‘ஹாட் ஸ்பாட்’ திரைப்பட விமர்சனம்
Casting : Kalaiyarasan, Sofia, Sandy, Ammu Abhirami, Janani, Subash, Gouri G Kishan, Adithya Bhaskar,
Directed By : Vignesh Karthick
Music By : Satish Raghunathan, Vaan
Produced By : Balamanimarban K J, Suresh Kumar, Gokul Benoy
கதை சொல்ல வரும் இயக்குநரிடம் வித்தியாசமான கதையை எதிர்பார்க்கும் தயாரிப்பாளர் அவருக்கு 10 நிமிட நேரத்தை மட்டுமே கொடுக்கிறார். அதற்குள் கதை சொல்லி தயாரிப்பாளரை கவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இயக்குநர், ஆண் கழுத்தில் பெண் தாலி கட்டுவதும், அதையடுத்து திருமணத்திற்குப் பிறகு பெண்கள் செய்யும் அத்தனை விசயங்களையும் ஆண்கள் செய்வது போல் சித்தரித்து ஒரு கதை சொல்கிறார். பெண்களுக்கு பெருமை சேர்ப்பதோடு, அவர்களால் சொல்ல முடியாத மன குமுறல்களை சொல்லும் விதமாக இருக்கும் இந்த கதையை கேட்ட தயாரிப்பாளர், தொடர்ந்து இயக்குநரிடம் கதை கேட்கிறார்.
இதேபோல், மேலும் மூன்று கதைகளை இயக்குநர் சொல்கிறார். இந்த மூன்று கதைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாமல் அந்தாலஜி போல் அமைந்தாலும், இந்த நான்கு கதைகளையும் சொல்லும் இயக்குநருக்கும், அதை கேட்கும் தயாரிப்பாளருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அவர்கள் தான் இந்த படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் மற்றும் தயாரிப்பாளர் கே.ஜெ.பாலமணிமார்பன்.
இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து சொல்லும் இந்த நான்கு கதைகளில், முதல் கதையான கெளரி கிஷன் - ஆதித்யா பாஸ்கர் நடித்திருக்கும் திருமண கதை பெண்ணியத்தை போற்றும் வகையில் இருப்பதோடு, ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதிக்கும் தற்போதைய காலக்கட்டத்திலும் திருமணம் என்ற பெயரில் பெண்கள் இன்னமும் ஆணதிக்கத்திற்கு உற்பட்டு இருப்பதை சாட்டையடியாக சொல்லி சபாஷ் சொல்ல வைக்கிறது.
இரண்டாவதாக சொல்லப்படும் சாண்டி - அம்மு அபிராமி நடித்திருக்கும் காதல் கதை விவகாரமானது, அதனால் தான் அந்த கதையில் இருக்கும் பிரச்சனைக்கு எந்தவித தீர்வும் சொல்லாமல், அதற்கான கேள்வியை ரசிகர்களிடமே விட்டுவிடுகிறார் இயக்குநர்.
“உங்களுக்கு வந்தால் இரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? என்று பெண்கள் ஆண்களை பார்த்து கேட்கும் கேள்வியை மையப்படுத்திய மூன்றாவது கதையில் சுபாஷ் - ஜனனி நடித்திருக்கிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆண் பாலியல் தொழிலாளியாக மாறும் சுபாஷ், தனது காதலி ஜனனிக்கு விசயம் தெரிந்தவுடன், அது காமம், உன்னிடம் மட்டும் தான் காதல், என்று சொல்வதும், அதற்கு ஜனனி பதிலடியாக எடுக்கும் அதிரடி முடிவு ஒரு பக்கம் இருந்தாலும், அதே கதையில் அம்மா - மகன் இடையிலான காட்சி மற்றும் அதைச் சார்ந்த இரட்டை அர்த்த வசனங்கள் பெரும் அபத்தம்.
கலையரசன் - சோஃபியா ஜோடியை மையமாக வைத்து சொல்லப்படும் நான்காவது கதை, தொலைக்காட்சிகளில் குழந்தைகளை வைத்து நடத்தப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் கொடுமைகளை வெளிக்காட்டும் விதமாக இருக்கிறது. சிறுவர்களை பணியில் அமர்த்தினால் குற்றம் என்று சொல்லும் சட்டம், இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறுவர்களை நடிக்க வைப்பதோடு, வயதுக்கு மீறிய காட்சிகள் மற்றும் வசனங்களில் நடிக்க வைத்து கொடுமைப்படுத்துவதை ஏன் கேட்பதில்லை? என்ற கேள்வியை முன் வைத்திருக்கும் இயக்குநர், பெற்றோர்களை எச்சரிக்கவும் செய்திருக்கிறார்.
நான்கு கதைகளில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் தங்களது நடிப்பு மூலம் கதைகளில் இருக்கும் உணர்வுகளை ரசிகர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்கள்.
கோகுல் பினாயின் ஒளிப்பதிவில் நான்கு கதைகளும் நான்கு விதமான காட்சியமைப்புகளில் கவனம் பெறுகிறது.
இசையமைப்பாளர்கள் சதீஷ் ரகுநாதன் மற்றும் வான் இசையில் கதையை சுற்றி வரும் பின்னணி பாடலும், பின்னணி பீஜியமும் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது.
அந்தாலஜி முறையில் நான்கு சிறு சிறு கதைகளை வைத்துக்கொண்டு ஒரு முழுநீள திரைப்படமாக கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், முதல் கதையிலேயே ரசிகர்களை தன்வசப்படுத்தினாலும், அதை தொடர்ந்து சொல்லும் இரண்டு கதைகள் மற்றும் அதை கையாளும் விதத்தில் முகம் சுழிக்க வைத்துவிடுகிறார்.
பிறகு இறுதியாக சொல்லும் ‘ஃபேம் கேம்’ கதை மூலம் மீண்டும் ரசிகர்களை தன்வசப்படுத்துபவர், பெற்றோர்களுக்கு அறிவுரை சொல்லி பாராட்டு பெற்றுவிடுகிறார்.
மொத்தத்தில், இந்த ‘ஹாட் ஸ்பாட்’ நல்லது பாதி, கெட்டது பாதி.
ரேட்டிங் 3/5