‘ஹிட்லர்’ திரைப்பட விமர்சனம்
Casting : Vijay Antony, Riya Suman, Gautham Vasudev Menon, Charanraj, Reddinn Kingsley, Vivek Prasanna Tamizh, Aadukalam Naren
Directed By : Dana.S.A
Music By : Vivek - Mervin
Produced By : Chendur Films - T.D.Rajha - D.R. Sanjay Kumar
வேலைக்காக மதுரையில் இருந்து சென்னைக்கு வரும் விஜய் ஆண்டனி, ரயில் நிலையத்தில் நாயகி ரியா சுமனை கண்டதும் காதல் கொள்கிறார். இவர்களது காதல் கதை ரயில் பயணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அமைச்சரின் ரூ.400 கோடியை எடுத்துச் செல்லும் அவரது ஆட்களை கொலை செய்துவிட்டு அந்த பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடிக்கிறது. அந்த கும்பலை பிடிப்பதற்கான பொறுப்பு காவல்துறை அதிகாரி கெளதம் மேனனுக்கு வழங்கப்பட, அவரது விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வருகிறது. அது என்ன? என்பது தான் ‘ஹிட்லர்’.
வழக்கமான நடிப்பு, ஒரே மாதிரியான கதை தேர்வு என்ற குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிப்பதற்காக கமர்ஷியல் கதைகளை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டுவதோடு, தனது தோற்றத்தையும் மாற்றிக்காட்டும் முயற்சிகளில் விஜய் ஆண்டனி ஈடுபடுவது தவறில்லை என்றாலும், மாற்றம் தேடி இப்படி அதர பழைய கதையில் நடித்திருப்பது பெரும் சோகம். ஒரு நாயகனாக விஜய் ஆண்டனி தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டு, காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் எந்தவித குறையும் இல்லாமல் நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ரியா சுமனுக்கு வழக்கமான கமர்ஷியல் கதாநாயகி வேடம் தான். அதை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கெளதம் மேனன், தனது வழக்கமான பாணியில் தனது கதாபாத்திரத்திற்கு மட்டும் இன்றி திரைக்கதை ஓட்டத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வில்லனாக நடித்திருக்கும் சரண்ராஜ், அவரது தம்பியாக நடித்திருக்கும் தமிழ், ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் நவீன் குமார்.ஐ, லைவ் லொக்கேஷன்களில் காட்சிகளை படமாக்கிய விதம் படத்திற்கு சிறப்பு சேர்த்திருப்பதோடு, நீண்ட நாட்களுக்குப் பிறகு மின்சார ரயிலில் காதல் பயணத்தை காட்சிப்படுத்திய விதம் மணிரத்னம் ரசிகர்களை நிச்சயம் கொண்டாட வைக்கும்.
விவேக் - மெர்வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மசாலாத்தனம் நிறைந்ததாக இருக்கிறது.
வழக்கமான கமர்ஷியல் ஆக்ஷன் கதை என்றாலும் தன்னால் முடிந்தவரை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்த முயற்சித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சங்கத்தமிழன்.இ.
மக்கள் பிரச்சனையை கருவாக வைத்துக்கொண்டு கமர்ஷியல் ஆக்ஷன் ஜானரில் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் தனா. எஸ்.ஏ, பாலம் என்ற பழைய பிரச்சனையை மையப்புள்ளியாக பேசியிருக்கிறார். மையப்புள்ளி தான் பழசு என்றாலும் அதற்கான தீர்வாக அவர் சொல்வதும் அதே பழைய பாணியில் இருப்பது படத்தை தொய்வடைய செய்கிறது.
திரைக்கதையில் இருக்கும் தொய்வையும் மறந்து சில விசயங்கள் படத்தை ரசிக்க வைக்கிறது என்றால், விஜய் ஆண்டனி, ரியா சுமன் இடையிலான காதல், ஆக்ஷன் மற்றும் கெளதம் மேனனின் திரை இருப்பு போன்றவைகள் தான்.
மொத்தத்தில், இந்த ‘ஹிட்லர்’ மிரட்டவில்லை.
ரேட்டிங் 2.5/5