’டைரி’ திரைப்பட விமர்சனம்
Casting : Arulnithi, Pavithra Marimuthu, Kishor, Jayaprakash, Shara, Thanam, Sathish
Directed By : Innasi Pandiyan
Music By : Ron Ethan Yohann
Produced By : Fice Star Creations LLB - S Kathiresan
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பயிற்சியை முடிக்கும் நிலையில் இருக்கும் அருள்நிதியிடம், ஆவணக்காப்பகத்தில் இருக்கும் முடிக்க முடியாத வழக்கு ஒன்றை பயிற்சியாக எடுத்து முடிக்கலாம், என்று உயர் அதிகாரி கூறுகிறார். அதன்படி கண்ணை மூடிக்கொண்டு ஒரு வழக்கை அருள்நிதி தேர்வு செய்ய, ஊட்டியில் 16 வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு ஒன்று அவருக்கு கிடைக்கிறது. அந்த வழக்கை முடிக்க விசாரணையை தொடங்கும் அருள்நிதியை சுற்றி பல மர்மமான சம்பவங்கள் நடக்க, அதனை நோக்கி பயணிப்பவர் இறுதியில் அந்த வழக்கை முடித்தாரா? இல்லையா? அவரை சுற்றி நடக்கும் மர்ம சம்பவங்களின் பின்னணி என்ன? என்பதை வித்தியாசமான கதையோடும், யூகிக்க முடியாத திரைக்கதையோடும் சொல்லியிருக்கிறார்கள்.
காக்கிச் சட்டை போட்டலும் சரி, போடவில்லை என்றாலும் சரி போலீஸ் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் அருள்நிதி. தன்னை சுற்றி நடக்கும் மர்மமான சம்பவங்களை பார்த்து பயந்தாலும், அதை வெளிக்காட்டாமல் அதே சமயம், குழப்பமான மனநிலையை தனது முகத்தில் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கும் அருள்நிதி, வழக்கும் போல் தனது நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்தி இருக்கும் அருள்நிதி, தொடர்ந்து சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில் நடித்தாலும் கதைக்கு ஏற்ற கதாப்பாத்திரங்களில் நடிப்பதால் ரசிக்க வைக்கிறார். அதற்காக, இப்படியே வழக்குகளின் பின்னால் பயணிக்காமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய ஹீரோவாகவும் நடித்தால் நல்லது.
கதாநாயகியாக நடித்திருக்கும் பவித்ரா மாரிமுத்து, போலீஸ் வேடத்தில் அதிரடி காட்டுகிறார். காதல் காட்சிகளில் அளவாக நடித்திருப்பவர் கொடுத்த வேலையில் குறை வைக்காமல் பயணித்துள்ளார்.
கிஷோர், ஜெயப்பிரகாஷ், நக்கலைட்ஸ் தனம், ஷாரா, தணிகை, சதிஷ் என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒரு பேருந்துக்குள்ளேயே பெரும்பாலும் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். இரவு நேர காட்சிகளை மிக நேர்த்தியாக கையாண்டிருப்பவர், எது கிராபிக்ஸ், எது உண்மையான காட்சிகள் என்று தெரியாதபடி பல காட்சிகளை படமாக்கியிருக்கிறார். பேருந்தில் பாடல் மற்றும் சண்டைக்காட்சிகளை படமாக்கிய விதம் பாராட்டும்படி இருக்கிறது.
இசையமைப்பாளர் ரோன் ஈத்தன் யோஹனின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. மெலோடி பாடலும், அம்மா செண்டிமெண்ட் பாடலும் திரும்ப திரும்ப கேட்கும் ரகங்களாக இருக்கிறது.
கதை எழுதி இயக்கியிருக்கும் இன்னாசி பாண்டியன், வித்தியாசமான கதைக்களத்தில் பயணித்தாலும், திரைக்கதையில் சில இடங்களில் தடுமாறியிருப்பதோடு, ரசிகர்களை குழப்பியும் இருக்கிறார். இருப்பினும், இரண்டாம் பாதியில் அத்தனை குழப்பங்களுக்கும் விடை சொல்வதோடு, படத்தை சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்கிறார்.
க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானராக தொடங்கும் படம் திடீரென்று திகில் ஜானராக மாறுவது கதையின் போக்கை மாற்றி திரைக்கதையின் வேகத்தையும் குறைக்கிறது. பிறகு, பேருந்தில் அருள்நிதி பயணிக்க தொடங்கும் போதும் மீண்டும் வேகம் எடுக்கும் படம், நாம் யூகிக்க முடியாத ஒரு விஷயத்தை, எதிர்ப்பார்க்காத இடத்தில் சொல்லி நம்மை சீட் நுனியில் உட்கார வைத்துவிடுகிறது.
படத்தில் வைக்கப்பட்டிருக்கும் முக்கிய திருப்புமுனையை ரசிகர்கள் இறுதிவரை யூகிக்க முடியாதபடி காட்சிகளை நகர்த்தி இருக்கும் இயக்குநர் க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படமாக இருந்தாலும், அதிலும் அம்மா செண்டிமெண்ட், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்து அம்சங்களையும் வைத்து கமர்ஷியலாகவும் படத்தை நகர்த்தியிருக்கிறார்.
இப்படியும் நடக்குமா? என்ற கேள்வியை நம் மனத்தில் படத்தின் க்ளைமாக்ஸ் ஏற்படுத்தினாலும், அந்த விஷயத்தை நாம் வியக்கும்படி சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் இயக்குநர் இன்னாசி பாண்டியனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
மொத்தத்தில், ‘டைரி’ அதிர்ச்சியான ரகசியத்தை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறது.
ரேட்டிங் 3/5