‘EMI’ (மாத தவணை) திரைப்பட விமர்சனம்

Casting : Sadasivam Chinnaraj, Sai Thanya, Director Perarasu, Senthi Kumari, Black Pandy, OAK Sundar, Sun TV Aadhavan, Lollu Saba Manohar
Directed By : Sadasivam Chinnaraj
Music By : Srinath Pichai
Produced By : Mallayan
எவர்சில்வர் பாத்திரம் முதல் வீடு வரை அனைத்தையும் எளிதில் வாங்க கூடிய மாத தவணை திட்டத்தில் சிக்கியவர்கள் எப்படி சின்னாபின்னம் ஆகிறார்கள், என்பதை ஜாலியாகவும், எச்சரிக்கையாகவும் சொல்வது தான் படத்தின் கதை.
நாயகன் சதாசிவம் சின்னராஜ், நாயகி சாய் தன்யாவை கண்டதும் காதல் கொள்கிறார். காதல் கணிந்து திருமணமாகி, இல்லற வாழ்க்கையை நல்லபடியாக நடத்தி வரும் நிலையில், திடீரென்று அவருக்கு வேலை இல்லாமல் போகிறது. இதனால் மாதம் வருமானம் இல்லாதவர், தான் வாங்கிய இருசக்கர வாகனம், கார் உள்ளிட்டவைகளுக்கான மாத தவணை கட்டமுடியாமல் எப்படி திண்டாடுகிறார் என்பதையும், மாத தவணை என்ற மாயையில் மாட்டிக்கொள்பவர்களின் பரிதாப நிலையையும், ஜனரஞ்சகமான படமாகவும், மக்களுக்கான பாடமாகவும் சொல்வதே ‘EMI’ (மாத தவணை).
முதல் படத்திலேயே இயக்குநர் மற்றும் கதாநாயகன் என இரண்டு வேலைகளை செய்திருக்கும் சதாசிவம் சின்னராஜ், முதல் படம் என்ற அடையாளமே தெரியாத வகையில் நடித்திருக்கிறார். பக்கத்து வீட்டு பையன் போன்று தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் எளிமையாக பயணித்திருக்கும் சதாசிவம், மக்கள் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுகிறார். மாத தவணையில் ஆசைப்படும் பொருட்களை வாங்கிவிட்டு பிறகு அவதிப்படுபவர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டிருக்கும் சதாசிவம், அத்தகைய காலக்கட்டங்களை கடந்து வந்த பலருக்கு தங்களது பழைய நினைவுகளை தனது நடிப்பு மூலம் தட்டி எழுப்பியுள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் சாய் தன்யாவுக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்றாலும், ஆண்கள் மாத தவணையில் மாட்டுக்கொள்வதற்கு முக்கிய காரணமே, காதலி, மனைவி என பல வகையில் பெண்கள் தான், என்பதை வெளிக்காட்டும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருப்பதோடு, இக்கட்டான சூழலில் இருக்கும் கணவரை விட்டு விலகாமல் அவருன் நின்று பிரச்சனையை எதிர்கொள்ளும் நல்ல மனைவியாக பயணித்திருக்கிறார்.
நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குநர் பேரரசு மேடைகளில் பேசும் அளவுக்கு கூட படத்தில் பேசாதது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் செந்தி குமாரி வழக்கம் போல் வந்து போகிறார். நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பிளாக் பாண்டி, மாத தவணை வசூலிப்பவராக நடித்திருக்கும் சன் டிவி ஆதவன் ஆகியோரது காமெடி சிரிக்க வைக்கிறது. ஓ.ஏ.கே.சுந்தர், லொள்ளு சபா மனோகர் ஆகியோறும் முகம் காட்டுகிறார்கள்.
இசையமைப்பாளர் ஸ்ரீநாத் பிச்சையின் இசையில், இயக்குநர் பேரரசு மற்றும் விவேக் ஆகியோரது வரிகளில் பாடல்கள் அனைத்தும் கமர்ஷியல் ரகங்கள். பின்னணி இசையிலும் குறை இல்லை.
படத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் பிரான்ஸிஸ், நாயகன் புதுமுகம் என்பதால், அவருக்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்.
என்ன நடக்கப் போகிறது? என்பது படத்தின் ஆரம்பத்திலே தெரிந்தாலும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் எளிதில் கடத்தி படத்துடன் ஒன்றிவிட செய்து விடுகிறார் படத்தொகுப்பாளர் ஆர்.ராமர்.
மாத தவணை மூலம் பல வசதிகளை அனுபவிப்பவர்கள், அதை கட்ட முடியாமல் எத்தகைய ஆபத்துகளில் சிக்கிக் கொள்கிறார்கள், என்பதை விவரிக்கும் திரைக்கதையை பிரச்சாரமாக சொல்லாமல், காதல், காமெடி, செண்டிமெண்ட் என்று அனைத்து அம்சங்களையும் சேர்த்து சொல்லியிருக்கும் இயக்குநர் சதாசிவம் சின்னராஜ், இத்தகைய அனுபவங்களை எதிர்கொள்ளாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல விசயங்களை சொல்லியிருக்கிறார்.
வங்கி கடன் உள்ளிட்டவைகளால் நடுத்தர குடும்பத்தினர் எப்படி கஷ்ட்டப்படுகிறார்கள் என்பதை மட்டும் சொல்லாமல், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளில் சிக்குபவர்களுக்கு தனியார் மருத்துவனைகளில் ரூ.1 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கும் தமிழ்நாடு அரசு திட்டம், தலைக்கவசம் அணிவதன் அவசியம் என்று பல நல்ல விசயங்களை திரைக்கதையோடு பயணிக்க வைத்து பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி மக்களுக்கு பயன் உள்ள படைப்பாகவும் கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘EMI’ (மாத தவணை) மக்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3.5/5