‘இமைக்கா நொடிகள்’ விமர்சனம்
Casting : Nayanthara, Atharva, Rashi Khanna, Anurag Kashyap
Directed By : R. Ajay Gnanamuthu
Music By : Hiphop Tamizha
Produced By : C. J. Jayakumar
நயந்தாரா நடிக்கும் ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள படங்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்று வரும் நிலையில், அவர் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ அவரது வெற்றிப் பட பட்டியலில் இடம்பெறும் படமாக இருக்கிறதா அல்லது அவரது தொடர் வெற்றிக்கு கரும்புள்ளியாக அமைந்ததா, என்பதை பார்ப்போம்.
சிபிஐ அதிகாரியான நயந்தாரா, பெங்களூரை அதிர வைத்த ருத்ரா என்ற சைக்கோ கொலையாளியை கொன்றுவிட்டு அந்த கேசை முடித்துவிட, சில ஆண்டுகளுக்குப் பிறகு ருத்ரா பெயரில் மீண்டும் அதே பாணியில் கொடூர கொலைகளை அரங்கேற்றும் அனுராக் காஷ்யப், நயந்தாராவிடம் சவால் விட்டு பெரிய மனிதர்களின் பிள்ளைகளை கடத்தி கொலை செய்கிறார். இதனால் நயந்தாராவுக்கு தனது துறையில் கெட்டப்பெயர் ஏற்படுகிறது. எனவே, சைக்கோ கொலையாளியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று ஒட்டு மொத்த சிபிஐ-யும் தீவிரம் காட்டினாலும், அனுராக் காஷ்யப்பின் நிழலை கூட அவர்களால் நெருங்க முடியவில்லை.
இதற்கிடையே நயந்தாராவின் தம்பியான அதர்வாவையும், அவரது காதலி ராஷி கண்ணாவையும் கடத்தும் அனுராக் காஷ்யப், ராஷி கண்ணாவை கடுமையாக தாக்கிவிட்டு, சிபிஐ முன்பு அதர்வாவை சைக்கோ கொலையாளியாக காட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார். இதனால், போலீஸும், சிபிஐ-யும் அதர்வாவை துரத்துவதோடு, நயந்தாராவையும் சஸ்பெண்ட் செய்து ஹவுஸ் அரெஸ்ட் செய்துவிடுகிறது. தன்னை கொலையாளியாக சித்தரித்த அந்த சைக்கோ கொலையாளி யார்? என்பதை கண்டுபிடிக்க அதர்வா களத்தில் இறங்க, மறுபுறம் நயந்தாராவுக்கும் சைக்கோ கொலையாளி குறித்து துப்பு கிடைக்க, அவரும் அவர் யார்? என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார். இறுதியில், அந்த சைக்கோ கொலையாளியை அக்காவும், தம்பியும் கண்டுபிடித்தார்களா, அவர் ஏன் நயந்தாராவை குறி வைத்து தனது கொலைகளை அரங்கேற்றுகிறார் என்பதற்கான விடை தான், ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மீதிக்கதை.
சஸ்பென்ஸ் திரில்லர் படமா? அல்லது காதல் படமா? என்று கேள்வி எழும், அளவுக்கு படத்தில் காதலும், அதை சார்ந்த காட்சிகளும் கரைபுரண்டு ஓடுவது படத்திற்கு பெரும் பாதகமாக அமைந்திருக்கிறது.
நயந்தாரா சிபிஐ அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் என்பது, படத்தில் இடம்பெறும் வசனங்கள் மூலம் தான் நமக்கு தெரிகிறதே தவிர, மற்றபடி அவரது கதாபாத்திரத்தின் மூலமாகவும், நயந்தாரா நடிப்பு மூலமாகவும் நமக்கு தெரியவே இல்லை. ஏதோ ஐடி நிறுவனத்தில் பணிபுரிவது போன்ற ஒரு லுக்கில் இருக்கும் நயந்தாரா, தான் எடுத்துக்கொண்ட கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துபவர் தான் என்றாலும், இப்படத்தில் சிபிஐ என்ற கதாபாத்திரத்தை கையாள தெரியாமல், ஏனோ தானோ என்று நடித்திருக்கிறார்.
நயந்தாராவின் தம்பியாக நடித்திருக்கும் அதர்வாவும், அவரது காதலியுமான ராஷி கண்ணாவும், விறுவிறுப்பாக நகர வேண்டிய சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை, காதல் கதையாக மாற்றுவதோடு, திரைக்கதையின் வேகத்தை குறைக்கும் ஸ்பீட் பிரேக்கராகவும் இருக்கிறார்கள். நடிப்பை பொருத்தவரை அதர்வா - ராஷி கண்ணா ஜோடி தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாகவே செய்திருக்கிறார்கள். இவர்களது காதலே திரைக்கதையை திசை திருப்ப, நயந்தாரா - விஜய் சேதுபதியின் பிளாஷ்பேக் காதல், படத்தின் நீளத்தை அதிகரித்து ரசிகர்களை சலிப்படைய செய்துவிடுகிறது.
