’இந்த நிலை மாறும்’ விமர்சனம்
Casting : Ramkumar Sudarshan, Ashwin Kumar, Chaams, YG Mahendra, TM Karthik, Nivetha Sathish
Directed By : Arunkanth.V
Music By : Arunkanth.V
Produced By : Siva, Viji
ராம்குமார் சுதர்ஷனும், அஷ்வின் குமாரும் ஐடி பணியை விட்டுவிட்டு சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்கிறார்கள். அதன்படி, நிவேதா சதிஷுடன் இணைந்து இண்டர்நெட் ரேடியோ ஒன்றை தொடங்குகிறார்கள். இவர்களுக்கு, சாம் உதவி செய்ய, தங்களது ரேடியோவின் முதல் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். திருமணம் தொடர்பான இவர்களது நிகழ்ச்சியால், பெரிய பத்திரிகை நிறுவனம் ஒன்றுக்கு பாதிப்பு ஏற்பட, அவர்கள் சட்ட ரீதியாக ரேடியோ நிறுவனத்தை மூடும் நடவடிக்கையில் இறங்க, அதில் இருந்து இந்த இளம் தொழிலதிபர்கள் தப்பித்தார்களா, இல்லையா என்பது தான் கதை.
நாட்டில் நடக்கும் பிரச்சினை மற்றும் மக்களின் அறியாமை குறித்து பேச முயற்சித்திருக்கும் இயக்குநர் அருண்காந்த்.வி, முதல் பிரச்சினையாக திருமணம் மற்றும் பெண் வீட்டாரின் எதிர்ப்பார்ப்பு குறித்து பேசுகிறார். ஒரு விவசாயிக்கோ, ராணுவ வீரருக்கு பெண் கொடுக்க மறுப்பவர்கள், ஐடி துறை மற்றும் அரசு பணியாளர்களுக்கு பெண் கொடுப்பது மற்றும் ஆண்கள் சம்பாத்தியத்தை வைத்து பெண் கொடுப்பதற்கு எதிராக குரல் கொடுக்கும் இயக்குநர், திடீரென்று ரூட்டை மாற்றி, பத்திரிகை நிறுவனத்துடன் சட்ட ரீதியிலான சண்டை போடுவது சற்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதைவிட, நீதிமன்ற காட்சிகள் அனைத்தும் ரொம்ப பழசாக இருக்கிறது. (நீதிமன்ற செட்டப் மட்டும் புதுசு)
ஹீரோக்களாக நடித்திருக்கும் ராம்குமார் சுதர்ஷனம், அஷ்வின் குமார் ஆகியோரிடத்தில் இயக்குநரின் சாயல் தெரிந்தால் பரவாயில்லை, நிவேதா சதிஷ், சாம்ஸ், ஒய்.ஜி.மகேந்திரன், டி.எம்.கார்த்திக் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரிடமும் இயக்குநர் அருண்காந்தின் சாயல் தெரிவதால், அத்தனை பேருடைய நடிப்பும் நம்மை எரிச்சலடைய செய்கிறது.
அருண்காந்த் இந்த படத்தை இயக்கியிருப்பதோடு, இசையமைத்து, பாட்டு எழுதி, படத்தொகுப்பு செய்து, கலைத்துறையை கவனித்து, சவுண்ட் டிசைனிங், டிஐ கலர், ஆடைகள், கிராபிக் டிசைன் ஆகிய பணிகளையும் மேற்கொண்டிருக்கிறார். இந்த பணிகளில் சிலவற்றை, சிலரிடம் ஒதுக்கிவிட்டு, இயக்குநராக, கதையாசிரியராக கவனம் செலுத்தினால், இதை விட நல்லை படத்தை எடுக்கலாம்.
ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர், ஹெலி கேமராவை தான் ரொம்பவே நம்பியிருக்கிறார். எதற்கு எடுத்தாலும் ஒரு ஏரியல் வியூ ஷாட்டை வைத்துவிடுகிறார். நல்ல வேலை ரேடியோ ஸ்டேஷனில் ஹெலிகேமை பறக்கவிடவில்லை.
குறைந்த செலவில் ஒரு திரைப்படத்தை இயக்கி, தயாரித்து ரிலீஸ் செய்வது என்பது, தற்போதைய சினிமாவில் சாதாரண விஷயமில்லை. அதை இரண்டாவது முறையாக செய்திருக்கும் அருண்காந்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அதே சமயம், அவருடைய இந்த புதிய முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால், அவருடைய படம் சற்று தரமானதாகவும் இருக்க வேண்டும்.
எனவே, நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தாலும் பரவாயில்லை என்று அருண்காந்த், அடுத்த முறை நல்ல படம் எடுப்பார் என்று நம்புவோம்.
ரேட்டிங் 2.5/5