Feb 01, 2020 05:50 AM

‘டகால்டி’ விமர்சனம்

47395ad4b89388b0b0ebf5743536950f.jpg

Casting : Santhanam, Rithika Sen, Yogi Babu, Radha Ravi, Dharun Arora

Directed By : Vijay Anand

Music By : Vijaya Narayanan

Produced By : 18 Reels, Handmade Films

 

மும்பையில் இருக்கும் சந்தானம், சிறு சிறு தவறுகளை செய்து வர, மும்பை தாதா ராதாரவியிடம் இருந்து தப்பிப்பதற்காக, தனக்கு தெரியாத ஒரு பெண்ணை தெரியும் என்று கூறுவதோடு, அவளை கடத்தி வருவதாக ஒப்புக் கொள்கிறார். அந்த பெண் எங்கே இருக்கிறார், என்றே தெரியாத சந்தானம், அந்த பெண்ணை தேடி பிடித்து, வில்லனிடம் ஒப்படைத்தாரா, இல்லையா, அதன் நடுவே நடந்தது என்ன, என்பது தான் கதை.

 

விசித்திரமான மெல்லிய கருவை சுவாரஸ்யமான திரைக்கதையோடு முழுநீள திரைப்படமாக்கியிருக்கும் இயக்குநர் விஜய் ஆனந்த், அதில் எப்படி காமெடியை பயன்படுத்த வேண்டும் என்பதை கச்சிதமாக கையாண்டிருக்கிறார்.

 

படத்திற்கு படம் நடிப்பில் மெருகேறும் சந்தானம், காமெடியை கடந்து நடிப்பு மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்துகிறார்.

 

வெகுளித்தனமான நடிப்பால் ரசிகர்களை ஈர்க்கும் ஹீரோயின் ரித்திகா சென், ஷாருக்கானை ஹீரோவாக வைத்து கதை சொல்லி நம்மை சொக்க வைத்துவிடுகிறார். அதே சமயம், தமிழ்ப் படங்களில் இதுவரை காட்டப்பட்ட மக்கான ஹீரோயின்களில் அம்மணிக்கு தான் முதலிடம்.

 

வில்லன் தருண் அரோராவின் விசித்திரமான ஆசை தான் படத்தின் கரு. அந்த விசித்திரமான ஆசையை வெளிப்படுத்துவதில் தருண் பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார்.

 

காமெடியில் ஒத்த ஆளாக கெத்து காட்டும் சந்தானத்துடன் யோகி பாபு இணையும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக இருக்கிறது. தனது பாணியில் டைமிங் கவுண்டர் சொல்லி சிரிக்க வைக்கும் யோகி பாபு, சந்தானத்திடம் மொக்கை வாங்கும் போது, “எனக்கும் இப்படி எல்லாம் பேச தெரியும்..” என்று கூறி ரசிகர்களிடம் கைதட்டலும் வாங்கிவிடுகிறார்.

 

Santhanam and Yogi Babu

 

ராதாரவி, பிரம்மானந்தம், நமோ நாராயணா என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அளவான நடிப்புடன் காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

தீபக்குமார் பாரதியின் ஒளிப்பதிவு காட்சிகளை பிரம்மாண்டமாக காட்டியிருப்பதோடு, படத்தின் பெட்ஜெட் பெருசு என்பதையும் திரையில் காட்டியிருக்கிறது.

 

விஜய நாரயணனின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு பயணிக்கிறது.

 

சந்தானத்தை முழுவதுமாக காமெடி ஹீரோவாக காட்டாமல், அவர் எங்கு காமெடி செய்ய வேண்டும், அதே சமயம், அவர் எங்கு ஹீரோயிஷத்தை காட்ட வேண்டும், என்பதை சரியான அளவுகோலில் இயக்குநர் கொடுத்திருக்கிறார். 

 

படத்தின் ஆரம்பத்தில் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் இயக்குநர், அதன் பிறகு சந்தானம், ஹீரோயின் போர்ஷனை, சீரியஸாக அதே சமயம் சிறு சிறு காமெடியுடன் நகர்த்திச் செல்பவர், இறுதியில் மீண்டும் நம்மை காமெடியில் நனைய வைத்துவிடுகிறார்.

 

படத்தின் பெரும்பாலான காட்சிகள் பயணக் காட்சிகளாக இருப்பதும், சந்தானம், ரித்திகா சென் இடையிலான காதலை அழுத்தமாக சொல்லாததும் படத்திற்கு சற்று பலவீனமாக இருந்தாலும், அதை சந்தானத்தின் காமெடியும், க்ளைமாக்ஸுக்கு முன்பு வரும் ஆள் மாறாட்ட காமெடியும் சரி செய்துவிடுகிறது.

 

மொத்தத்தில், சந்தானத்திற்காகவே படம் பார்க்கலாம் என்ற நிலையில், இந்த ‘டகால்டி’ யில் சந்தானம், யோகி பாபு கூட்டணி இருப்பதால் ஒரு முறை அல்ல, இரண்டு முறை கூட பார்க்கலாம்.

 

ரேட்டிங் 3.5/5