Jul 15, 2022 06:30 AM

’இரவின் நிழல்’ விமர்சனம்

2363c96b3eb1340d89b8bcddc8d8dca9.jpg

Casting : Radhakrishnan Parthiban, Varalaxmi Sarathkumar, Robo Shankar, Brigida Saga, Chandru, Anandha Krishnan, Sneha Kumar, Sai Priyanka Ruth

Directed By : Radhakrishnan Parthiban

Music By : A R Rahman

Produced By : Bioscope USA, Akira Productions Pvt Ltd

 

குழந்தையிலேயே தாயை இழந்து, தந்தையால் புறக்கணிக்கப்பட்ட பார்த்திபன், தனது ஒவ்வொரு பருவத்திலும் தவறான மனிதர்களை சந்திப்பதன் மூலம் தவறான பாதையில் பயணிக்கிறார். புதிதாக கிடைக்கும் உறவுகள் மூலம் தனது வாழ்க்கை திசை மாறும் என்று நினைப்பவரை சூழ்நிலை தொடர்ந்து தவறான பாதையில் பயணிக்க வைக்க, இறுதியாக அவர் என்ன ஆனார்? என்பதை சொல்வது தான் ‘இரவின் நிழல்’ படத்தின் கதை.

 

இப்படத்தின் கதை, அதற்கான திரைக்கதை அமைப்பு, காட்சி நகர்த்தல், நடிகர்களின் நடிப்பு ஆகியவற்றை வழக்கமான ஒரு திரைப்படத்தை விமர்சிப்பது போல் சாதரணமாக விமர்சித்துவிட்டு கடந்து விட முடியாது. காரணம், இவை அனைத்தையும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை நமக்கு மிகப்பெரிய வியப்பை கொடுக்கிறது.

 

நந்து என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பார்த்திபனின் வாழ்க்கை தான் படத்தின் கதை. அவரது குழந்தை பருவம், சிறுவர் பருவம், இளைஞர் பருவம் என்று பல பருவங்களுக்கு ஏற்றவாறு நடிகர்களை நடிக்க வைத்திருப்பதோடு, ஒவ்வொரு பருவத்தின் போதும் அவர் சந்திக்கும் மனிதர்கள், அவர்களால் அவருக்கு ஏற்படும் தீமைகள், அவர்கள் வாழும் பகுதிகள் என்று ஏராளமான லொக்கேஷன்களுடனும், கதாப்பாத்திரங்களுடனும் பயணிக்கும் இப்படி ஒரு கதையை சிங்கிள் ஷாட்டில் எடுத்திருப்பது நம்மை பிரமிக்க வைக்கிறது.

 

இயக்குநராக தனது பணியை திறம்பட செய்திருக்கும் பார்த்திபன் நடிகராகவும் தனது பணியை பாராட்டும்படி செய்திருப்பதோடு, வழக்கமான தனது நக்கல் வசனங்கள் மூலம் கைதட்டலும் பெறுகிறார்.

 

வரலக்‌ஷ்மி சரத்குமார், ரோபோ சங்கர், பிரிகிடா சகா, சந்துரு, அனந்த கிருஷ்ணன், சினேகா குமார், சாய் பிரியங்கா என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.

 

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

 

ஆர்தர் ஏ.வில்சன் மற்றும் அவரது குழுவினரின் மிகப்பெரிய உழைப்பு திரை முழுவதும் தெரிகிறது. அதிலும் பாடல் காட்சி ஒன்றை படமாக்கிய விதமும், அதில் சரியான லிப் சிங்குடன் நடிகர்கள் பாடி ஆடுவது, என்றூ முழு படமும் நமக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுக்கிறது.

 

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்று சொன்னால், யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு தான் சொல்ல வந்த கதையை ஒரே ஷாட்டில் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். சாதனை முயற்சியாக இப்படத்தை அவர் எடுத்தாலும் அதிலும் நல்ல மெசஜ் ஒன்றை வைத்திருப்பது சபாஷ் சொல்ல வைக்கிறது.

 

’ஒத்த செருப்பு’ படத்தில் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை வைத்து முழு படத்தையும் மிக சுவாரஸ்யமாக நகர்த்திய பார்த்திபன், இந்த படத்தில் ஒரு கதாப்பாத்திரத்திற்கு பல உருவங்களை கொடுத்து அதே சுவாரஸ்யத்தொடு முழு படத்தையும் நகர்த்த முயற்சித்திருக்கிறார். ஆனால், படத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் மற்றும் அவர்களின் பின்னணியை அழுத்தமாக சொல்லாமல் மேலோட்டமாக சொல்லி படத்தை வேகமாக நகர்த்த முயற்சித்திருப்பது சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. 

 

இருந்தாலும், ஒரே ஷாட்டில் இப்படி ஒரு கதையை படமாக்குவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக இருந்தாலும், அதை தனது கடினமான உழைப்பு மூலம் சாத்தியமாக்கி சாதனை நிகழ்த்தியிருக்கும் பார்த்திபனின், இந்த ‘இரவின் நிழல்’ படம் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய வியப்பையும், புதுவித உணர்வையும் கொடுக்கிறது.

 

மொத்தத்தில், ‘இரவின் நிழல்’ தமிழ் சினிமாவுக்கு மட்டும் அல்ல இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்க்கும் மிக முக்கியமான படமாகவும், கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய படமாகவும் இருக்கிறது.

 

ரேட்டிங் 3.5/5