Jan 14, 2022 02:21 AM

’என்ன சொல்ல போகிறாய்’ விமர்சனம்

9159581fd67db3abb034b7b7c44e1df9.jpg

Casting : Ashwin Kumar Lakshmikanthan, Teju Ashwini, Avandika Mishra, Pugazh, Subbu Panchu

Directed By : Hariharan

Music By : Vivek - Mervin

Produced By : Trident Arts - R.Ravindran

 

அவந்திகா மிஷ்ராவை திருமணம் செய்துக்கொள்வதற்காக அவரிடம், தான் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்ததாக  பொய் சொல்லும் நாயகன் அஸ்வின் குமார்,  அந்த பெண்ணாக தேஜு அஷ்வினியை நடிக்கவும் வைக்கிறார். அஸ்வினின் பழைய காதல் கதையால் மனம் உருகும் அவந்திகா மிஷ்ராவுக்கு அஸ்வின் குமார் மீது அளவுக்கு அதிகமான காதல் ஏற்பட, அஸ்வினுக்கோ தேஜு அஷ்வினி மீது காதல் ஏற்படுகிறது. இறுதியில் காதல் யாரை யாருடன் சேர்த்து வைக்கிறது, என்பதே படத்தின் மீதிக்கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் அஸ்வின் குமார், தன்னால் முடிந்த வரை நடிக்க முயற்சி செய்திருக்கிறார். பெண்களை ஈர்க்கும் அவருடைய இளமை கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தினாலும், காதலை வெளிப்படுத்தும் இடங்களில் நடிப்பில் பெரிய தடுமாற்றம் தெரிகிறது.

 

நாயகிகளாக நடித்திருக்கும் அவந்திகா மிஷ்ரா மற்றும் தேஜு அஷ்வினி இருவரும் அழகிலும், நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். அதிலும், தேஜு அஷ்வினி கூடுதல் கவனம் பெறுகிறார்.

 

அஸ்வினின் நண்பராக வரும் புகழும், அவரைச் சார்ந்த காட்சிகளும் படத்திற்கு தேவையில்லாத ஒன்றாக இருந்தாலும், அதற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் கூடுதல் பலவீனம்.

 

விவேக் - மெர்வின் இசையில் ஒரே ஒரு பாடல்  குஷியாக்கி கொண்டாட வைத்தாலும், மற்ற பாடல்கள் அனைத்தும் சுமார் ரகமே. ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவு காட்சிகளையும், கதாப்பாத்திரங்களையும் கலர்புல்லாக காட்டியிருக்கிறது.

 

முக்கோண காதல் கதையை புதிய கோணத்தில் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் ஹரிஹரனின் முயற்சியும், திரைக்கதை அமைப்பும் பாராட்டும்படி இருந்தாலும், முதன்மை கதாப்பாத்திரங்களை வேலை வாங்கிய விதம் மற்றும் காதல் காட்சிகளை வடிவமைத்த விதம் ஆகியவற்றால், படத்தில் பேசப்படும் காதல், படம் பார்ப்பவர்களை எந்த வகையிலும் பாதிக்காதது படத்தின் மிகப்பெரிய குறையாக இருக்கிறது.

 

கண்ணில் பார்க்க முடியாத காதலை, மனதால் மட்டுமே உணர முடியும்,  என்பதை வார்த்தைகளால் சொல்லாமல், காட்சிகளின் மூலம் வெளிப்படுத்தும் காதல் படங்கள் மட்டுமே ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும். ஆனால், இந்த படம், காதல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு பக்கம் பக்கமாக வசனம் பேசி, பாடம் எடுத்து நம்மை தூங்க வைத்துவிடுகிறது.

 

மொத்தத்தில், ‘என்ன சொல்ல போகிறாய்’ காதலை சொல்ல தெரியவில்லை.

 

ரேட்டிங் 2.5/5