’ஹீரோ’ விமர்சனம்
Casting : Sivakarthikeyan, Kalyani Priyadarshan, Arjun
Directed By : PS Mithran
Music By : Yuvan Shankar Raja
Produced By : KJR Studios Kotapadi J. Rajesh, T. Ezhumalaiyan
‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் சூப்பர் ஹீரோ படமான ‘ஹீரோ’ எப்படி இருக்கிறது, என்பதை பார்ப்போம்.
பிரிண்டிங் பிரஸ் நடத்தி வரும் சிவகார்த்திகேயன், திறமை இருந்தும் மதிப்பெண், தேர்ச்சி ஆகியவற்றால் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காமல் கஷ்ட்டப்படுபவர்களுக்காக, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் மற்றும் ஜாதி உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை போலியாக அடித்து கொடுக்கும் சேவையையும் மக்களுக்கு செய்வதோடு, பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சீட் வாங்கிக் கொடுக்கும் ஏஜெண்டாகவும் செயல்பட்டு பணம் சம்பதிக்கிறார். கூடவே ஹீரோயின் கல்யாணியை கண்டதும் காதல் கொண்டு, அவருக்கு ரூட்டு போட்டுக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே, தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்காக பிரத்யேகமான பள்ளி ஒன்றை நடத்தி வரும் அர்ஜுன், அவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்கும் பணியை மேற்கொண்டு வர, அப்பள்ளி மாணவியான இவானா, உப்பு தண்ணீரில் ஓடும் என்ஜினை கண்டுபிடிப்பதோடு, ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிக்க ஆசைப்படுகிறார். ஆனால், அவர் குறைவான மதிப்பெண் எடுத்ததாலும், பணம் இல்லாததாலும் அவருக்கு எந்த கல்லூரியிலும் சீட் கிடைக்காமல் போக, அவரை தங்கையாக நினைக்கும் சிவகார்த்திகேயன், அவர் கண்டுபிடித்த உப்பு தண்ணீரில் ஓடும் என்ஜினை காட்டி பெரிய கல்லூரி ஒன்றில் அவருக்கு சீட் வாங்கிவிடுகிறார். அதன் பிறகு, இவானா வேறு ஒருவருடைய திட்டத்தை திருடி தான் அந்த உப்பு தண்ணீரில் இயங்கும் என்ஜினை கண்டுபிடித்தார், என்று சிலர் வழக்கு தொடர, அவர் மீது அறிவு திருடி என்ற பட்டம் விழுகிறது. இதனால், அவர் தற்கொலை செய்துக் கொள்கிறார். அத்துடன் அர்ஜுனும், தனது பள்ளி மற்றும் அதில் இருக்கும் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை அழித்துவிட்டு தலைமறைவாகிவிடுகிறார்.
இவானாவின் தற்கொலைக்கு நியாயம் கேட்க கிளம்பும் சிவகார்த்திகேயனை ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சிக்க, அவரை காப்பாற்றும் அர்ஜுன், நம் நாட்டில் திறமையானவர்களுக்கு மதிப்பில்லை என்றும், நமது கல்வி சிஸ்ட்டத்தால் சிறந்த வேலையாட்களை தான் உருவாக்க முடியும், சிறந்த கண்டுபிடிப்பாளர்களை உருவாக்க முடியாது, என்பதை சிவகார்த்திகேயனிடம் விளக்குவதோடு, இப்படி புதிய கண்டுபிடிப்புகளால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரிய இழப்பு ஏற்படுவதால், அவர்கள் இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகளையும், அதை கண்டிபிடுப்பவர்களையும் அழிப்பதை பற்றியும் கூற, அவர்களை காப்பாற்றி உலகிற்கு தெரியப்படுத்தும் முயற்சியில் இறங்கும் சிவகார்த்திகேயன், கார்ப்பரேட் நிறுவனங்களின் பாதுகாவலராக இருக்கும் வில்லன் அபேய் தியோலை அழிக்க சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார். அதன் பிறகு நடப்பவை என்ன என்பது தான் மீதிக்கதை.
ஸ்மார்ட்போன் உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் ஆபத்துகளை ‘இரும்புத்திரை’ மூலம் அழுத்தமாக பதிவு செய்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன், தற்போதைய கல்வி முறையால் எதிர்காலத்தில் நாம் எத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ள இருக்கிறோம், என்பதை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சித்திருப்பவர், அதில் தோல்வியடைந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். காரணம், இடையில் அவர் சொருகிய சூப்பர் ஹீரோ என்ற முகமூடி தான்.
சிவகார்த்திகேயனை பொருத்தவரை, வெறும் காமெடி ஹீரோவாக நடிக்காமல், கதைக்கு ஏற்ற ஆக்ஷன் ஹீரோவாகவும் நடிக்க வேண்டும், என்று தொடர்ந்து முயற்சிக்கிறார். இருந்தாலும், அவருக்கு இந்த விஷயத்தில் தொடர் தோல்விதான் கிடைக்கிறது. வேலைக்காரன் படத்தில் பார்த்த அதே சிவகார்த்திகேயனாக இதிலும் வலம் வருபவர், சூப்பர் ஹீரோ கெட்டப்பில் கூட அடி வாங்குவது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம். நடிப்பை பொருத்தவரை அவரிடம் எந்த குறையும் சொல்ல முடியாது. எதிர்காலத்தில் அவரது முயற்சிக்கு வெற்றிக்கிடைக்கும் என்று நம்புவோம்.
