Feb 21, 2024 04:35 AM

’எட்டும் வரை எட்டு’ திரைப்பட விமர்சனம்

65328e757644c72d4b5d52cb06e664bb.jpg

Casting : Nandhakumar, Prathyangra Rose, Soundarya Varada, Aadukalam Naren, Aarthi, Muthukkalai, Venkal Rao, King Kong, Grane Manoharan

Directed By : Velvishwa

Music By : Rajayogi

Produced By : S.Baskar and Co.Producer - Hema Movies International NN Manibalan

 

அதிகம் வளர்ச்சி பெறாத வறண்ட கிராமத்தைச் சேர்ந்த கதாநாயகி பிரத்யங்கிரா ரோஸ், விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொள்கிறார். அதற்கு ஏற்றவாறு ஓட்டப்பந்தயத்தில் அதீத திறன் கொண்ட அவர், அதில் உலக அரங்கில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு பயணிக்கிறார். ஆனால், அவரது தந்தை நரேன், பெண்கள் என்றாலே சமைப்பதற்கும், வீட்டை பராமரிப்பதற்கும் தான், என்ற பழைய சித்தாந்தப்படி வாழ்வதால், நாயகியின் லட்சியத்திற்கு தடையாக இருக்கிறார். தந்தையின் தடையை மீறி எப்படியாவது தான் நினைத்தது போல் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடும் நாயகியின் மீது கொலை குற்றம் சுமத்தப்படுகிறது. இதனால், தனது எதிர்காலம் இருண்டு போகும் சுழல் ஏற்பட, அதில் இருந்து அவர் மீண்டு வந்து தனது கனவை நினைவாக்கினாரா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘எட்டும் வரை எட்டு’ படத்தின் மீதிக்கதை.

 

கதையின் நாயகியாக நடித்திருக்கும் பிரத்யங்கிரா ரோஸ், பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் பக்குவமாக நடித்து பாராட்டு பெறுகிறார். தனது லட்சியத்திற்கு வரும் தடைகளை சாமர்த்தியமாக தகர்த்து ஒவ்வொரு படியாக முன்னேற்றம் அடைபவர், கொலை குற்றவாளியாகி தடுமாறும் காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக நடித்து அசத்தியிருக்கிறார்.

 

நாயகனாக நடித்திருக்கும் நந்தகுமார் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் ‘ஆடுகளம்’ நரேன், தனது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.

 

ஆர்த்தி, முத்துக்காளை, வெங்கல் ராவ், கிங்காங், ஜெயகுமார், கிரேன் மனோகர், நாகராஜ சோழன், சுசி, எஸ்.பாஸ்கர், என்.ஆர்.தன்பாலன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் நிறைவாக நடித்திருப்பதோடு, அவ்வபோது சிரிக்கவும் வைக்கிறார்கள்.

 

ராஜயோகி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. வேல் முருகனின் ஒளிப்பதிவில் வறண்ட  மண் நிறைந்த கிராமம் இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பாடல் காட்சிகளை எளிமையான லொக்கேஷன்களில் படமாக்கினாலும் ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் வேல்விஸ்வா, பெண்களை கெளரவிக்கும் ஒரு கதையை, எந்த அதிகமான மசாலத்தனம் இன்றி மிக நேர்மையாக கையாண்டுள்ளார். என்னதான் அறிவியல் முனேற்றம் ஏற்பட்டாலும், பெண்கள் பல துறைகளில் சாதித்தாலும், இன்னும் பல கிராமங்களில் பெண்கள் அடக்குமுறைக்கு ஆளாகும் நிலை இருக்கத்தான் செய்கிறது என்பதை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, பெண்களின் முன்னேற்றத்திற்கு அவர்களது குடும்பத்தாரே தடையாக இருக்கும் அவலங்களை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

காதல், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து கமர்ஷியல் விசயங்களையும் அளவாக கையாண்டிருக்கும் இயக்குநர் அதை சமூகத்திற்கு தேவையான கருப்பொருளோடு சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

 

மொத்தத்தில், குறைந்த பட்ஜெட் படம் என்றாலும், நல்ல விசயத்தை நிறைவாகவும், நேர்மையாகவும் சொல்லியிருக்கும் இந்த ‘எட்டும் வரை எட்டு’ படத்திற்கு நிச்சயம் வெற்றி கிட்டும்.

 

ரேட்டிங் 3.5/5