளோடு சொல்ல வேண்டும் என்பதற்காக படத்தொகுப்பாளர் ஃபென்னி ஆலிவர், பல யுக்திகளை கையாண்டுள்ளார். அதில் சில எடுபட்டாலும், சில எரிச்சலைடைய செய்கிறது.
எந்த விஷயத்தை எப்படி சொன்னாலும், இறுதியில் அவை ரசிகர்களுக்கு பிடித்தது போல் சொல்வதில் இயக்குநர் சுந்தர்.சி கெட்டிக்காரர். அப்படிதான் இந்த படத்திலும் சர்ச்சையான சில சம்பவங்களை கையில் எடுத்துக்கொண்டாலும் இறுதியில் அதை ரசிகர்களுக்கு பிடித்தது போல் சொல்லியிருக்கிறார்.
மகிழ்ச்சியான குடும்பத்தில் காதல் மற்றும் கல்யாணம் இரண்டினாலும் பெரும் குழப்பம் ஏற்படுவதை, தனது வழக்கமான காமெடி பாணியோடு சொல்வதோடு, கையாண்டிருக்கும் இயக்குநர் சுந்தர்.சி, அந்த காட்சிகளை மிக கவனமாக கையாண்டு, ரசிகர்களை சிரிக்கும்படியும், ரசிக்கும்படியும் படத்தை இயக்கியிருக்கிறார்.
காதலால் பிரச்சனையும், திருமணத்தால் குழப்பமும் ஏற்படுவதுண்டு. ஆனால், இவை அனைத்தும் ஒரே குடும்பத்தில் உள்ளவர்களால் ஏற்பட்டால், அது எப்படி இருக்கும்? என்ற சுந்தர்.சி-யின் கற்பனைக்கு ஏ.மகாகீர்த்தி மற்றும் நரு நாராயணன் ஆகியோரின் திரைக்கதையும், கே.செல்வபாரதியின் வசனமும் பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில், ‘காபி வித் காதல்’ கலர்புல்லான காமெடி எக்ஸ்பிரஸ்.
ரேட்டிங் 3.5/5