’குருமூர்த்தி’ திரைப்பட விமர்சனம்
Casting : Natty Natraj, Ramki, Poonam Bajwa, Sanjana Singh, Ashmitha, Ravi Mariya, Manobala
Directed By : KB Danasekar
Music By : Sadyadev Udhayasankar
Produced By : Friends Talkies - Sivasalabathy, Sai Saravanan
தொழிலதிபரான ராம்கியின் 5 கோடி ரூபாயை ஒருவர் திருடி விடுகிறார். அந்த பணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜ் ஈடுபட, திருடப்பட்டவரிடம் இருந்த பணம் வேறு ஒருவரின் கையில் கிடைக்கிறது. இப்படி ஒருவர் கையில் இருந்து மற்றொருவருக்கு கைமாறிக்கொண்டிருக்கும் 5 கோடி ரூபாயை நட்டி நட்ராஜ் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் ‘குருமூர்த்தி’.
போலீஸ் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தும் நட்டி நட்ராஜ், தனது சுறுசுறுப்பான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருகிறார். மனைவி பிரசவ வலியில் துடித்தாலும், கடமை தான் முக்கியம் என்று பயணிப்பவர், பணத்திற்காக மனம் மாறும் இடத்தில் நடிப்பில் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார்.
தொழிலதிபராக நடித்திருக்கும் ராம்கி அமர்க்களமான பாடலோடு அறிமுகமானாலும் அதன் பிறகு அவரது வேடம் அமைதியாகவே பயணிக்கிறது. இருந்தாலும் கதையின் மையப்புள்ளியான அவர் யார் கண்ணும் தெரியாமல் போலீஸுடன் பயணிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
கதாநாயகியாக நடித்திருக்கும் பூனம் பஜ்வா, பாடல் காட்சிக்கு மட்டுமே பயன்பட்டிருந்தாலும், அவரது அந்த ஒரு பாடல் காட்சி ஒட்டு மொத்த படத்தையே தூக்கி நிறுத்தும்படி இருக்கிறது.
காவலர்களாக நடித்திருக்கும் ரவி மரியா, மனோ பாலா ஆகியோர் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள், பல இடங்களை சோதிக்கிறார்கள்.
சஞ்சனா சிங், அஸ்மிதா ஆகியோர் கவர்ச்சிக்காக மட்டும் இன்றி கதைக்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
சத்யதேவ் உதயசங்கரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை ரகம்.
ஒளிப்பதிவாளர் தேவராஜ் கதைக்கு ஏற்றபடி ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல் காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருப்பதோடு, ரசிக்கும்படியும் படமாக்கியிருக்கிறார்.
கதை எழுதி இயக்கியிருக்கும் கே.பி.தனசேகர், ஒரு கருவை வைத்துக்கொண்டு காமெடி சஸ்பென்ஸ் ஜானரில் திரைக்கதை அமைத்திருக்கிறார். முதல் பாதியில் காட்சிகள் சம்மந்தமே இல்லாமல் பயணித்தாலும், இரண்டாம் பாதி சுவாரஸ்யமாக நகர்கிறது.
பணம் ஒவ்வொருவர் கையில் மாறுவதும், அதை போலீஸ் பின் தொடர்வது, திடீரென்று நட்டி நட்ராஜ் மனம் மாறுவது போன்றவை மூலம் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தும் இயக்குநர் பூனம் பஜ்வாவை மிக சரியாக பயன்படுத்தி ரசிகர்களை பரவசப்படுத்துகிறார்.
மொத்தத்தில், ‘குருமூர்த்தி’-யை பூனம் பஜ்வாவின் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.
ரேட்டிங் 2.5/5