Jan 08, 2022 05:30 AM

’இடரினும் தளரினும்' விமர்சனம்

33cd4cf2e41271774e5f7939d7852720.jpg

Casting : Raghava Hari Kesava, Radharavi, Ramana, Iraiyanpu, Selina

Directed By : Raghava Hari Kesava

Music By : Soumiyan

Produced By : Sri Gokulam Cinemas, Jingle Bell Films International - Mohan Kumar and Sagayam

 

சொத்துக்காக தனது சொந்த அண்ணனான நாயகன் ராகவா ஹரிகேசவாவை அழிக்க திட்டம் போடும் இறையன்பு, மந்திரவாதி மூலம் அண்ணன் குடும்பத்தின் மீது குட்டிசாத்தானை ஏவி விடுகிறார். அந்த சாத்தான் ராகவா ஹரிகேசவாவின் மகளை பிடித்துக்கொண்டு கஷ்ட்டப்படுத்துகிறது. மறுபுறம் மந்திரம் வைத்த இறையன்பு மற்றும் அவரது காதலியும் மந்திரவாதியால் பாதிக்கப்பட ஒட்டு மொத்த குடும்பமே, சூனியத்தால் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ள இறுதியில் அவர்கள் பிரச்சனையில் இருந்து விடுபட்டார்களா இல்லையா, இதற்கு பின்னணி என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.

 

முன்ஜன்மத்தில் செய்த பாவங்களுக்கு இப்பிறவியில் தண்டனை உண்டு, அது எப்படி, எந்த வழியில், எந்த ரூபத்தில் வரும், என்பதை மிக தெளிவாகவும், திகிலாகவும் விவரிக்கிறது படம்.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ராகவ ஹரிகேசவா, மகள் கஷ்ட்டப்படுவதை பார்த்து கதறும் தந்தையாக பொருப்பான நடிப்பையும், அகோரி வேடத்தில் ஆக்ரோஷமான நடிப்பையும் வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார்.

 

படத்தின் திருப்புமுனை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ராதாரவியின் அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

மந்திரவாதியாக நடித்திருக்கும் ரமணாவின் தோற்றமும், நடிப்பும் பதறவைக்கிறது. போலீஸ் வேடத்தில் நாயகனின் தம்பியாக நடித்திருக்கும் இறையன்பு, செலீனா என அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

செளமியன் இசையில் ”நமச்சிவ வாழ்க...” மற்றும் ”ஹர ஹர சம்போ...” பாடல் ஆன்மீகத்தை உணர வைக்கிறது. சகாயத்தின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருந்தாலும், இரவு காட்சிகளில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் ராகவ ஹரி கேசவா, ஆன்மீகத்தையும், அமானுஷ்யத்தையும் மையமாக வைத்து திகில் படத்தை கொடுக்க முயற்சித்திருப்பதோடு, இப்பிறவியில் ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அவர் செய்த முன்ஜன்ம பாவங்கள் தான் காரணம், என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

முதல் பாதி படத்தில் சற்று தொய்வு ஏற்பட்டாலும், இரண்டாம் பாதியில் ராதாரவி மற்றும் காட்டுவாசியால் பெண்களுக்கு நேரும் கொடுமை போன்ற காட்சிகள்  படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறது.

 

தொழில்நுட்ப ரீதியாக படத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும், இயக்குநர் சொல்ல நினைத்த விஷயம் மற்றும் அதை அவர் சொல்லிய விதம் என முழு திரைப்படமாக பார்க்கும் போது ’இடரினும் தளரினும்’ வித்தியாசமான முயற்சியாக இருக்கிறது.

 

ரேட்டிங் 2.5/5