Jan 09, 2020 08:36 AM

‘தர்பார்’ விமர்சனம்

a08e39cd0fd98dde49cf1d039a0f3982.jpg

Casting : Rajinikanth, Nayanthara, Sunil Shetty, Nivetha Thomas, Yogi Babu

Directed By : AR Murugadass

Music By : Aniruth

Produced By : Lyca Productions -Subashkaran

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதல் முறையாக நடித்திருப்பதோடு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு போலீஸ் வேடத்தில் நடித்திருப்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ‘தர்பார்’ எப்படி இருக்கிறது, விமர்சனத்தை பார்ப்போம்.

 

மும்பை சிட்டி போலீஸ் கமிஷ்னரான ரஜினிகாந்த், பார்த்த இடத்திலேயே சுட்டுத் தள்ளுவது, வெட்டி வீழ்த்துவது என்று வெறிப்பிடித்தவர் போல ரவுடிகளை வேட்டையாடுகிறார். இதனால், மனித உரிமை கமிஷன் ரஜினி மீது நடவடிக்கை எடுக்க அவர்களையும் துப்பாக்கி முனையில் மிரட்டும் ரஜினியின் அதிரடியைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைய, அவரது மகள் நிவேதா தாமாஸ் இறந்ததில் இருந்து தான், அவர் இப்படி மாறியதும், தனது மகள் கொலைக்கு பின்னால் இருக்கும் ரவுடியை தேடி தான், இந்த வெறித்தன வேட்டையை நடத்துகிறார், என்பது தெரிய வருகிறது. அவரது மகள் நிவேதா தாமாஸ் எப்படி இறந்தார், அவரது கொலைக்கு பின்னால் இருக்கும் ரவுடி யார், அவரை ரஜினி கண்டுபிடித்து பழி தீர்த்தாரா, இல்லையா என்பது தான் படத்தின் கதை.

 

நாட்டில் நடந்த பல்வேறு குற்றங்களை, குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களை மையக் கருவாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி என்ற மாபெரும் மாஸ் நடிகருக்கு ஏற்ற காட்சிகளுடன் ரஜினி ரசிகர்கள் மட்டும் இன்றி, சினிமாவை பொழுதுபோக்காக பார்க்கும் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஏற்ற மாஸ் பொழுதுபோக்கு படமாக இப்படத்தை கொடுத்திருக்கிறார்.

 

ஆதித்ய அருணாச்சலம் என்ற வேடத்தில் மும்பை போலீஸ் கமிஷ்னராக தனது துள்ளல் மற்றும் ஸ்டைலான நடிப்பு மூலம் ரசிகர்களை குஷிப்படுத்தும் ரஜினிகாந்த், தனது வயதுக்கு ஏற்றவாறும் கதாப்பாத்திரத்தை கையாண்டிருக்கிறார். குறிப்பாக தனது ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்கிறாரோ, அதை விட அதிகமாக பேமிலி ஆடியன்ஸையும் கவரும் விதத்தில் ரொம்ப டீசண்டாக நடித்திருக்கிறார். அதிலும், சின்ன சின்ன எக்ஸ்பிரஸன்கள் மற்றும் நயன்தாராவிடம் முதல் முறையாக பேச முயற்சிக்கும் காட்சிகளில் எல்லாம், காமெடியில் யோகி பாபுவையே மிஞ்சி விடுகிறார்.

 

கதைக்கு தேவை இல்லை என்றாலும், காட்சிகளின் தேவைக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் நயன்தாரா, பட்டை தீட்டிய வைரம் போல ஜொலிக்கிறார். நயன், அவரும் காட்சிகள் குறைவு தான் என்றாலும், அந்த குறைவான காட்சிகளின் மூலமாகவே நம் மனதுக்குள் இறங்கி இம்சை செய்கிறார்.

 

Darbar Movie Review

 

ரஜினி மகளாக நடித்திருக்கும் நிவேதா தாமாஸ், செண்டிமெண்ட் காட்சிகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் சிறப்பான பங்காற்றியிருக்கிறார். 