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதியும், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரும் படத்திற்கு பலமாக இருந்தாலும், அவர்களை இயக்குநர் சரியாக பயன்படுத்த தவறியிருக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில் இசையும், ஒளிப்பதிவும் கதாபாத்திரங்களாகவே வலம் வருவதோடு, படம் பார்ப்பவர்களை கதைக்குள்ளும், காட்சிகளுக்குள்ளும் அழைத்து வரும் வேலையை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால், இந்த படத்தில் அதை செய்ய ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரும், இசையமைப்பாளர் ஆதியும் தவறிவிட்டார்கள். அவர்களுக்கு பதிலாக ஆக்ஷன் இயக்குநரை தான் இயக்குநர் அதிகமாக நம்பியிருக்கிறார் என்பது பத்தின் பல இடங்களில் தெரிகிறது.
கதையின் நாயகியாக சிபிஐ வேடத்தில் நயந்தாரா, வில்லனாக சைக்கோ கொலையாளி வேடத்தில் அனுராக் காஷ்யப், என்று தொடங்கும் படம் அப்படியே தொடர்ந்திருந்தால், நிச்சயம் இது ரசிக்கும்படியான ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இருந்திருக்கும். ஆனால், இடையில் நயந்தாராவின் தம்பி வேடத்தில் அதர்வாவை சொருகி, அவருக்கான காதல், காதல் பிரச்சினை, காதல் முறிவு, என்று அவருக்காகவே ஒரு கதையை உருவாக்கியிருக்கும் இயக்குநர் அதன் மீது அதிகமான ஈடுபாடு காட்டியதோடு, நயந்தாராவுக்கு இணையாக அதர்வாவையும் படத்தில் காட்ட வேண்டும் என்ற எண்ணத்திலும் திரைக்கதை அமைத்ததால், விறுவிறுப்பாக நகர வேண்டிய படம், வீணாக போய்விட்டது.
இந்த படத்திற்கு அதர்வாவே தேவையில்லை, என்ற நிலையில், அவருக்காக தேவையில்லாத ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகள் என்று படத்தில் ஏகப்பட்ட விஷயங்களை திணித்திருக்கும் இயக்குநர் படத்தை ஜவ்வு போல இழுத்திருப்பதோடு, ஒரு கட்டத்தில் படத்தை முடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பல லாஜிக் மீறல்களோடு படத்தை முடிக்கிறார்.
சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து அங்கு கேமிரா இருப்பதை கண்டுபிடிக்காத ஒரு இடத்தில் அதர்வாவும், அவரது நண்பரும் எளிதாக நுழைவதோடு, அங்கிருக்கும் கேமராவை கண்டுபிடித்து, அதன் புட்டேஜை பார்ப்பதோடு, அதன் மூலம் எளிதாக கொலையாளியையும் அடையாளம் காணுவதெல்லாம், ரசிகர்கள் காதில் வாழைப்பூ வைப்பது போல இருக்கிறது.
அதர்வாவின் காதல் எப்பிசோட்டையே தாங்கிக்கொள்ளாத ரசிகரக்ளுக்கு, விஜய் சேதுபதியின் எப்பிசோட், தீ காயத்திற்கு நெருப்பு ஒத்திடம் கொடுத்தது போல இருக்கிறது.
நயந்தாரா, அனுராக் காஷ்யப் என்று பெரிய நட்சத்திரங்கள் கிடைத்ததோடு, எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய ரெடியாக இருக்கும் தயாரிப்பாளரும் கிடைத்த சந்தோஷத்தில் இயக்குநர் அஜய் ஞானமுத்து, தலைகால் புரியாமல் படத்தை கையாண்டிருப்பது படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. சேசிங், அதிரடி ஆக்ஷன், ஹீரோவின் அட்வெஞ்சர் சாகசம் என்று இயக்குநர் பல யுக்திகளை படத்தில் சேர்த்திருந்தாலும், அவை அனைத்தும் படத்திற்கு தேவையில்லாதவைகளாகவே இருக்கிறது.
சைக்கோ கொலையாளி ருத்யா யார்? என்ற ஒரு விஷயம் எதிர்ப்பார்ப்பை தூண்டினாலும், அந்த ருத்ரா யார்? என்பதை நமக்கு புரிய வைப்பதற்காக இயக்குநர் கையாண்ட யுக்திகள் சற்று சுவாரஸ்யத்தை கூட்டினாலும், அந்த ருத்ராவை ஹீரோவாக காட்ட வேண்டும் என்பதற்காக அவர் கையாண்ட விதமும், அதற்காக படத்தில் அவர் வைத்த கிளைக்கதைகளும் படத்திற்கு மிகப்பெரிய மைனஸாக அமைந்துவிட்டது.
மொத்தத்தில், இந்த ‘இமைக்கா நொடிகள்’ படம் பார்ப்பவர்களின் கண்களை அடிக்கடி இமைக்க செய்துவிடுகிறது.
ரேட்டிங் 2.5/5