’கஸ்டடி’ திரைப்பட விமர்சனம்
Casting : Naga Chaitanya, Kirti Shetty, Aravindsamy, Sarathkumar, Sampath, Ramki, Premji, Jayaprakash
Directed By : Venkat Prabhu
Music By : Ilayaraja and Yuvan Shankar Raja
Produced By : Srinivasaa Silver Screens - Pawan Kumar
ஆந்திராவில் உள்ள சிறிய ஊரில் இருக்கும் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றும் நாக சைதன்யா, இரவு ரோந்து செல்லும் போது, குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய அரவிந்த்சாமியையும், சம்பத்தையும் கைது செய்து காவல் நிலைய சிறையில் அடைக்கிறார். பிறகு சிபிஐ அதிகாரியான சம்பத், ரவுடி அரவிந்த்சாமியை கைது செய்து அழைத்து செல்லும் உண்மையை நாக சைதன்யா தெரிந்துக் கொள்கிறார். இதற்கிடையே, ரவுடி அரவிந்த்சாமியை தேடி வரும் காவல்துறை உயர் அதிகாரி, அங்கிருக்கும் சிபிஐ அதிகாரி சம்பத்தையும் சேர்த்து கொலை செய்ய முயற்சிக்கிறார். அவர்களை காப்பாற்றும் நாக சைதன்யா, இது சாதாரண விவகாரம் அல்ல, முதலமைச்சர் தொடர்புடைய விவகாரம் என்பதை தெரிந்துக்கொள்வதோடு, என்ன நடந்தாலும், அரவிந்த்சாமியையும், சம்பத்தையும் எப்படியாவது காப்பாற்றுவதோடு, பெங்களூர் நீதிமன்றத்தில் அரவிந்த்சாமியை ஆஜர் படுத்தும் முயற்சியில் இறங்க, அதில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா?. அரவிந்த்சாமியின் பின்னணியில் இருக்கும் பிரச்சனை என்ன?, என்பதை ஓட...ஓட...சொல்வது தான் ‘கஸ்டடி’-யின் மீதிக்கதை.
நாக சைதன்யா நடிக்கும் முதல் தமிழ்ப் படம், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் முதல் தெலுங்குப் படம், என்ற அறிவிப்போடு உருவான இப்படம், முழுக்க முழுக்க தெலுங்குப் படமாக மட்டுமே இருக்கிறது. அதிலும் நாக சைதன்யாவை தமிழ் ரசிகர்கள் நிச்சயம் ஹீரோவாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இருந்தாலும், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்காக கடுமையாக உழைத்திருக்கும் நாக சைதன்யா போலீஸ் வேடத்தை விட, பிளாஷ்பேக்கில் அதிகமான முடி மற்றும் தாடியுடன் வரும் போது மட்டும் சற்று கவனம் பெறுகிறார். அதிலும் ஒரு இடத்தில் உதயம் நாகர்ஜுனாவையும் நினைவுப்படுத்தும்படி வருகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் கிர்த்தி ஷெட்டி, நாக சைதன்யாவை காதலிக்கும் வேலையை மட்டும் செய்யாமல், அவருடன் ஓடும் வேலையையும் செய்திருக்கிறார். கிர்த்தி ஷெட்டியின் காதல் காட்சிகள் சில ரசிக்க வைத்தாலும், பல காட்சிகள் படத்தை தொய்வடைய செய்கிறது.
ஆக்ஷன், காமெடி, காதல் என அனைத்து ஏரியாவையும் கவர் செய்திருக்கும் அரவிந்த்சாமி, அரசியல் ரவுடியாக நடித்திருப்பதோடு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல் அளிக்கும் வகையிலும் வலம் வருகிறார்.
போலீஸ் ஐஜி வேடத்தில் நடித்திருக்கும் சரத்குமார் முதலமைச்சருக்காக அரவிந்த்சாமியை கொலை செய்ய அடியாள் அளவுக்கு இறங்கி துரத்துகிறார். படத்தின் இறுதிக்காட்சி வரை துரத்தல் வேலையை செய்துக் கொண்டிருக்கும் சரத்குமார், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
முதலமைச்சர் வேடத்தில் நடித்திருக்கும்பிரியா மணி, கம்பீரமான நடிப்பு மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
சேசிங் காட்சிகளையும், ஆக்ஷன் காட்சிகளை அமர்க்களமாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் கதிர், ஆக்ஷன் காட்சிகளுக்காக மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருப்பது திரையில் தெரிகிறது.
இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
சாதாரண கருவை கூட ரசிக்கும்படி திரைக்கதை அமைத்து இயக்கி மேஜிக் நிகழ்த்தும் வெங்கட் பிரபு, ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
மங்காத்தா மற்றும் மாநாடு என்ற தனது வெற்றிப் படங்களின் பாதிப்பாக இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியிருக்கும் வெங்கட் பிரபு, சரக்கு இல்லாமல் பல இடங்களில் தடுமாறியிருப்பது தெரிகிறது. அதிலும், இரண்டாம் பாதி முழுவதும் வரும் சேசிங் காட்சிகள் எந்தவித சஸ்பென்ஸும் இல்லாமல் பயணிப்பது படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்திருக்கிறது.
சில காதல் காட்சிகளும், சில ஆக்ஷன் காட்சிகளும் அவ்வபோது நம்மை நிமிர்ந்து உட்கார செய்தாலும், அவை சிறிது நேரமே நீடிக்கிறது. அதன் பிறகு வழக்கம் போல் நாக சைதன்யாவும், அரவிந்த்சாமியும் ஓட, அவர்களை விரட்டி பிடிக்கும் சரத்குமார் சுற்றி வளைக்க, அவரிடம் இருந்து இருவரும் தப்பிக்க, மீண்டும் அவர்களை சரத்குமார் சுற்றி வளைக்க, இப்படியே இரண்டாம் பாதி முழுவதும் பயணித்து, படம் பார்ப்பவர்களை சோர்வடைய செய்துவிடுகிறது.
இறுதியாக, தர்மம் நிச்சயம் வெல்லும் ஆனால் கொஞ்சம் தாமதமாகும், என்ற ரீதியில் படத்தை முடித்திருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு, திருப்பங்கள் இல்லாத திரைக்கதை, சுவாரஸ்யம் இல்லாத காட்சிகள் மூலம் தன் மீது நம்பிக்கை வைத்த ரசிகர்களை ஏமாற்றி விட்டார்.
மொத்தத்தில், ‘கஸ்டடி’ ரசிகர்களுக்கு பெரிய கஷ்ட்டத்தை கொடுக்கிறது.
ரேட்டிங் 2.5/5