அறிமுக நாயகி கல்யாணி பிரியதர்ஷன் அழகாக இருக்கிறார். மற்றபடி நடிக்க கூடிய வாய்ப்புகள் அவருக்கு இல்லை. வில்லனாக நடித்திருக்கும் பாலிவுட் நடிகர் அபேய் தியோல், தனது கதாப்பாத்திரத்தை கச்சிதமாக கையாண்டிருக்கிறார்.
அர்ஜூன், சிவகார்த்திகேயனுக்கு இணையான ஒரு வேடத்தில் நடு நடுவே ஆக்ஷனில் ஈடுபடுகிறார். கல்வி முறையை விமர்சிக்கும் ஒரு கதாப்பாத்திரமாக நடித்திருக்கும் அர்ஜுன், சில காட்சிகளில் தனது ஜெண்டில்மேன் கதாப்பாத்திரத்தையும் நினைவூட்டியிருக்கிறார்.
தற்கொலை செய்துகொள்ளும் மாணவியாக நடித்திருக்கும் இவானா, எளிமையான நடிப்பால் கவர்கிறார். தனது அப்பாவுக்காக அவர் கண்டுபிடிப்பும், அதை பொய் என்று சொல்லும் போது அவர் எடுக்கும் முடிவும் ரசிகர்களின் மனதை தொட்டுவிடுகிறது. ரோபோ சங்கர், திரையை நிருப்பியிருக்கிறாரே தவிர காமெடி என்ற ஒன்றை துளி கூட செய்யவில்லை. அப்படி அவர் செய்தாலும், அதற்கு தியேட்டரில் ஒருவர் கூட சிரிக்காமல் இருக்க, அவரே அவ்வபோது சிரித்துக் கொள்கிறார்.
ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஆக்ஷன், சேசிங் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லை. க்ளைமாக்ஸ் பாடல் மட்டும் கவனிக்க வைக்கிறது. பின்னணி இசையும் பெரிதாக எடுபடவில்லை. குறிப்பாக சூப்பர் ஹீரோ என்ற கதாப்பாத்திரத்திற்கான குறிப்பிட்ட பீஜியம் இல்லாமல் இருப்பது பெருத்த ஏமாற்றம்.
கல்வி முறையை விமர்சிப்பதோடு, எப்படிப்பட்ட கல்வி முறை இருக்க வேண்டும், என்று இயக்குநர் பி.எஸ்.மித்ரன் சொல்லியிருப்பது பாராட்டக்கூடியது. குறிப்பாக எந்த மாணவர், எந்த துறையில் திறமையானவர்களாக இருக்கிறார்களோ, அதை அறிந்து அவர்களுக்கு கட்பிக்க வேண்டும், என்று சொல்பவர், அதை மட்டுமே சொல்லியிருந்தால், அவரது ‘இரும்புத்திரை’ போல இந்த ’ஹீரோ’வும் மக்கள் மனதில் நின்றிருக்கும். ஆனால், சூப்பர் ஹீரோ என்ற ஒரு கான்சப்ட்டை கையில் எடுத்துக் கொண்டவர், இரண்டையுமே சரியாக சொல்ல முடியாமல் திணறியிருக்கிறார்.
மக்கள் தொகையில் முன்னணியில் இருக்கும் இந்தியா, புதிய கண்டுபிடிப்புகளில் பின்னணியில் இருப்பதை சுட்டிக்காட்டியிருக்கும் இயக்குநர் மித்ரன், இங்கு அறிவாளிகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை, என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். பிள்ளைகளின் ரஃப் நோட்டுகளை எடுத்துப் பாருங்கள், அவர்களின் திறமைகள் தெரியும், என்று சொல்லி கைதட்டல் வாங்குவதோடு, படம் பார்க்கும் அனைத்து பெற்றோர்களையும், அவர்களது பிள்ளைகளின் ரஃப் நோட்டுகளை எடுத்து பார்க்க வைத்துவிடுகிறார்.
நல்ல விஷயத்தை கமர்ஷியலாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் மித்ரனின் ஐடியாவை பாராட்டினாலும், அதை அவர் சொல்லிய விதம் நேர்த்தியாக இல்லாமல் போவதால், படத்துடன் நாமும் ஒன்றாமல் போய்விடுகிறோம். ஒரு கட்டத்தில் அவரது சூப்பர் ஹீரோ நமக்கு ஹீரோவாகவே தெரியாமல் போய்விடுகிறார்.
மொத்தத்தில், ஐடியாக்களை காப்பாற்றும் இந்த ’ஹீரோ’, தனது நல்ல ஐடியாவை காப்பாற்ற தவறிவிட்டார்.
ரேட்டிங் 3/5