Jun 01, 2019 04:56 PM

‘தேவி 2’ விமர்சனம்

4b31dbecd92738d95ef435f06fe589da.jpg

Casting : Prabhu Deva, Tamanna, Kovai Sarala, Nandhitha, Ajmal

Directed By : Vijay

Music By : Sam C. S.

Produced By : K. Ganesh, R. Ravindran

 

விஜய் இயக்கத்தில் பிரபு தேவா, தமன்னா நடிப்பில் வெற்றிப் பெற்ற ‘தேவி’ படத்தின் இரண்டம் பாகமான ‘தேவி பிளஸ் 2’ படம் எப்படி என்பதை பார்ப்போம்.

 

தேவி படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தின் தலைப்பான ‘தேவி பிளஸ் 2’-வுக்கு ஏற்றபடி இரண்டு பேய்களை இயக்குநர் விஜய் இறக்கியிருந்தாலும், அவைகள் பேய்களாக இல்லாமல் போனது தான் படத்திற்கான மிகப்பெரிய சறுக்கல்.

 

தேவியை பிடித்த ரூபா பேய் எங்கே மீண்டும் அவரை பிடித்துவிடுமோ என்ற பயத்தில், அவரை வெளியேவே அனுப்பாமல் வீட்டுக்குள் பொத்தி பொத்தி வைத்திருக்கிறார் பிரபு தேவா. ஆனால், அவர்களது 3 வயது குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக வெளியே போக வேண்டும், என்று தேவி கூற, உடனே சாமியாரிடம் பிரபு தேவா யோசனை கேட்க, அவரோ கடலால் சூழப்பட்ட இடத்தில் இருந்தால் ஆவிகள் வராது, என்று கூறுகிறார். உடனே தனது குழந்தையை தாத்தா, பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு மனைவி தமன்னாவை அழைத்துக் கொண்டு பிரபு தேவா மொரிசியஸ் செல்ல, அங்கே இருக்கும் இரண்டு பேய்கள் பிரபு தேவா உடலில் ஏற, பிறகு அவைகளால் ஏற்படும் பிரச்சினைகளும், அதில் இருந்து பிரபு தேவாவை தமன்னா எப்படி காப்பாற்றுகிறார், என்பதும் தான் படத்தின் மீதிக்கதை.

 

‘காஞ்சனா’ பட ரசிகர்களை டார்க்கெட் செய்வதற்காக காமெடி மசாலாவை தூக்கலாக போட முயற்சித்து, பேய்ப் படங்களுக்கே உண்டான திகில் என்ற அக்மார்க்கை பயன்படுத்த மறந்திருக்கும் இயக்குநர் விஜய், திரைக்கதையிலும், காட்சிகளிலும் பல சொதப்பல்களை செய்து, ரசிகர்களை ரொம்பவே சோதித்துவிடுகிறார்.

 

பிரபு தேவா கிருஷ்ணா என்ற வேடத்துடன் ரங்கா ரெட்டி மற்றும் அலெக்ஸ் என்ற இரண்டு பேய் கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தாலும், எந்த கதாபாத்திரமும் ரசிகர்களிடம் ஒட்டவில்லை. தமன்னாவுக்கு நடிப்பு வராது என்பதால், அவரை படு கிளாமராக காட்டியிருக்கிறார்கள். என்னதான் அவர் ஆடை குறைப்பில் தாரளம் காட்டினாலும், அவரை கவர்ச்சி உடையில் பார்க்கும் போதெல்லாம் ”சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. இருந்தாலும், நம்பிக்கை தளராமல் இயக்குநர் கொடுத்த கஞ்சிப் சைஸ் உடையை போட்டுக் கொண்டு தமன்னா போட்ட ஆட்டத்துக்கு நிச்சயம் கை தட்ட வேண்டும்.

 

வில்லனாக நடித்திருக்கும் அஜ்மல், நந்திதா என படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் சொத்தையாகவே இருக்க, கிளைமாக்ஸில் வரும் சோனு சூத்தின் எண்ட்ரி மட்டுமே படத்தில் ரசிக்கும்படியான ட்விஸ்ட்டாக இருக்கிறது. 

 

காமெடிக்காக கோவை சரளா இருந்தாலும், அதுபோன்ற எந்த சம்பவமும் படத்தில் இல்லை. படம் முழுவதும் வரும் இவராலேயே நம்மை சிரிக்க வைக்க முடியவில்லை என்றால், ஏதாவது ஒரு படத்தில் சிரிக்க வைக்கும் ஆர்.ஜே.பாலாஜியின் ஒரு சில காட்சிகள் மட்டும் என்ன சிரிக்கவா வைத்துவிடப் போகிறது, என்ற எண்ணத்துடனேயே படம் பார்த்த நம்மை, ஆர்.ஜே.பாலாஜி ஏமாற்றவில்லை.

 

தனது முதல் பேய் படமான தேவியை ரெகுலர் பார்மட்டை தவிர்த்து கவித்துவமாக எடுத்த இயக்குநர் விஜய், இரண்டாம் பாகத்தை ஓவர் கான்பிடண்டாக சொதப்பியிருக்கிறார். படத்தில் திகில் என்ற அம்சமே இல்லாமல் போனதோடு, பிரபு தேவாவின் கதாபாத்திரமும், அவரை பிடித்திருக்கும் ஆத்மாக்களின் பின்னணியும் சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாலும், படத்துடன் ரசிகர்களால் ஒன்ற முடியவில்லை.

 

சாம் சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரொம்பவே சுமார் தான். போஸின் ஒளிப்பதிவிலும் சொல்லும்படி எதுவும் இல்லை. திகில் காட்சிகளில் மிரட்டியிருக்க வேண்டிய இந்த இருவரும், சொதப்பியிருக்கிறார்கள்.

 

பேய் படங்களில் இடம்பெறும் காமெடியை ஆடியன்ஸ் என்ன தான் ரசித்தாலும், திகில் என்ற ஒரு விஷயம் மிஸ்ஸிங் என்றால் தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸ்களும் மிஸ்ஸாகி விடுவார்கள். அப்படி ஒரு நிலை தான் இந்த ‘தேவி 2’ படத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது.

 

எது இல்லையோ, பிரபு தேவா தமன்னாவுடன் நெருக்கம் காட்டுவது மட்டும் சற்று அதிகமாகவே இருக்கிறது. சொல்லப் போனால், ஏதோ பிரபு தேவா ஓய்வுக்காக மொரிசீயஸுக்கு போனது போல தான் படம் இருக்கிறதே தவிர, ஆடியன்ஸுக்கான படமாக இல்லவே இல்லை.

 

மொத்தத்தில், ‘தேவி 2’ தேறாத படங்களின் லிஸ்ட்டில் முக்கியமான படமாக இருக்கும்.

 

ரேட்டிங் 2.5/5