‘டி.எஸ்.பி’ திரைப்பட விமர்சனம்
Casting : Vijay Sethupathi, Anukeerthy Vas, Prabhar, Ilavarasu, Singampuli, Gnanasamandam, Deepa, Aadhira, Pugazh
Directed By : Ponram
Music By : D.Imman
Produced By : Kaarthekeyen Santhanam, Karthik Subbaraj
விஜய் சேதுபதிக்கும், திண்டுக்கல் ரவுடியான வில்லன் பிரபகாருக்கும் இடையே பகை ஏற்படுகிறது. விஜய் சேதுபதியை கொலை செய்ய பிரபகார் முடிவு செய்ய, திண்டுக்கல்லில் இருந்து வெளியேறும் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாகி பிரபாகரனின் ரவுடித்தனதுக்கு முற்றுப்புள்ளி வைக்க மீண்டும் திண்டுக்கல் வருகிறார். அதே சமயம், ரவுடி பிரபாகர் சட்டமன்ற உறுப்பினராகி விடுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதோடு விஜய் சேதுபதியின் காதலையும் சேர்த்து சொல்வது தான் ‘டி.எஸ்.பி’.
ஜாலியாக ஊர் சுற்றி வந்தாலும் அப்பாவுக்கு பிடித்த மகனாக வலம் வரும் விஜய் சேதுபதி, தனது தனித்துவமான நடிப்பு மூலம் ரசிக்க வைக்கிறார். வெட்டியாக ஊர் சுற்றும் இளைஞர், பாசக்கார அண்ணன், காவல்துறை அதிகாரி என அனைத்திலும் அமர்க்களப்படுத்தியிருக்கும் விஜய் சேதுபதி ஒற்றை ஆளாக படத்தை சுமந்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை அனுகீர்த்திவாஸ் 50 ரூபாய்க்கு நடிக்க சொன்னால் 500 ரூபாய்க்கு நடிக்க கூடியவராக தெரிகிறார். ஆரம்பத்திலேயே இவரா நாயகி! என்று அதிர்ச்சியடைய செய்பவர், அடுத்தடுத்த காட்சிகளில் இவரை எப்படித்தான் நாயகியாக தேர்வு செய்தார்களோ, என்று நினைக்க வைத்துவிடுகிறார்.
வில்லனாக நடித்திருக்கும் பிரபாகர் வழக்கமான கமர்ஷியல் வில்லனாக மிரட்டுகிறார்.
சிங்கம்புலி, தீபா, புகழ் ஆகியோர் காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், ரசிகர்களும் அவர்களது காட்சிகளை காமெடியாக ஏற்றுக்கொண்டு சிரிக்க முயற்சித்து தோற்றுப்போகிறார்கள்.
இளவரசு, ஆதிரா, கு.ஞானசம்பந்தம் ஆகியோர் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் தங்களது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
நட்புக்காக நடித்திருக்கும் விமலின் கதாபாத்திரம் திரைக்கதைக்கு பலம் சேர்க்க உதவியிருக்கிறது.
தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்துள்ளது. சண்டைக்காட்சிகளை பிரமாண்டமாகவும், பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும் படமாக்கியிருக்கிறார்.
இமானின் இசையில் பாடல் பரவாயில்லை ரகமாகவும், பின்னணி இசை கதைக்கான ரகமாகவும் இருக்கிறது.
அதரப்பழசான கதை தான் என்றாலும், அதற்கு திரைக்கதை மற்றும் காட்சிகள் அமைத்த விதமும் அதரப்பழசாக இருப்பது தான் படத்திற்கு மிகப்பெரிய பலவீனம். அதிலும், இயக்குநர் பொன்ராம் படத்தில் காமெடி காட்சிகள் என்ற பெயரில் பல இடங்களில் கடித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
விஜய் சேதுபதி மற்றும் வில்லன் இடையே ஏற்படும் பகை அதை தொடர்ந்து வரும் மோதல் போன்றவை சற்று ரசிக்க வைப்பதோடு, படத்தை வேகமாக நகர்த்தினாலும் காதல் காட்சிகள் அவ்வபோது வேகத்தடையாக வந்து படத்தை தொய்வடைய செய்கிறது. அதையும் தாண்டி படத்தை சில இடங்களில் ரசிக்க முடிகிறது என்றால் அது விஜய் சேதுபதி என்ற நடிகரால் மட்டுமே.
மொத்தத்தில், அனைத்தும் இருந்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.
ரேட்டிங் 2/3