’கில்லி பம்பரம் கோலி’ விமர்சனம்
Casting : Prasad, Naresh, Thamizh, Deepthy Shetty, Kanja Karuppu, Thalaivasal Vijay
Directed By : Manoharan.D
Music By : Y.R.Prasad
Produced By : Manoharan.D
ஸ்ரீ சாய் பிலிம் சர்க்யூட் நிறுவனம் சார்பில் மனோஹரன்.டி தயாரித்து இயக்கியிருக்கும் ‘கில்லி பம்பரம் கோலி’ படம் எப்படி என்பதை பார்ப்போம்.
கில்லி பம்பரம் கோலி, என்று வாழ்க்கைக்கு தேவைப்படாத விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களை அவர்களது பெற்றோர்கள் திட்டி...திட்டி...தீர்க்க, ஒரு கட்டத்தில் அவர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு, குடும்பத்திற்காக மலேசியா சென்று வேலை செய்கிறார்கள்.
இப்படி தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் இருந்து மலேசியாவுக்கு வேலைக்கு வரும் பிரசாத், நரேஷ், தமிழ், தீப்தி ஷெட்டி ஆகியோர் நண்பர்களாகி நட்பு பாராட்டி வரும் நிலையில், மலேசியா டான் சந்தோஷ் மூலம் இவர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. அதன் மூலம், வேலையை இழந்து என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பவர்களுக்கு, தலைவாசல் விஜய் அடைக்கலம் கொடுக்கிறார். ஆனால், அங்கேயும் டான் சந்தோஷ் வந்து தொல்லைக் கொடுக்க, அவரைப் பார்த்து பயந்து ஓடும் நண்பர்கள், ஒரு கட்டத்தில் டானை எதிர்த்து போராட முடிவு செய்யும் போது, அவர்களது பெற்றோர்கள் வாழ்க்கைக்கு தேவைப்படாது என்று கூறிய கில்லி பம்பரம் கோலி ஆகிய விளையாட்டுகள் தான் அவர்களது உயிரை காப்பாற்றுகிறது. அது எப்படி என்பது தான் ‘கில்லி பம்பரம் கோலி’ படத்தின் மீதிக்கதை.
பல விளையாட்டுகளை மையமாக வைத்து படங்கள் வந்திருந்தாலும், சிறு வயதில் அதுவும் தற்போதைய தலைமுறையினருக்கு தெரியாமல் போன விளையாட்டுகளான கில்லி பம்பரம் கோலி ஆகிய விளையாட்டுகளை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் ஒரே படம் என்ற பெருமையை இப்படம் பெற்றிருக்கிறது.
படத்தின் தலைப்பு கில்லி பம்பரம் கோலி என்பதால், படம் முழுவதும் ஒரே விளையாட்டாகவே இருக்கும் என்று யோசிக்க வேண்டாம், நட்பை மையப்படுத்தி ஒரு அழகான கதையையும், வெளிநாட்டுக்கு செல்பவர்கள் எப்படிப்பட்ட கஷ்ட்டங்களை அனுபவிக்கிறார்கள் என்ற மெசஜையும் இயக்குநர் மனோஹரன்.டி நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்.
படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான பிரசாத், நரேஷ், தீப்தி ஷெட்டி ஆகியோர் புதுமுகங்களாக இருந்தாலும், அது தெரியாதவாறு நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.
படத்தில் வில்லனாக நடித்திருக்கும் சந்தோஷ், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு வில்லத்தனத்தை கம்பீரமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். அதே சமயம், அவர் வரும் காட்சிகள் எல்லாம் ஏதோ கன்னட படத்தை பார்ப்பது போன்ற உணர்வையும் கொடுக்கிறது.
கஞ்சா கருப்பின் காமெடி சுத்தமாக எடுபடவில்லை என்றாலும், ஏதோ திரைக்கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடம் என்பதால் சற்று ஆறுதலாக இருக்கிறது. தலைவாசல் விஜய் எப்போதும் போல தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்.
ஒய்.ஆர்.பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் புரியும்படி இருக்கிறது. நாக கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் ஏற்கனவே நாம் பார்த்த மலேசிய லொக்கேஷன்களே திரும்ப திரும்ப வருகிறதே தவிர புதிதாக ஒன்றுமில்லை.
முழுக்க முழுக்க மலேசியாவிலேயே படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ரவுடி சந்திராவின் அட்டகாசம் அதிகப்படியாக இருக்கையில், போலீஸ் என்ற ஒரு அடையாளமே படத்தில் இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது. அதிலும், கட்டுப்பாடுகள் நிறைந்த மலேசியாவில் இப்படியா, நம்பவே முடியவில்லை.
பெரிய ரவுடி, கில்லி பம்பரம் கோலி போன்ற விளையாட்டுக்களை கற்றுக்கொண்டு விளையாடும் காட்சிகள் காமெடியாக இருக்கிறது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி தற்போதைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை, அதை தெரியப்படுத்த யாரும் முயற்சிப்பதும் இல்லை, என்பதை சொல்லும் இப்படம் விளையாட்டுத்தனமான படமாக இருந்தாலும், யோசிக்க வைக்கும் படமாக இருக்கிறது.
பாரம்பரிய விளையாட்டுக்களை மக்கள் மறந்துவிடக்கூடாது, அதை வரும் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை தனது கரு மூலம் சொல்லியிருக்கும் இயக்குநர் மனோஹரன்.டி, திரைக்கதையை நகைச்சுவையாக நகர்த்தியிருந்தாலும், வில்லனின் போஷனை ரொம்ப நீளமாக எடுத்திருப்பது படத்திற்கு மைனசாக அமைந்திருக்கிறது.
எந்த நேரமும், வில்லன் துரத்துவதும், ஹீரோக்கள் ஓடுவதும் என்று இருக்கும் காட்சிகளிலும் கத்திரி போட்டு, படத்தின் நீளத்தை குறைத்திருந்தால், கில்லி பம்பரம் கோலி விளையாட்டுகளை போல படமும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
ரேட்டிங் 2.5/5