Oct 24, 2024 01:03 PM

‘தீபாவளி போனஸ்’ திரைப்பட விமர்சனம்

5b56f0f4bb0e84faba3f0a95d7232eca.jpg

Casting : Vikranth, Riythvika, Harish

Directed By : Jayabal.J

Music By : Maria Jerald

Produced By : Sri Ankali Parameswari Production - Deepak Kumar Tala

 

மதுரை மாவட்டத்தில் உள்ள நிலையூர் என்ற கிராமத்தில் மனைவி மற்றும் ஒரு பிள்ளையோடு வசிக்கும் நாயகன் விக்ராந்த், கொரியர் நிறுவனம் ஒன்றில் டெலிவரி மேனாக வேலை செய்கிறார். தீபாவளி பண்டிகையை கொண்டாட அனைவரும் தயாரகிக் கொண்டிருக்கும் நிலையில், மகனின் நீண்ட நாள் விருப்பமான போலீஸ் உடை, மனைவி விரும்பிய சேலை, பட்டாசு, பலகாரத்திற்கான செலவு என்று வருடத்தின் ஒரு நாளிலாவது தனது குடும்பத்தினர் விரும்புவதை செய்துவிட வேண்டும் என்று நினைக்கும் விக்ராந்த், அதற்காக தனது நிறுவனத்தின் தீபாவளி போனஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். 

 

ஆனால், அவர் எதிர்பார்த்தது நடக்காமல் போக, குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காக வேறு சில முயற்சிகளில் ஈடுபடுகிறார். அந்த முயற்சி அவரை எதிர்பார்க்காத சிக்கலில் சிக்க வைத்துவிடுகிறது.  அதில் இருந்து விக்ராந்த் மீண்டாரா?, குடும்பத்தாருடன் தீபாவளியை கொண்டாடினரா? என்பதை எளிய மக்களின் எதார்த்தமான வாழ்வியலாகவும், பண்டிகை கால கொண்டாட்டமாகவும் சொல்வதே ‘தீபாவளி போனஸ்’.

 

நாயகனாக நடித்திருக்கும் விக்ராந்த், தனது உரிமையை கூட சத்தமாக கேட்காத சாதுவான கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். தன் பிள்ளை ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுக்க முடியாத தனது இயலாமையை நினைத்து அவர் கலங்கும் காட்சிகளிலும், தன் மகனுக்காக காலணி வியாபாரியிடம் கெஞ்சும் காட்சிகளிலும், அப்பாக்களை கண்கலங்க வைத்துவிடுகிறார்.

 

வரவுக்கு ஏற்ப குடும்பம் நடத்தும் மனைவி வேடத்தில் நடித்திருக்கும் ரித்விகா, வழக்கும் போல் தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் எளிய மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்திருக்கிறார். கணவருக்கு எப்படியாவது புதிய தலைக்கவசம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் அவர்ம், அது நடக்காமல் போகும் போது தனது ஏமாற்றத்தை தன் கண்கள் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

விக்ராந்த் - ரித்விகா தம்பதியின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் ஹரிஷ், புத்தாடை கிடைக்குமா? என்ற தனது ஏக்கத்தை தன் சோர்வடைந்த முகத்தின் மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். விக்ராந்த் மற்றும் ரித்விகாவுக்கு இணையாக பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்க்கிறார்.

 

இசையமைப்பாளர் மரிய ஜெரால்டு இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்திருக்கிறது. மகிழ்ச்சி, சோகம், வலி ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கும் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

கதைக்களம் மதுரை மாவட்டமாக இருந்தாலும், மதுரைக்கான முக்கிய அடையாளங்களை தவிர்த்திருக்கும் ஒளிப்பதிவாளர் கெளதம் சேதுராமன், இதுவரை நாம் பார்த்திராத மதுரைப் பகுதிகளில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். குறிப்பாக திருப்பரங்குன்றம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை காட்சிப்படுத்திய விதம் கவனம் ஈர்க்கிறது. அதிலும், அந்த இரவு நேரத்தில் மொத்த ஊரையும் விளக்குகளின் வெளிச்சத்தில் காட்டும் போது, அதனுள் விளக்கு ஒளியோடு பயணிக்கும் ரயில் காட்சி, செம.

 

படத்தொகுப்பாளர் பார்த்திவ் முருகனின் பணியிலும் குறையில்லை. கலை இயக்குநர் ஆர்ட் அருண், சில அங்காடித் தெருக்களை செயற்கையாக உருவாக்கியிருப்பது தெரிந்தாலும், பட்ஜெட்டுக்கு ஏற்ப நேர்த்தியாக செய்திருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் ஜெயபால்.ஜெ, எளிய மக்களின் வாழ்வியலை மிக எதார்த்தமான சினிமாவாக மட்டும் இன்றி, அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு படைப்பாகவும் கொடுத்திருக்கிறார்.

 

வருடம் முழுவதும் உழைத்துக் கொண்டிருந்தாலும், வறுமை நிலை மாறாமல் இருக்கும் எளிய மக்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் கூட தங்களது சிறு சிறு ஆசைகளை நிறைவேற்றுவதற்காக எத்தகைய போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது, என்பதை நேர்த்தியாக மட்டும் இன்றி பார்வையாளர்களின் மனதுக்கு நெருக்கமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜெயபால்.ஜெ.

 

மிகப்பெரிய அளவில் சொல்லப்பட வேண்டிய கதைக்கருவாக இருந்தாலும், தனக்கு கிடைத்த பட்ஜெட்டில் அதை சிறப்பாக சொல்ல வேண்டும் என்ற முயற்சியில் இயக்குநர் சில தடைகளையும், தடுமாற்றங்களையும் சந்தித்திருப்பது திரையில் தெரிந்தாலும், கதாபாத்திரங்களின் திரை இருப்பு மற்றும் நடிப்பு அவற்றை மறந்துவிட்டு, கதையோடு நம்மை பயணிக்க வைத்துவிடுகிறது.

 

எளிய மக்களின் வாழ்வில் இருக்கும் எதிர்பார்ப்பு, ஏமாற்றம் மற்றும் சிக்கல்களை மிக சரியாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர், அதனுடன் இதுபோன்ற இக்கட்டான சூழல்கள் அவர்களது வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் விதைத்து பாராட்டு பெறுகிறார். 

 

மொத்தத்தில், ‘தீபாவளி போனஸ்’ எளிய மக்களின் தீபாவளி கொண்டாட்டம்.

 

ரேட்டிங் 3.5/5