Apr 12, 2019 11:45 AM

’கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்’ விமர்சனம்

0c3cbe1395e03923dc97b2c42fb2ab22.jpg

Casting : Priyanga Ruth, Daniel Balaji, Velu Prabhakaran, Ashok

Directed By : CV Kumar

Music By : Hari Dafusia, Shyamalangan

Produced By : CV Kumar

 

பல வெற்றிப் படங்களை தயாரித்த சி.வி.குமாரின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

சென்னையில் உள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பலால் தனது கணவனை இழந்த பெண், கணவனின் மரணத்திற்கு பழி வாங்குவது தான் படத்தின் கரு.

 

கல்லூரியில் படிக்கும் போது சக மாணவரான அசோக்கை ஹீரோயின் பிரியங்கா ரூத் காதலிக்கிறார். அசோக் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் பிரியங்காவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா அசோக்கை திருமணம் செய்துக் கொண்டு குடும்பம் நடத்த தொடங்குகிறார்.

 

சென்னையில் பெரிய தாதாதாவாக இருக்கும் வேலுபிரபாகரன் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளும், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் செல்வாக்குடன் போதை பொருள் கடத்தலை பிரதான தொழிலாக செய்ய, பேருக்கு தோல் தொழிற்சாலை ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த தோல் தொழிற்சாலயில் அசோக் அக்கவுண்டண்டாக வேலைக்கு சேருகிறார். இதற்கிடையே, வேலுபிரபாகரன் சொல்லி, ஒரு வேலையை செய்ய வெளியூருக்கு செல்லும் அசோக், வேலையை முடித்துவிட்டு தனது வீட்டுக்கு செல்லும் போது போலீசால் என்கவுண்டர் செய்யப்படுகிறார்.

 

எதுவும் அறியாத தனது கணவரை கிரிமினல் என்று கூறி என்கவுண்டர் செய்த போலீஸை பழிவாங்க வேண்டும், என்று நினைக்கும் பிரியங்கா ரூத்துக்கு, இதை செய்தது போலீஸ் என்றாலும், இதன் பின்னணியில் வேலுபிரபாகரனும், அவரது மகன்களும் தான் என்பது தெரிய வருகிறது. அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள், என்பதை தெரிந்துக் கொள்ளும் பிரியங்கா, தனது கணவரின் மரணத்திற்காக அவர்களை பழிவாங்குவதற்கு, வேலுபிரபாகரனின் எதிரணியான டேனியல் பாலாஜியிடம் உதவி கேட்கிறார். பல ஆண்டுகளாக வேலுபிரபாகரனை அழித்துவிட்டு சென்னையில் தனது கொடியை பறக்கவிட காத்திருக்கும் டேனியல் பாலாஜி, பிரியங்கா ரூத் மூலம் அதை செய்து முடிக்க முடிவு செய்ய, இறுதியில், யார் நினைத்தது நடந்தது, எப்படி நடந்தது, என்பது தான் ‘கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்’ படத்தின் மீதிக்கதை.

 

கேங்க்ஸ்டரால் பாதிக்கப்பட்ட சாதுவான ஹீரோ, கேங்க்ஸ்டராக மாறி, பழி தீர்க்கும் பல படங்களைப் போலவே இப்படமும் இருந்தாலும், அவற்றுக்கும் இப்படத்திற்கும் உள்ள பெரிய வித்தியாசம், இப்படம் ஹீரோயினை மையமாக வைத்த படம் என்பது மட்டுமே, அதை தவிர வேறு எதுவும் இல்லை.

 

வேலுபிரபாகரன், டேனியல் பாலாஜி, பிரியங்கா ரூத் இந்த மூன்று கதாபாத்திரங்களை சுற்றி கதை நகர்ந்தாலும், முழு படத்தையும் தூக்கி சுமந்திருப்பவர் பிரியங்கா ரூத் தான். 

 

படத்தின் மெயின் வில்லனாக வேலுபிரபாகரனை காட்டினாலும், பர்பாமன்ஸை பொருத்தவரையில் அவருக்கான வாய்ப்பு குறைவு தான். முறைப்பது, பீடி பிடிப்பது, அமைதியாக இருப்பது என்ற நிலையிலேயே அவரை காட்டிவிட்டு, அவரது மகன்களாக இருப்பவர்களுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகளை இயக்குநர் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

 

”எந்த வேடமாக இருந்தாலும், நல்லா பண்ணிருவாருப்பா..”என்று பெயர் எடுத்த டேனியல் பாலாஜி, ஆரம்பத்தில் அமர்க்களமாக அறிமுகமானாலும், ஹீரோயினுக்கு பயிற்சி கொடுத்ததோடு, தனது வேலையை முடித்துக்கொள்கிறார்.

