’எங்க காட்டுல மழை’ விமர்சனம்
Casting : Mitun Maheshwaran, Shruthi Ramakrishnan, Appu Kutty
Directed By : Sri Balaji
Music By : Sri Vijay
Produced By : Valli Films
மிதுன் மஹேஸ்வரன், ஸ்ருதி ராமகிருஷ்ணன், அப்பு குட்டி நடிப்பில், ‘குள்ளநரி கூட்டம்’ படத்தை இயக்கிய ஸ்ரீ பாலாஜி இயக்கியத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘எங்க காட்டுல மழை’.
மதுரையில் இருந்து சென்னைக்கு வரும் ஹீரோ மிதுன், வெட்டி ஆபிசராக சுற்றி வருவதோடு, ஹீரோயின் ஸ்ருதி ராமகிருஷ்ணனையும் காதலித்து வருகிறார். மிதுனின் நண்பரான அப்பு குட்டியும் அவர் வளர்க்கும் நாய் ஒன்றும் மிதுனுடன் சேர்ந்து ஊர் சுற்ற தொடங்குகிறார்கள்.
இதற்கிடையே, மார்வாடி ஒருவர் சென்னையில் பதுக்கப்பட்ட அமெரிக்க டாலர்களை கப்பல் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார். இதனை அறிந்துக் கொள்ளும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்தாஸ், அவர்களிடம் மொத்த டாலரையும் கைப்பற்றிவிடுகிறார். டாலரை மாற்றுவதற்காக ஜீப்பில் அருள் தாஸ் புறப்படும் போது, அவர் ஜீப்பின் மீது அப்பு குட்டியின் நாய் உச்சா போக, கோபத்தில் அந்த நாயை அருள் தாஸ் எட்டி உதைத்துவிடுகிறார். இதனால் இன்ஸ்பெக்டர் மீது கோபம் கொள்ளும் ஹீரோ மிதுன், அவரை பழிவாங்குவதற்காக அவர் ஜீப்பில் இருக்கும் பையை அபேஸ் செய்துவிடுகிறார். பை முழுவதும் அமெரிக்க டாலர்கள் இருப்பதை பார்க்கும் மிதுனும், அப்புக்குட்டியும் டாலரை ரூபாயாக மாற்றி செட்டிலாக முடிவு செய்கிறார்கள். அதன்படி, ஒரு கட்டு டாலரை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை பையுடன், அப்பு கட்டி தங்கியிருக்கும் பாழடைந்த வீட்டில் புதைத்து விடுகிறார்கள்.
ஒரு புறம் போலீஸ் இன்ஸ்பெக்டர், மறுபுறம் மார்வாடி என இரண்டு தரப்பினரும் சென்னை முழுவதும் பறிக்கொடுத்த பையை தேடி வருவதால், மிதுனும், அப்பு குட்டியும் ஆந்திராவுக்கு சென்று ஒரு கட்டு அமெரிக்க டாலரை மாற்றுவிடுகிறார்கள். அந்த பணத்தை வைத்து ஆந்திராவில் சில நாட்கள் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள், மீதி டாலரை எடுப்பதற்காக சென்னைக்கு வந்து பார்த்தால், அவர்கள் பையை புதைத்து வைத்த பாழடைந்த இடம் போலீஸ் ஸ்டேஷனாக மாற்றப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியாகின்றனர்.
இதற்கிடையே, பையை எடுத்தது மிதுன் தான் என்பதை மார்வாடி கண்டுபிடித்து விடுவதோடு, ஸ்ருதியை கடத்தி வைத்துக்கொண்டு, காதலி வேண்டும் என்றால் பை வர வேண்டும் என்று கூற, போலீஸ் ஸ்டேஷனில் புதைக்கப்பட்டிருக்கும் அந்த டாலர் பையை மிதுன் கைப்பற்றி காதலியை மீட்டாரா இல்லையா என்பது தான் ‘எங்க காட்டுல மழை’ படத்தின் மீதிக்கதை.
தமிழ் சினிமாவில் அடித்து துவைத்து கிழித்த ரொம்ப பழசான கதைகளம் தான் என்றாலும், திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளில் வித்தியாசத்தை காட்டி விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம். ஆனால், அங்கேயும் ரொம்ப பழைய விஷயங்களையே சொல்லி இயக்குநர் சொதப்பிவிட்டார்.
ஹீரோ மிதுன் மகேஸ்வரன் தனக்கு கொடுக்கப்பட்ட வேலை சரியாக செய்திருந்தாலும், சிம்பு போல நடிக்க முயற்சிப்பது சகிக்கல. ஹீரோயின் ஸ்ருதி ராமகிருஷ்ணன் பார்க்க அழகா தான் இருக்கிறார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்பு தான் அமையமாட்டேங்குது. இந்த படத்தில் தனக்கான வேலையை நிறைவாகவே செய்திருக்கிறார். அப்பு குட்டியின் காமெடி பெருஷாக ஒர்க் அவுட் ஆகவில்லை. போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அருள்தாஸும் தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். படத்திற்கு திருப்புமுனையாக இருக்கும் நாய் ஒன்றை வைத்து செய்த காமெடி காட்சிகளும் பெருஷாக எடுபடவில்லை.
சென்னையில் பலர் பதுக்கி வைத்திருக்கும் அமெரிக்க டாலரை மொத்தமாக வெளிநாட்டுக்கு கடத்துவதாக படத்தின் ஆரம்பத்தில் சொல்லும் இயக்குநர் ஒரு லேடி ஹாண்ட் பேக்கில் டாலரை வைத்து இதுதான், சென்னையில் பதுக்கி வைக்கப்பட்ட மொத்த டாலர் என்று சொல்வது பெரிய லாஜிக் ஓட்டையாக இருக்கிறது. படத்தின் முக்கியமான் அம்ஷத்திலேயே இப்படி பெரிய அளவில் லாஜிக் மீறப்பட்டிருப்பதால், அங்கேயே படம் படுத்துவிடுகிறது. பிறகு காதல், காமெடி என்று ரெகுலராக கமர்ஷியல் பார்மட்டில் நகரும் படம், இறுதியில் நாம் என்ன எதிர்ப்பார்த்தோமோ அதன்படியே முடிவடைகிறது.
இதற்கு இடையே, ஹீரோ டாலர் பையை புதைத்த இடத்தில் போலீஸ் ஸ்டேஷன் வந்துவிடுவதும், அங்கிருந்து அந்த பையை ஹீரோ எப்படி எடுக்க போகிறார், என்ற விஷயங்கள் தான் படத்திற்கு கொஞ்ச சுவாரஸத்தை கொடுத்திருக்கிறது.
ஏ.ஆர்.சூர்யாவின் ஒளிப்பதிவு, ஸ்ரீ விஜயின் இசை என அனைத்தும் படம் எப்படி ரொம்ப சாதரணமாக இருக்கிறதோ, அதுபோலவே சாதாரணமாக இருக்கிறது.
’குள்ளநரி கூட்டம்’ படத்தின் மூலம் குட் டைரக்டர் என்று பெயர் எடுத்த ஸ்ரீ பாலாஜி, பெரிய விஷயத்தை சிறிய எல்லைக்குள் சொல்ல முயற்சித்திருக்கிறார். அவரது முயற்சியை பாராட்டினாலும், அவர் சொல்லிய விதம் என்னவோ சொதப்பலாக தான் இருக்கிறது.
மொத்தத்தில், இந்த ‘எங்க காட்டுல மழை’ ரொம்ப சுமாராகவே இருக்கிறது.
ரேட்டிங் 2/5