‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ விமர்சனம்
Casting : Arulnithi, Mahima, Ajmal, Saya Singh
Directed By : Mu.Maran
Music By : Sam C.S
Produced By : Axess Film Factory
அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில், அருள்நிதி நடித்திருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ எப்படி என்பதை பார்ப்போம்.
இரவு நேரத்தில் ஒரு வீட்டில் நடக்கும் கொலை பழி அருள்நிதி மீது விழுகிறது. ஆனால் அந்த கொலையை அவர் செய்யவில்லை என்றாலும், கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் சம்மந்தப்பட்ட அருள்நிதி, அந்த பெண்ணை கொலை செய்தது யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட, அதன் பிறகு நடக்கும் சஸ்பென்ஸ் நிறைந்த சம்பவங்களின் மூலம் அந்த பெண்ணை கொலை செய்தது யார்? எதற்காக? அந்த பெண்ணுடான அருள்நிதியின் தொடர்பு என்ன? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
படத்தின் ஆரம்பத்திலே, ஹீரோ அருள்நிதியை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீஸ் விசாரிக்க, மறுபக்கம் கொலை தொடர்பாக ஒருவரிடம் போலீஸ் விசாரித்துக்கொண்டிருக்கிறது. கொலை சம்பவத்தை போலீசுக்கு இன்பார்ம் செய்த அந்த நபர், அருள்நிதியை பார்த்து, “அந்த வீட்டில் இருந்து வந்தவன் இவன் தான்” என்று கை நீட்ட, அங்கிருந்து அருள்நிதி எஸ்கேப் ஆகிறார். அதற்கு முன்பு என்ன நடந்தது? என்ற பாணியில் கதை ஓபனாக, கால் டாக்சி டிரைவரான அருள்நிதி, மகிமாவை காதலிக்கிறார். காதல் விஷயத்தை வீட்டில் சொல்ல இருவரும் நேரம் பார்த்துக்கொண்டிருக்க, திடீரென்று எண்ட்ராகும் அஜ்மல், மகிமாவுக்கு தொல்லை கொடுக்கிறார். இதை அவர் அருள்நிதியிடம் சொல்ல, அஜ்மலை கண்டிப்பதற்காக அவரை தேடிக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில், மகிமாவுக்கு தெரிந்த பணக்கார பெண்ணான சாயா சிங், தன்னை ஒருவன் ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாக மகிமா மற்றும் அருள்நிதியிடம் சொல்லி அஜ்மல் போட்டோவை காண்பிக்கிறார். இதனால் அஜ்மல் மீது அருள்நிதிக்கு கோபம் அதிகரிக்க, அவரை தேடுவதில் தீவிரம் காட்டுபவர், அஜ்மலின் முகவரியை கண்டுபிடித்து அந்த வீட்டுக்கு சென்று பார்த்தால், அங்கே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அந்த கொலை பழி அருள்நிதி மீது விழ, அதில் இருந்து தப்பிக்க நினைக்கும் அருள்நிதி உண்மையான கொலையாளியை தேடுவதோடு, அஜ்மலிடம் இருக்கும் வீடியோவையும் கைப்பற்ற முயற்சிக்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட் என்ற பாணியில் முழு படமே ட்விஸ்ட் மையமாக நகர்கிறது.
கொலை பழியில் சிக்கிவிடும் ஹீரோ, அதில் இருந்து விடுபட உண்மையான கொலையாளியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இறங்க, அதில் வெற்றி பெற்றாரா இல்லையா, என்பது தான் இப்படத்தின் ஒன்லைன் என்றாலும், பல கதாபாத்திரங்களை வைத்து, பல ட்விஸ்ட்டுகளை வைத்து இயக்குநர் மாறன் சொல்லியிருப்பது, ஒரு திருப்தியான சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்தாலும், இரண்டு மணி நேரம் படம் மூன்று மணி நேரம் படமாக நகர்வதைப் போன்ற உணர்வையும் கொடுக்கிறது.
அருள்நிதி எப்போதும் போல தனது அப்பாவித்தனமான நடிப்போடு வலம் வருகிறார். சின்னப்புள்ளத்தனமான சிரிப்போடும், நம்மை ரசிக்க வைக்கும் அழகோடும் ஹீரோயின் மகிமா வந்து போக, ஜான் விஜய், அஜ்மல், லட்சுமி ராமகிருஷ்ணன், சாயா சிங், ஆடுகளேம் நரேன், ஆனந்தராஜ் என்று படத்தில் வரும் அனைத்து நடிகர்களும், படத்தில் ஒவ்வொரு இடத்தில் ஒருவித ட்விஸ்ட்டை ஏற்படுத்திவிட்டு போய்விடுகிறார்கள்.
சாம் சி.எஸ்-ன் இசையும், அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும், ஷான் லோகேஷின் படத்தொகுப்பும் ஒரே கதையை, பல கிளைக்கதைகளாக பிரித்துக்காட்டுவதில் பெரும் பங்கு வகித்திருந்தாலும், அதுவே திரைக்கதையின் வேகத்தை குறைத்தும் விடுகிறது.
ஒரு சம்பவத்தை வைத்து இரண்டு மணி நேரம் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக கொடுக்க நினைத்த இயக்குநர் மாறன், அதை தொழில்நுட்ப ரீதியாக சொல்லாமல், கதாபாத்திரங்களின் ரீதியாக சொல்லியிருப்பது, ஆரம்பத்தில் வரும் எதிர்ப்பார்ப்பையும் விறுவிறுப்பையும் குறைத்துவிடுகிறது. இருந்தாலும், பல இடங்களில் யூகிக்க முடியாத அளவுக்கு காட்சிகளை வைத்து, என்ன நடந்திருக்கும்? இவருக்கு இதில் சம்மந்தம் இருக்குமா? என்று படம் முழுவதும் யோசிக்கவும் வைத்துவிடுகிறார். குறிப்பாக இடைவேளை வரும் இடம். லட்சுமி ராமகிருஷ்ணனை சாதாரனமாக காட்டிவிட்டு, இடைவேளையின் போது, அவர் தான் படத்தின் மெயின் டிரம்ப் கார்டாக இருப்பார், என்று படம் பார்ப்பவர்களை எண்ண வைக்கும் இயக்குநர், அந்த கதாபாத்திரத்திற்கு மேலும் சில இடங்களில் வலு சேர்த்துவிட்டு, க்ளைமாக்ஸின் போது யு டார்ன் போட்டு, ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்டை வைத்து சுவாரஸ்யத்தை கூட்டுகிறார்.
அனைத்து கதாபாத்திரங்களுக்கு பின்னணியில் இருக்கும் குட்டி பிளாஷ்பேக்கிலும், மகிமாவை கடத்தும் கால் டாக்ஸி டிரைவரின் ரிவேஞ்ச், அஜ்மல் போஷன் உள்ளிட்டவைகளில் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால், இப்படம் நூறு சதவீத பெஸ்ட் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இருந்திருக்கும்.
மொத்தத்தில், சூப்பரான சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் இல்லை என்றாலும், ஒரு முறை பார்க்கும் விதத்தில் பர்பெக்ட்டான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாகவே இந்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ இருக்கிறது.
ஜெ.சுகுமார்