 

இப்படி முக்கியமான வேடமான இரண்டு கதாபாத்திரங்களையும் அடக்கியே வைத்திருந்த இயக்குநர் பிரியங்கா ரூத்தை மட்டுமே அதிரடி ஆட்டம் போட வைக்க, அம்மணியின் அதிரடியும் அமர்க்களமாகத் தான் இருக்கிறது. மென்மையான பெண்மையில், அதிரடியான முரட்டுத்தனத்தை காட்டும் பிரியங்கா ரூத், ஆண்களுக்கு நிகராக அடி வாங்குவது, அடிப்பது என்று ரொம்பவே உழைத்திருப்பவர், தனக்கு கொடுத்த வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்.

 

ஹரி டபுஸியாவின் இசையில் வரும் கல்லூரி பாடல் ரசிக்க வைக்கிறது. ஷ்யாமலங்கத்தின் பின்னணி இசையும், பீஜியமும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. கார்த்திக் குமாரின் ஒளிப்பதிவு ஒட்டு மொத்த படத்திற்கும் ஒரே மாதிரியான லைட்டிங் மட்டும் இன்றி, லொக்கேஷன் தேர்விலும் முழு கவனம் செலுத்தி படத்திற்கு பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

 

யார் அடிச்சாலும் திருப்பி அடிக்கும் சுபாவம் கொண்ட ஒரு பெண், கணவரின் கொலைக்கு பழி வாங்க கிளம்புவதை லாஜிக்கோடு சொல்ல தொடங்கும் இயக்குநர் சி.வி.குமார், கணவரை என்கவுண்டர் செய்த போலீசாரை, பிரியங்கா நடுரோட்டில் போட்டுத்தள்ளும் காட்சியின் மூலம், திடீரென தடுமாறுகிறார். அதில் இருந்து பல இடங்களில் தடுமாறி தடுமாறி படத்தை நகர்த்தி செல்பவர் ஒரு கட்டத்தில், பெண்ணின் பழிவாங்கும் கதையையில் இருந்து பின் வாங்கி, ரவுடிகளின் ரத்த கரையை கதையாக்கி விடுகிறார்.

 

ரவுடிகளை மையமாக வைத்த படம் தான் என்றாலும், படம் முழுவதும் ஒரே சிவப்பு நிறமாக காட்டுவது, கொடூரமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளரின் லைட்டிங்கில் தூக்கலாக சிவப்பு நிறம் இருப்பது போல, படத்தின் காட்சிகளிலும் ரத்த ஆறையே இயக்குநர் சி.வி.குமார் ஓட வைத்துவிடுகிறார்.

 

முதல் பாதியில் இருக்கும் ட்விஸ்ட்டும், விறுவிறுப்பும் திரைக்கதையின் இரண்டாம் பாதியில் சுத்தமாக இல்லாமல் போகிறது. டேனியல் பாலாஜியின் கேங்கிற்கு பொறி வைப்பதில் மட்டுமே சின்ன ட்விஸ்ட் இருந்தாலும் அது முழுக்க முழுக்க சினிமாத்தனமாக இருக்கிறது. அதேபோல், படத்தின் இறுதியில் கதையை நகர்த்தி செல்லும் கதாபாத்திரமாக வரும் நரேனின் நடிப்பு ஓகே தான் என்றாலும், அங்கேயும் சினிமாத்தனம் தாண்டவமாடுகிறது.

 

வேலுபிரபாகரனினடம் 35 வருடமாக வேலை பார்க்கும் ஒரு கதாபாத்திரம் அவருக்கு துரோகம் செய்தவுடன், அவரிடம் வேலுபிரபாகரன் கேட்பார் “மத்தவங்க கிட்ட நான் எப்படி இருந்தாலும், உன் கிட்ட நான் நல்லவனா, ஒரு நண்பனா தானே இருந்தேன், அப்புறம் ஏன் இப்படி பண்ணே” என்று. ஆனால், அதற்கு அந்த கதாபாத்திரத்தால் பதில் எதுவும் சொல்ல முடியாது, இந்த ஒரு காட்சியே, இயக்குநர் சி.வி.குமாருக்கு, கேங்க்ஸ்டர் கதையை சரியாக கையாள தெரியவில்லை, என்பதை நமக்கு புரிய வைத்துவிடுகிறது.

 

மொத்தத்தில், மொக்கை படத்திற்கும், சுமாரான படத்திற்கும் மத்தியில் வைத்து பார்க்க வேண்டிய ஒரு படமாகவே இந்த ‘கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்’ உள்ளது.

 

ரேட்டிங் 2.5/5