’இ-மெயில்’ திரைப்பட விமர்சனம்
Casting : Ragini Dwivedi, Ashok Kumar, Billi Murali, Manobala, Aarthi Shree
Directed By : SR Rajan
Music By : Gavaskar Avinash and Jubin
Produced By : SR Film Factory
நாயகன் அசோக் மற்றும் நாயகி ராகினி திவேதி காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள். ஆன்லைன் கேமில் ஆர்வம் உள்ள ராகினி திவேதிக்கு அதன் மூலமாகவே ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையில் இருந்து மனைவியை காப்பாற்ற நினைக்கும் அசோக் செல்வனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனால், தானே நேரடியாக களத்தில் இறங்கி தனது பிரச்சனையை தீர்க்க நினைக்கும் ராகினி திவேதி, அதை எப்படி செய்கிறார்?, அந்த பிரச்சனை என்ன?, அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை பல திருப்பங்களோடு சொல்வது தான் ‘இ-மெயில்’.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் அசோக், குறைவான வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும், அதில் அதிகமாக நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ராகினி திவேதியின் முகம் அவருடைய முதிர்ச்சியை காட்டினாலும், நடிப்பு இளமையாகவே இருக்கிறது. காதல் காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
ஆதவ் பாலாஜி, பில்லி முரளி, ஆர்த்தி ஸ்ரீ என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
மனோ பாலாவின் காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கிறது. ஒரு காட்சியில் வந்தாலும் லொள்ளு சபா மனோகரும் சிரிக்க வைக்கிறார்.
எம்.செல்வத்தின் ஒளிப்பதிவு படத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
கவாஸ்கர் அவினாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஜுபினின் பின்னணி இசை திரைக்கதையின் வேகத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
ஆன்லைன் விளையாட்டுகளின் மூலம் ஏற்படும் ஆபத்துகளை மையப்படுத்திய கதையை சஸ்பென்ஸாகவும், யூகிக்க முடியாத பல திருப்பங்களுடனும் சொல்லியிருக்கும் இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன், அதன் பாதிப்புகளை கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம்.
க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் கதையை, படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை, அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் நகர்த்தி செல்லும் இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன், அதை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி கமர்ஷியலாகவும், கலர்புல்லாகவும் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘இ-மெயில்’ ரசிகர்களை எச்சரிக்கவும் செய்கிறது, என்ஜாய் பண்ணவும் வைக்கிறது.
ரேட்டிங் 3/5