Nov 11, 2017 12:38 PM

'இப்படை வெல்லும்' விமர்சனம்

b4f588abed8f2f2c84fbaa28ea7e2f53.jpg

Casting : Udhayanithi, Manjuma Mohan, Soori, Radhika, Daniel Balaji

Directed By : Gourav

Music By : D.Imman

Produced By : Lyca

 

தூங்கா நகரம், சிகரம் தொடு ஆகிய படங்களை இயக்கிய கெளரவ் இயக்கத்தில், உதயநிதி நடித்திருக்கும் படம் இப்படை வெல்லும், எப்படி என்பதை பார்ப்போப்.

 

ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் உதயநிதி கை நிறைய சம்பளம் வாங்கினாலும், சில மாதங்களிலேயே வேலையை பறிக்கொடுத்து விடுகிறார். வீட்டுக்கு தெரியாமல் வேறு வேலை தேடுபவர், நாயகி மஞ்சுமா மோகனை காதலிக்கவும் செய்கிறார். இந்த காதல் விவகாரம் தெரிந்து, மஞ்சுமாவின் போலீஸ் அண்ணனான ஆர்.கே.சுரேஷ், காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

 

இந்த நிலையில், பயங்கரமான தீவிரவாதியான டேனியல் பாலாஜி வட நாட்டு சிறையில் இருந்து தப்பித்து சென்னைக்கு வருகிறார். சென்னையில் நாசவேலை செய்ய முயற்சிக்கும் டேனியல் பாலாஜியை போலீஸ் தீவிரமாக தேடிக் கொண்டிருக்க, சம்மந்தமில்லாத சூரியும், உதயநிதியும் அவருக்கு அறிமுகமாகிறார்கள். இதை அறியும் போலீஸ், டேனியல் பாலாஜியின் ஆட்கள் என்று உதயநிதி மற்றும் சூரியை துரத்துகிறது. இந்த விஷயத்தை தெரிந்துக்கொள்ளும் ஆர்.கே.சுரேஷ் சூழ்நிலையை பயன்படுத்தி, உதயநிதியை என்கவுண்டரில் போட்டுவிட்டு தனது தங்கையின் காதலுக்கு சமாதிக்கட்ட முடிவு செய்கிறார். டேனியலின் திட்டத்தை முறியடிக்கும் முயற்சியில் இறங்கும் உதயநிதி, தனது காதலியின் அண்ணன் திட்டத்தையும் தெரிந்துக்கொள்ள, இறுதியில் இந்த பிரச்சினைகளில் இருந்து எப்படி வெளியே வருகிறார், என்பது தான் இப்படை வெல்லும் படத்தின் கதை.

 

தனக்கு என்ன வருமோ, அதில் வித்தியாசத்தை காட்டி நடித்து வரும் உதயநிதி, இந்த படத்திலும் அதை மிக சரியாக செய்திருக்கிறார்.

 

உதயநிதிக்கும் சேர்த்து நடித்துள்ள மஞ்சிமா மோகன், நடிப்போடு மற்றும் அளவற்ற அழகோடு ரசிகர்களை கவர்வதோடு, கண்களிலேயே கவர்ச்சியை காட்டுகிறார். ஆபாசம் இல்லாத கவர்ச்சி, கவர்ச்சியோடு சேர்ந்த அழகு என்று வலம் வரும் மஞ்சிமா மோகன், ரசிகர்கள் மனதில் பசையாக ஒட்டிக்கொள்கிறார்.

 

காமெடியோடு குணச்சித்திர வேடத்திலும் ஸ்கோர் செய்திருக்கும் சூரி, வரும் இடங்கள் அனைத்தும் கலகலப்பு. அவரது மனைவியாக நடித்துள்ள ரோஹினி, தனக்கு கிடைத்த சிறு வாய்ப்பில், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

 

முதல் பெண் பஸ் டிரைவராக நடித்துள்ள ராதிகா, உதயநிதியின் அம்மாவாக தனக்கே உரித்தான வகையில் தனது கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். 

 

டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும், எங்கேயோ கேட்டது போல இருக்க, தியேட்டரை விட்டு வெளியே வந்ததும், அதுவும் நினைவில் நிற்காமல் போகிறது. படம் முழுவதும் சேசிங் காட்சிகள் நிறைந்திருக்க, ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன், தனது அபாரமான உழைப்பால் காட்சிகளை பிரம்மாண்டமாக்கியிருக்கிறார்.

 

இயக்குநர் கெளரவின் திரைக்கதையில் இருக்கும் பரபரப்பு குறையும் போதெல்லாம், தூக்கி நிறுத்துவது டேனியல் பாலாஜியின் வேடமும், அவரது நடிப்பும் தான். அவர் வரும்போதெல்லாம் படு வேகம் எடுக்கும் படம், அவர் இல்லாத இடங்களில் நொண்டுகிறது.

 

சம்மந்தமில்லாத மூன்று பேர் ஒரு பிரச்சினையில் சம்மந்தப்பட, அதனை சுற்றி நடக்கும் சில விஷயங்களை வைத்து சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் கெளரவ், காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தினாலும், லாஜிக் என்ற விஷயத்தில் பல இடங்களில் கோட்டை விட்டிருக்கிறார். 

 

லாஜிக் பார்க்காமல் படம் பார்த்தால், இப்படை வெல்லும், ரசிகர்களின் மனதை வெல்லும் ககமர்ஷியல் படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

ஜெ.சுகுமார்