’கருடன்’ திரைப்பட விமர்சனம்
Casting : Soori, Sasikumar, Unni Mukundan, Samuthirakani, Revathi Sharma, SShivada, Brigida Saga, Mime Gopi, RV Udhayakumar, Vadivukarasi, Dushyanth Jayaprakash
Directed By : RS Durai Senthilkumar
Music By : Yuvan Shankar Raja
Produced By : Grassroot Films, Lark Studios - K.Kumar
சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். ஆதரவற்ற சூரிக்கு சிறு வயது முதல் அடைக்களம் கொடுத்ததால், அவர் உன்னி முகுந்தனுக்கு விஸ்வாசமான வேலைக்காரராக இருக்கிறார். அதே சமயம், சசிகுமாரின் குடும்பத்தில் ஒருவராகவும் உறவு பாராட்டுகிறார்.
இந்த நிலையில், சூழ்நிலை காரணமாக உன்னி முகுந்தன் சசிகுமாருக்கு துரோகம் செய்ய முயற்சிக்க, சூரி விஸ்வாசத்திற்காக தனது முதலாளி பக்கம் நின்றாரா? அல்லது குடும்பத்தில் ஒருவராக உறவு பாராட்டி பாசம் காட்டிய சசிகுமாரின் நியாயம் பக்கம் நின்றாரா? என்பதை அதிரடியாக சொல்வது தான் ‘கருடன்’ கதை.
சொக்கன் என்ற கதாபாத்திரத்தில் வெள்ளந்தி மனிதராகவும், முதலாளியின் வெறித்தனமான விஸ்வாசியாகவும் சூரி அதிரடி காட்டியிருக்கிறார். யார் எதை கேட்டாலும் சொல்லாதவர் தனது முதலாளி கேட்டவுடன், எக்ஸ்பிரஸ் ரயிலை விட வேகமாக உண்மைகளை சொல்லும் காட்சிகளில் ரசிகர்களின் இறுக்கத்தை நீக்கி சிரிக்கவும் வைக்கிறார். கதையின் நாயகனாக நடித்தாலும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் இருவரையும் பக்கபலமாக வைத்துக்கொண்டு முதல்பாதியை சாமர்த்தியமாக கடக்கும் சூரி, இரண்டாம் பாதியில் மொத்த படத்தையும் தன் தோள் மீது சுமந்திருக்கிறார்.
சசிகுமார் மற்றும் உன்னி முகந்தன் இருவரும் பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் பக்குவமாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். இவர்களுடைய நட்பின் முக்கியத்துவம் முதல்பாதி படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்ல, இரண்டாம் பாதி படத்தை இவர்களுக்கு இடையே நடக்கும் துரோகம் சுவாரஸ்யமாகவும், ஆக்ரோஷமாகவும் நகர்த்தி செல்கிறது. இருவரும் போட்டி போட்டு நடித்து படத்திற்கு மட்டும் இன்றி சூரிக்கும் மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறார்கள்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சமுத்திரக்கனியின் திரை தோற்றம் மற்றும் நடிப்பு திரைக்கதையோட்டத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. அமைச்சராக நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது. நிச்சயம் அவரை தொடர்ந்து நடிகராக பார்க்கலாம்.
ரேவதி சர்மா, ஷிவதா, பிரிகிடா சகா, ரோஷினி ஹரிபிரியன், மைம் கோபி, வடிவுக்கரசி, துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ.வில்சனின் கேமரா புழுதி நிறைந்த பகுதியில் நடக்கும் சண்டைக்காட்சிகளை ஆக்ரோஷமாக மட்டும் இன்றி இயல்பாகவும் படமாக்கி பார்வையாளர்களை பதற்றமடைய செய்திருக்கிறது. சூரியால் இது சாத்தியமா? என்ற கேள்வி பார்வையாளர்களிடம் சிறுதுளி கூட ஏற்படவில்லை, இதற்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ.வில்சன் அவரை படம் முழுவதும் காட்டிய விதம் தான்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசை காட்சிகளை மக்கள் மனதில் நிற்க வைத்துவிடுகிறது.
படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ், இடைவேளை காட்சி மற்றும் கிளைமாக்ஸ் முந்தைய காட்சியை தொகுத்த விதம் படத்தை விறுவிறுப்பாக மட்டும் இன்றி, அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
’விடுதலை’ படத்தின் மூலம் காமெடி நடிகரையும் தாண்டி அழுத்தமான நடிகராக உயரத்திற்கு சென்ற சூரியை மேலும் உயரத்திற்கு அழைத்து செல்லும் வகையில் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், படத்தை நேர்த்தியாக இயக்கியிருக்கிறார்.
மண், பெண், பொன் இவை மூன்றும் தான் மனிதர்களிடையே போட்டியை ஏற்படுத்தும் என்பதை, விஸ்வாசம் மற்றும் துரோகம் ஆகியவற்றுடன் இணைத்து நல்ல கதையம்சம் கொண்ட படமாக மட்டும் இன்றி மாஸான ஆக்ஷன் படமாகவும் கொடுத்து சினிமா ரசிகர்களை திருப்திப்படுத்துவதில் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘கருடன்’ ஜெயிப்பான்.
ரேட்டிங் 3.5/5