’எனை சுடும் பனி’ திரைப்பட விமர்சனம்

Casting : Natraj Sundarraj, Upasana, K.Bagyaraj, Thalaivasal Vijay, Manobala, Chitra Lakshmanan, Singam Puli
Directed By : Ram Sevaa
Music By : Mikking Aruldev
Produced By : SNS Pictures - Hemalatha Sundarraj
பொள்ளாச்சியில் பெண்கள் கடத்தப்பட்டு கற்பழித்து கொலை செய்யும் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது. விசாரணை மேற்கொள்ளும் காவல்துறைக்கு எந்தவித துப்பும் கிடைக்காமல் போக, பெண்கள் மாயமாவது மட்டும் அடிக்கடி நடக்கிறது. இதற்கிடையே, நாயகன் நட்ராஜ் சுந்தர்ராஜின் காதலி நாயகி உபாசனாவும் கடத்தப்படுகிறார். ஆனால், அவர் கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில், நாயகனால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்துக் கொள்கிறார்.
நாயகியை கடத்திய குற்றவாளி யார் ? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாயகன் ஈடுபடுகிறார். காவல்துறை சிறப்பு அதிகாரியான கே.பாக்யராஜும் இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்க, இறுதியில் யார் குற்றவாளியை பிடித்தது ?, அவர் யார், எதற்காக இதை செய்கிறார்? என்பது தான் படத்தின் கதை.
உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ராம் ஷேவா, கிரைம் திரில்லர் ஜானரை கமர்ஷியலாக கையாண்டது மட்டும் இன்றி, பெண்கள் இத்தகைய ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளவதற்கான முக்கியமான காரணத்தை சொல்லி, மக்களை எச்சரிக்கவும் செய்திருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் நட்ராஜ் சுந்தர்ராஜ் அறிமுக நடிகர் போல் இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார். காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்து இடங்களை இயல்பாக கடந்து சென்று மக்கள் மனதில் நின்றுவிடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் உபாசனா, திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கும் கதாபாத்திரத்தில் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.
சிறப்பு காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், எந்தவித அலட்டல் இல்லாமல் அசால்டாக நடித்திருக்கிறார்.
மனோ பாலா, சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், சிங்கம் புலி உள்ளிட்டவர்கள் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு தூணாக நின்றிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் மிக்கின் அருள்தேவ், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் ஆகியோரது பணி கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் முன்பின் தெரியாத நபர்களிடம் தங்களைப் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்வது, செல்போன் எண்களை பொது இடங்களில் மற்றவர்களுக்கு கேட்பது போல் சொல்வது போன்வற்றைப் பயன்படுத்தி சிலர் மேற்கொள்ளும் குற்ற செயல்களை அதிர்ச்சியூட்டும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் ராம் ஷேவா, பெண்களுக்கு நல்ல அறிவுரைகளையும் சொல்லியிருக்கிறார்.
கொலை, கற்பழி போன்றவை திரைக்கதையில் முக்கிய பங்கு வகித்தாலும், அந்த காட்சிகளை முகம் சுழிக்கும்படியாக அல்லாமல், நேர்மையாக காட்சிப்படுத்தி அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய படமாக இயக்கியிருக்கும் இயக்குநர் ராம் ஷேவா, பொருளாதார ரீதியாக சில தடுமாற்றங்களை சந்தித்திருப்பது படத்தில் தெரிந்தாலும், சுவாரஸ்யமான கிரைம் திரில்லர் படத்தில் மக்களுக்கான நல்ல மெசஜை அழுத்தமாக பதிவு செய்ததில் வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், ‘எனை சுடும் பனி’ பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3/5