’தினசரி’ திரைப்பட விமர்சனம்

Casting : Srikanth, Sindhya Lurthe, MS Baskar, Meera Krishnan, Vinothini, MR Radharavi, Premji, Sams, KPY Sarath, Shanthini Thamizharasan
Directed By : G.Shankar
Music By : Ilayaraja
Produced By : Sindhya Production House - Sindhya Lurthe
ஐடி துறையில் பணியாற்றும் நாயகன் ஸ்ரீகாந்த் போதுமான அளவுக்கு சம்பளம் வாங்கினாலும், வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்ல வேண்டும், என்று ஆசைப்படுகிறார். அதற்காக தனக்கு மனைவியாக வரும் பெண் தன்னை விட அதிகம் சம்பாதிப்பவராக இருக்க வேண்டும், என்று நினைக்கிறார். நாயகி சிந்தியா லூர்தே அதிகமான சம்பளத்துடன் நல்ல வேலையில் இருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு செல்லாமல், கணவன் மற்றும் குடும்பத்தாரை கவனித்துக் கொண்டு வாழ நினைக்கிறார். எதிர்மறை எண்ணங்களுடன் இருக்கும் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு இருவரது எண்ணங்களும் தெரிய வருகிறது. அதனால் குடும்பத்தில் சிக்கல் ஏற்பட, அதில் இருந்து மீண்டார்களா? இல்லையா ? என்பதை நல்ல கருத்து மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்வதே ‘தினசரி’.
கை நிறைய சம்பாதித்தாலும், அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற பேராசைப்படும் குடும்பஸ்தனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், தான் நினைத்தது நடக்கவில்லை என்றதும் மனம் வருந்தி தடுமாறும் காட்சிகளில் அழுத்தமாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் இளமையாக இருப்பவர், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், மனமாற்றம் என அனைத்துவிதமான உணர்வுகளையும் அளவாக கையாண்டு கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சிந்தியா லூர்தே, அமெரிக்க வாழ் தமிழ்ப் பெண் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார். அழகின் அளவு குறைவாக இருந்தாலும், தன்னம்பிக்கையின் அளவு அதிகம் என்பதை நடிப்பு மூலம் நிரூபித்திருக்கிறார்.
ஸ்ரீகாந்தின் அப்பாவாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், அம்மாவாக நடித்திருக்கும் மீரா கிருஷ்ணன், அக்காவாக நடித்திருக்கும் வினோதினி, நண்பராக நடித்திருக்கும் பிரேம்ஜி மற்றும் கே.பி.ஒய்.சரத், சாம்ஸ், சாந்தினி தமிழரசன், ராதாரவி என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் வகையில் இருப்பதோடு, பாடல் வரிகள் புரியும்படியும் இருக்கிறது. பின்னணி இசை கதைக்களத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவின் பணி படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. குறிப்பாக நாயகன் ஸ்ரீகாந்தை பாடல் காட்சிகளில் இளமையாக காண்பித்திருக்கிறார்.
படம் முழுவதும் வசனக் காட்சிகள் தான் அதிகம் என்பதால், படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த் எந்தவித சுமையும் இன்றி பணியாற்றியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் ஜி.சங்கர், இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படக் கூடாது, என்ற பழமொழிக்கேற்ப தற்போதைய தலைமுறையினர் முன்னேற்றம் என்ற பெயரில் பணத்தின் பின்னாடி பயணித்து, வாழ்க்கையை இழந்துவிடுகிறார்கள், என்ற மெசஜை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார்.
காதல், பாடல், காமெடி என அனைத்து கமர்ஷியல் அம்சங்கள் இருந்தாலும், அனைத்தையுமே காட்சி மொழியின் மூலம் சொல்லாமல் வசனங்கள் மூலமாகவே வெளிப்படுத்துவது திரைக்கதையை தொய்வடைய செய்துவிடுகிறது. இருந்தாலும் நல்ல விசயத்தை நல்லபடியாக சொல்லி, குடும்பத்துடன் பார்க்கும் படமாக இயக்கியிருக்கும் இயக்குநர் ஜி.சங்கர், தற்போதைய தலைமுறையினருக்கு வாழ்க்கையின் புரிதலையும், குடும்ப உறவுகளின் உண்ணதத்தையும் புரிய வைத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘தினசரி’ மக்களை யோசிக்க வைக்கும்.
ரேட்டிங் 2.5/5