Sep 29, 2017 04:17 AM

’ஹர ஹர மஹாதேவகி’ விமர்சனம்

411d586fabb6b91508b9e6fc5db689be.jpg

Casting : கெளதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, ரவி மரியா, நமோ நாராயணன், சதீஷ், ராஜேந்திரன், கருணாகரன்

Directed By : சந்தோஷ் பி.ஜெயக்குமார்

Music By : பாலமுரளி பாலு

Produced By : தங்கம் சினிமாஸ் - எஸ். தங்கராஜ்

 

அடல்ஸ் காமெடி படம் என்ற அடையாளத்தோடு வெளியாகியிருக்கும் ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தில், அப்படி என்ன ஆபாசம் இருக்கும் என்று யோசித்தவாறு தியேட்டருக்குள் சென்றேன். ஆனால், ஆண்களுக்கு நிகராக பெண்கள் கூட்டமும் இருந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டது மட்டும் கிடையாது, படமும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது.

 

சமந்தா குட்டி டவுசர் போடுவது போலவும், ஸ்ரேயா இடுப்பை காட்டுவது போல கூட, உடை உடுத்தாத ஹீரோயின், என்று காட்சிகளில் எந்த ஆபாசமும் இல்லை, என்றாலும் தனது நெருங்கிய நண்பர்கள் ஜாலியாக மனசை விட்டு பேசும் போது, இடை இடையே பேசும் அப்படிப்பட்ட வார்த்தைகளை மறைமுகமாகவும், காமெடியாகவும் பேசியிருப்பது தான் இப்படத்தின் ஏ சான்றிதழுக்கான காரணம்.

 

சரி கதைக்கு வரும், படத்தின் ஆரம்பத்திலேயே ஹீரோ கெளதம் கார்த்திக்கும், ஹீரோயின் நிக்கி கல்ராணிக்கும் இடையே காதல் முறிவு ஏற்படுகிறது. காதலிக்கும் போது ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்ட பரிசு பொருட்களை திரும்ப அவர் அவர் இடம் கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்கள். அதன்படி, நிக்கி கல்ராணி தான் கொடுத்த பொருட்களை எடுத்துக் கொண்டு ‘ஹர ஹர மஹாதேவகி’ என்ற ரிசார்ட்டுக்கு கெளதம் கார்த்திக்கை வர சொல்கிறார். அவரும் தன்னிடம் இருக்கும் நிக்கியோட பொருட்களை ஒரு பேக்கில் போட்டு எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்.

 

கெளதம் கார்த்திக் வைத்திருக்கும் பேக் போன்ற ஒரு பேக்கில், அரசியல்வாதி ஒருவர் வெடிகுண்டு வைத்து அதை கட்சி கூட்டத்தில் வைக்கும்படி ராஜேந்திரன் மற்றும் கருணாகரனிடம் கொடுத்து அனுப்ப, அதைப்போல மற்றொரு பேக்கில் ஒரு கோடி ரூபாய் கள்ள நோட்டுக்களுடன் பால சரவணன் சுற்றி வர, ஒரு கட்டத்தில் இந்த பேக்குகள் மாறிவிட, இறுதியாக அனைத்து பேக்குகளும் ஹர ஹர மஹாதேவகி ரிசார்ட்டுக்கு வர, அங்கே ஒரு குழந்தை கடத்தப்பட்டு, அவரது பெற்றோர்களிடம் கடத்தல்காரர்கள் கேட்ட ஒரு கோடி ரூபாயும், இதே போன்ற ஒரு பேக்கில் வைத்து கொடுக்கப்பட, அந்த பேக்கும் இந்த பேக்குகளுடன் கலந்துவிட, அவர் அவர் பேக்குகளை தேடி அந்த ரிசார்ட்டுக்குளே அலைபவர்கள், தங்களது பேக்குகளை கண்டுபிடித்தார்களா இல்லையா, என்பது ஒரு பக்கமும், கெளதம் கார்த்திக் - நிக்கி கல்ராணி இடையே எப்படி காதல் ஏற்பட்டது, அது ஏன் பிரேக் அப், ஆனது என்பதை மறுபக்கமும், பலான வசனங்கள் மூலம் சொல்லினாலும், ரசிகர்களை படத்தின் ஆரம்பம் முதல் முடியும் வரை இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார்.

