’குட் பேட் அக்லி’ திரைப்பட விமர்சனம்

Casting : Ajith Kumar, Trisha, Arjun Dass, Sunil, Prabhu, Prasanna, Simran, Priya Varrier, Shine Tom Chacko, Yogi Babu, Redin Kingsly, Karthikeyan, Harry Jose
Directed By : Adhik Ravichandran
Music By : GV Prakash Kumar
Produced By : Mythri Movie Makers - Naveen Yerneni and Y. Ravi Shankar
ரெட் டிராகன் என்று அழைக்கப்படும் மும்பை டான் அஜித் குமார் தனது பிள்ளைக்காக ’பேட்’ சுபாவத்தை கைவிட்டுவிட்டு ’குட் ’-ஆக மாறி போலீசில் சரணடைந்து 18 வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்கிறார். தண்டனை முடிந்து ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் தனது மனைவி திரிஷா மற்றும் மகனை சந்திக்க செல்லும் அஜித், அங்கு பெரிய பிரச்சனை ஒன்றில் சிக்கிக் கொண்டு சிறையில் தண்டனை அனுபவிக்கும் தனது மகனை காப்பாற்றுவதற்காக மீண்டும் ’பேட் ’அவதாரம் மட்டும் இன்றி ’அக்லி’ அவதாரமும் எடுப்பவர், மகனை எப்படி காப்பாற்றுகிறார்?, அவரது மகனை சிக்கலில் சிக்க வைத்தது யார்? எதற்காக? என்பதை மாஸாக சொல்வதே ‘குட் பேட் அக்லி’.
ரெட் டிராகன் மற்றும் ஏ.கே என்று அதிரடி காட்டியிருக்கும் அஜித் குமார், தனது ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு மாஸ் திருவிழாவை நடத்தியிருக்கிறார். தனது ஒவ்வொரு அசைவிலும் மாஸ் காட்டியிருப்பவர், வசன உச்சரிப்பு, ஆக்ஷன், மகன் மீதான செண்டிமெண்ட் என அனைத்தையும் அளவாக கையாண்டு அவ்வபோது ரசிகர்களை கைதட்ட வைத்து விசில் அடிக்க வைக்கிறார்.
அஜித்தின் மனைவியாக நடித்திருக்கும் திரிஷாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகள் இல்லை என்றாலும், படம் முழுவதும் வருகிறார். அவ்வபோது அஜித்தை ஆசையாய் பார்ப்பது, சண்டை போடுவது என்று தனது பணியை நிறைவாக செய்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், ஜானி மற்றும் ஜாமி என்ற இரண்டு கதாபாத்திரங்களில் மிரட்டியிருக்கிறார். அஜித் ஒரு பக்கம் ஸ்டைலிஷாக மாஸ் காட்டினாலும், தனது மிரட்டலான நடிப்பு மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பும் அர்ஜுன் தாஸ், நடிப்பையும் தாண்டி “ஒத்த ரூபாய் தாரேன்...” மற்றும் “தொட்டு தொட்டு பேசும் சுல்தானா...’ ஆகிய பாடல்களுக்கு ஸ்டைலிஷான குத்தாட்டம் போட்டு தன் கதாபாத்திரத்தையும் கொண்டாட வைத்திருக்கிறார்.
சுனில், பிரசன்னா, பிரியா வாரியர், பிரபு ஆகியோரது திரை இருப்பும், சிம்ரன், சைன் டாம் ஜாக்கோ ஆகியோரது சிறப்பு தோற்றமும் கமர்ஷியல் அம்சங்களுக்கு கைகொடுத்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் அஜித்தை அனுஅனுவாக ரசித்து காட்சிகளை படமாக்கியிருக்கிறார். எந்த கோணத்தில் காண்பித்தாலும் அஜித்தை படு மாஸாகவும், ஸ்டைலிஷாகவும் காட்டுவதற்கு அதிகம் மெனக்கெட்டிருப்பவர், திரிஷாவை இளமையாக காண்பித்திருக்கிறார். முழு படத்தையும் கலர்புல்லாகவும், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பழைய பாடல்கள் ரீமேக் செய்யப்பட்ட விதம் ஆட்டம் போட வைக்கிறது. திடீரென்று வரும் கானா பாடல்களும், பின்னணி இசையிலும் கமர்ஷியல் மசாலா சற்று தூக்கலாக இருந்தாலும், காட்சிகளில் இருக்கும் பில்டப்புகளுக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.
அஜித் மாஃபியா வாழ்க்கை, திருமணம், குழந்தை பிறப்பு என மூன்று பாகங்கள் எடுக்கும் அளவுக்கு படத்தில் ஏகப்பட்ட விசயம் இருந்தாலும், 2 மணி நேரம் 20 நிமிடங்களில் அதை சுருக்கி சொல்லியிருக்கும் படத்தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டியின் பணி படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
சண்டைப்பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர், ஆடை வடிவமைப்பாளர்கள் அனு வர்தன், ராஜேஷ் குமாராசு, கலை இயக்குநர் ஜி.எம்.சேகர் ஆகியோரது பணியும் திரையில் பளிச்சிடுகிறது.
எழுதி இயக்கியிருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் என்ற மாஸ் ஹீரோவை வைத்து மாபெரும் மாஸ் திருவிழா நடத்தியிருக்கிறார். இயக்குநராக அல்லாமல் அஜித்தின் ரசிகராக அவர் நிற்பது, நடப்பது, சிரிப்பது, முறைப்பது, காதலிப்பது, கவலைப்படுவது, கார் ஓட்டுவது என அனைத்தையும் ரசித்து ரசித்து காட்சிகளை வடிவமைத்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது.
படத்தில் லாஜிக் இல்லை என்றாலும், அஜித் என்ற மாஸ் ஹீரோவை வைத்துக்கொண்டு மிகப்பெரிய மேஜிக் செய்திருக்கும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆக்ஷன் மற்றும் மாஸ் விருந்து வைத்து அவர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘குட் பேட் அக்லி’ அஜித்தின் அட்டகாசம்!
ரேட்டிங் 3.5/5