Sep 05, 2024 05:43 PM

’கோட்’ திரைப்பட விமர்சனம்

40ada287f29f4974ec3f1270d9d04b6b.jpg

Casting : Vijay, Sneha, Meenakshi Soudhry, Prashanth, Prabhu Deva, Ajmal, Yogi Babu, Mic Mohan, Premji Amaran, Vaibav,

Directed By : Venkat Prabhu

Music By : Yuvan Shankar Raja

Produced By : AGS Entertainment - Kalpathi S. Aghoram, Kalpathi S. Ganesh, Kalpathi S. Suresh

 

இந்திய உளவுத்துறையின் கீழ் இயங்கும் தீவிரவாத தடுப்பு பிரிவில் பணியாற்றும் விஜய், பணி நிமித்தமாக தாய்லாந்து செல்லும் போது தனது மனைவி சினேகா மற்றும் தனது மகனை உடன் அழைத்துச் செல்கிறார். அங்கு விஜயின் மகனை மர்ம நபர்கள் கடத்தி விடுகிறார்கள். பிள்ளையை காப்பாற்றும் முயற்சியில் விஜய் ஈடுபடும் போது, குழந்தையை கடத்தி சென்ற வாகனம் விபத்தில் சிக்கி அதில் இருந்த குழந்தைகள் இறந்து விடுகிறார்கள். பிள்ளையை பறிகொடுத்ததால் அவரை விட்டு சினேகா பிரிந்து விடுகிறார். விஜயும் தனது வேலையை விட்டுவிடுகிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது வேலை விசயமாக ரஷ்யாவுக்கு செல்லும் விஜய் அங்கே தன்னைப் போல் உருவம் கொண்ட இளைஞரை சந்திக்கிறார்.

 

அவரைப் பற்றி அறிந்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடும் விஜய்க்கு,  இறந்து போனதாக நினைத்துக் கொண்டிருந்த தனது மகன் தான் என்பது தெரிய வருகிறது. மகனை காப்பாற்றி தன்னுடன் சென்னைக்கு அழைத்து வரும்  விஜய், தனது மகன் மூலம் இழந்த அனைத்தையும் திரும்ப பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் போது, திடீரென்று அவருடன் இருப்பவர்கள் ஒவ்வொருவராக கொலை செய்யப்படுகிறார்கள். அந்த கொலையாளி யார்?,  எதற்காக விஜய் மற்றும் அவரது குழுவினரை குறிவைத்து கொலை செய்கிறார்?  என்பதை அனைத்துவிதமான கமர்ஷியல் அம்சங்களையும் சேர்த்து அரைத்த மசாலாவாக சொல்லியிருப்பது தான் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் அடைம்’ (கோட் )

 

கதாநாயகன் உளவுத்துறையில் பணியாற்றுகிறார், கென்யா, மாஸ்கோ என சர்வதேச அளவில் பயணிக்கும் கதையாக இருந்தாலும், அதற்கான திரைக்கதை படு லோக்கலாகவும், முழுக்க முழுக்க கமர்ஷியலாகவும் இருக்கிறது.

 

காந்தி மற்றும் ஜீவன் என அப்பா, மகன் வேடங்களில் நடித்திருக்கும் விஜய், அப்பா கதாபாத்திரத்தில் நடிப்பு மற்றும் உடல் மொழியில் முதிர்ச்சியை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பதோடு, மகன் கதாபாத்திரத்தில் நடிப்பில் வேகத்தையும், விவேகத்தையும் வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். வழக்கம் போல் சில இடங்களில் தனது குறும்புத்தனமான நடிப்பையும், கிண்டலான வசன உச்சரிப்பின் மூலமும் ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பவர், படம் முழுவதும் ரசிகர்களை குஷிப்படுத்த வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வலம் வந்திருக்கிறார்.

 

விஜயுடன் பணியாற்றும் அவரது நண்பர்களாக நடித்திருக்கும் பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், அஜ்மல் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

 

அப்பா விஜயின் மனைவியாக நடித்திருக்கும் சினேகா மற்றும் மகன் விஜயின் காதலியாக நடித்திருக்கும் மீனாட்சி செளத்ரி இருவரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.

 

வில்லனாக நடித்திருக்கும் மைக் மோகனுக்கு அதற்கான எந்தவித தகுதியும் இல்லாததால், அந்த வேடம் மனதில் நிற்க மறுப்பதோடு, படத்திற்கு எந்தவிதத்திலும் பலம் சேர்க்காமல் பயணிக்கிறது.

 

பிரேம்ஜி, வைபவ், அஜய், ஆகாஷ் அரவிந்த் என இயக்குநர் வெங்கட் பிரபுவின் கோஷ்ட்டியும் சில இடங்களில் தலைகாட்டுகிறார்கள். யோகி பாபு சில காட்சிகளில் வந்தாலும் தனது வழக்கமான பாணியில் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.

 

சிவகார்த்திகேயன் மற்றும் திரிஷா சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார்கள்.

 

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு எந்தவிதமான அடையாளத்தையும் கொடுக்காமல், மிக சாதாரணமாக பயணித்திருப்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம்.

 

ஒளிப்பதிவாளர் சித்தார்தா நுனியின் பணியை விட, வி.எப்.எக்ஸ் பணி தான் படத்தில் அதிகமாக இருக்கிறது. அது படத்திற்கு பல இடங்களில் கைகொடுக்கவும் செய்திருக்கிறது.

 

”அப்பா போலீஸ், மகன் திருடன்” என்ற பாணியில் தமிழ் சினிமாவில் பல கதைகள் வந்திருக்கிறது. அந்த வரிசையிலான கதையை சர்வதேச அளவில் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு, அதற்கான எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ளாமல், மீண்டும் பழைய பாணியில், அப்பா - மகன் என்ற இரட்டை வேடத்தை வைத்து திரைக்கதை அமைத்து, அதை மசாலாப் பட பாணியில் இயக்கியிருக்கிறார்.

 

விஜயை அப்பா மற்றும் மகனாக காட்டிய தொழில்நுட்பத்தை மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள். அதற்கு ஏற்றவாறு நடிகர் விஜயும் தனது உடல் மொழியிலும், நடிப்பிலும் வித்தியாசத்தை வெளிப்படுத்தி கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்த அதிரடி பஞ்ச் வசனங்கள் மற்றும் அரசியல் வசனங்கள் படத்தில் இல்லை என்றாலும், 2026 -ல் விஜய் முதலமைச்சர் ஆவார், என்பதை ’CM2026' என்ற  கார் பதிவு எண் மூலம் சத்தமில்லாமல் சொல்லியிருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு, படம் முழுவதும்  இப்படி சிறு சிறு விசயங்களை தனது பாணியில் சொல்லி ரசிக்க வைத்திருப்பதோடு, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பின்னணியில் கிளைமாக்ஸை காட்சிப்படுத்திய விதம், டோனியின் எண்ட்ரி போன்றவை  கிரிக்கெட் ரசிகர்களையும் படத்தை கொண்டாட வைத்திருக்கிறது.

 

பழைய பாணியிலான கதை, வழக்கமான திரைக்கதை, யூகிக்கும்படியான காட்சிகள் மற்றும் திருப்பங்கள் என படத்தில் பல குறைகள் இருந்தாலும், கமர்ஷியல் படங்களை விரும்புகிறவர்களுக்கு ஏற்றபடி படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு, விஜயின் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்த தவறியிருக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘கோட்’ விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கான படம் அல்ல.

 

ரேட்டிங் 2.8/5