 

இப்படத்தின் கதை ரொம்ப பழசா இருக்கே! என்று யோசிக்கிறீர்களா? ஆனால், இயக்குநர் கதை என்ற ஒன்றையே யோசிக்கவில்லை. வாட்ஸ்-அப்பில் வந்த ‘ஹர ஹர மகாதேவகி’-யின் ஆடியோவை மட்டுமே யோசித்து இந்த படத்தை எடுத்திருக்கிறார். இப்படியும் ஒரு படம் எடுக்கலாம், என்று கோடம்பாக்கத்திற்கு புது ரூட்டை போட்டுள்ள இயக்குநர், படத்தின் டைடில் போடும் போதே, ஹர ஹர மஹாதேவகியின் ஹஸ்கி வாய்ஸில் ச்ச்சீ...வசனங்களை பேசினாலும், அதை ரசிகர்களும் சிரித்து ரசிக்கிறார்கள். ஒரு படத்தின் டைடில் போடும் போதே ரசிகர்கள் சிரிக்கிறார்கள் என்றால் அது இந்த படமாகத்தான் இருக்கும்.

 

படத்தில் உள்ள அத்தனை நடிகர்களும் பச்சை வசனங்களை பக்குவமாக பேசி ரசிகர்களிடம் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டாலும், ஹீரோ கெளதம் கார்த்திக் அப்படிப்பட்ட வசனங்களை எந்த அளவுக்கு பேச வேண்டுமோ, அந்த அளவுக்கு பேசி, தான் நல்ல பையன் என்பதை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி விடுகிறார். 10 க்கும் மேற்பட்ட ஹீரோக்கள் நிராகரித்த கதையாம் இது. இப்படிப்பட்ட படத்தில் நடிப்பது என்பது பெரிய விஷயம் தான், அதை கெளதம் கார்த்திம் நன்றாகவே கையாண்டிருப்பதோடு, தனது கெட்டப்பிலும் நல்ல மாற்றத்தை காண்பித்திருக்கிறார்.

 

கொழுக் மொழுக்கென்று இருக்கும் நிக்கி கல்ராணி, தனது சுட்டித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்வதுடன், கிளாமர் ரோலுக்கு மட்டும் அல்ல காமெடி படத்திற்கும் பக்காவாக பொருந்துவேன் என்பதை நிரூபித்துள்ளார்.

 

மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் ஆகியோரது காமெடி ஆரம்பத்தில் எடுபடவில்லை என்றாலும், படத்தின் கடைசி 20 நிமிடத்தில் அவர்கள் செய்யும் காமெடியால், சிரிப்பு சத்தத்தில் திரையரங்கமே அதிர்கிறது. 

 

சதீஷின் பேச்சு அதிகமாக இருந்தாலும், அதனால் ரசிகர்கள் சிரிப்பது என்னவோ மிக மிக குறைவாகவே இருக்கிறது. அரசியல்வாதியாக வரும் ரவி மரியா, அவரது எடுபுடி நமோ நாராயணன் கூட்டணியின் அடுக்கு மொழி காமெடிகள் அனைத்தும் அப்ளாஷ் பெரும் அம்சங்களாக உள்ளது. போலீஸ் அதிகாரியாக வரும் ஆர்.கே.சுரேஷ் சீரியஸ் போலீசா அல்லது சிரிப்பு போலீசா என்பது தெரியாத வகையில் காமெடியை ரொம்ப கமுக்கமாகவே கையாண்டுள்ளார்.

 

பாலமுரளி பாலுவின் இசையும், செல்வகுமார் எஸ்.கே-வின் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. 

 

இந்த படத்தின் நிகழ்வு ஒன்றில், தங்களது மனசுக்கு பிடித்தவர்களுடன் படத்தை பார்த்தால் மகிச்சியடைவீர்கள், என்று இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் கூறியிருந்தார். அவர் சொன்னது உண்மை தான் என்பதை நிரூபிக்கும் அளவுக்கு ஜோடி ஜோடியாக இப்படத்திற்கு வந்திருந்தவர்கள், ஹர ஹர மஹாதேவகியின் வாய்ஸையும், கேரக்டர்கள் பேசும் இரட்டை அர்த்த வசனத்தையும் ஒருவரை ஒருவர் பார்த்து வழிந்துக்கொண்டே ரசிக்க, கூட்டமாக வந்திருந்த நண்பர்கள் விசில் அடித்து ஆர்பறிக்கிறார்கள்.

 

மொத்தத்தில், இளசுகளை மட்டுமே டார்கெட் வைத்துள்ள இந்த ‘ஹர ஹர மஹாதேவகி’ அவர்களை மட்டும் இன்றி, தியேட்டருக்கு வந்திருந்த அனைத்து ரசிகர்களை ஆனந்தத்தில் மூழ்கடித்துவிடுகிறது.

 

ஜெ.சுகுமார்