 

யோகி பாபுவின் நகைச்சுவை பல இடங்களில் சிரிக்க வைக்கிறது. அதிலும் காமெடி என்ற பெயரில், வாய்க்கு வந்ததை எல்லாம் தாறுமாறாக பேசி கடுப்பேற்றாமல், அடக்கி வாசித்திருக்கும் யோகி பாபுவின் டைமிங் வசனங்கள் அனைத்தும் சிரிப்பு வெடிதான். கிடைக்கும் கேப்பில் எல்லாம் ரஜினியை கலாய்க்க, அதற்கு அவர் “உன்ன வச்சிக்கிறேன்...” என்று சொல்லும் இடங்களில் எல்லாம், தியேட்டரே அதிர்கிறது.

 

வில்லனாக நடித்திருக்கும் சுனில் ஷெட்டி, தனது வேலையை கச்சிதமாக செய்திருந்தாலும், அவரது வேலை ரசிகர்களை கவரும் விதத்தில் இல்லை. அதே சமயம், அவரது கதாப்பாத்திரம் அறிமுகமானவுடன் படத்தின் ட்விஸ்ட்டே உடைந்து விடுவதால், வில்லன் வேடம் பலம் இல்லாமல் போய்விடுகிறது.

 

அனிருத்தின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகமாகவும், பின்னணி இசை மாஸாகவும் இருக்கிறது. சில இடங்களில் ‘பேட்ட’ படத்தை நினைவுப்படுத்துவது போலவும் இசை அமைந்திருக்கிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாக இருப்பதோடு, கதாப்பாத்திரங்களும் அழகாக இருக்கிறார்கள். குறிப்பாக ரஜினியை ரொம்ப இளமையாக காட்டியிருக்கிறார்.

 

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு மரணம் தான் சரியான தண்டனை, என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி என்ற மாஸான ஹீரோ மூலம் ஸ்டைலாகவும், பொழுதுபோக்காகவும், அதே சமயம் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்.

 

ரஜினி என்றால் மாஸ் மற்றும் ஸ்டைல், அதை ரசிகர்களிடம் எப்படி சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும், என்பதில் மிக கவனமாக இருந்திருக்கும் இயக்குநர், படத்தின் முதல் பாதியை ரஜினி ரசிகர்களுடன் அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில், எண்டர்டெயின்மெண்டாக நகர்த்தி சென்றாலும், இரண்டாம் பாதியில் மெயின் வில்லன் எண்ட்ரிக்குப் பிறகு சற்று தடுமாறியிருக்கிறார்.

 

பொதுவாக ஏ.ஆர்.முருகதாஸ் படங்களில் ஹீரோவுக்கு நிகராக வில்லன் கதாப்பாத்திரம் இருப்பதோடு, ஹீரோவை எப்படி ரசிக்கிறோமோ அதுபோல் வில்லனையும் ரசிப்போம். ஆனால், இதில் சுனில் ஷெட்டி அப்படி ஒரு வில்லனாக இல்லாமல் போனது பெரும் ஏமாற்றமாக இருக்கிறது.

 

இருந்தாலும், படத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டும், பண்டிகைக்கான ஒரு படமாக இருக்க வேண்டும், குறிப்பாக பேமிலி ஆடியன்ஸுக்கான படமாக இருக்க வேண்டும் என்பதில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். அதனால், மும்பை சிட்டியை கதைக்களமாக வைத்தாலும், வன்முறை இல்லாமல் காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்.

 

ரஜினிகாந்தின் மகளின் கொலையை கூட வன்முறை காட்சியாக காட்டியிருக்கலாம், ஆனால் அதை தவிர்த்துவிட்டு, ரசிகர்கள் மனதை செண்டிமெண்டாக டச் செய்ய வேண்டும், என்ற நோக்கத்தில், அந்த காட்சியை அப்பா-மகள் இடையே இருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் காட்சியாக ஏ.ஆர்.முருகதாஸ் வடிவமைத்திருக்கிறார்.

 

சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சம் என்றாலும், அதில் சமூகத்திற்கு தேவையானதை பாடமாக அல்லாமல், அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியான நல்ல கமர்ஷியல் படமாக கொடுக்கலாம் என்பதை தொடர்ந்து நிரூபித்து வரும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இந்த முறையும் அதை நிரூபித்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ரஜினிகாந்தை மீண்டும் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கும் இந்த ‘தர்பார்’, பண்டிகை காலங்களில் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஃபர்பெக்ட்டான பொழுதுபோக்கு படமாகவும் இருக்கிறது.

 

ரேட்டிங் 3.5/5