Apr 07, 2023 09:02 AM

‘இது கதையல்ல நிஜம்’ திரைப்பட விமர்சனம்

cd302fea42d470120c78deaddd3d4cdd.jpg

Casting : Santhosh Saravanan, Jegan, Sonu Lakshmi, Anika Vikraman, Covai Sarala, Sendrayan, Naan Kadavul Rajendran, Jerald

Directed By : Kannan Rajamanikam

Music By : Tajnoor

Produced By : Kannan Rajamanikam

 

ஆர்.வி.உதயகுமார், தனது பிள்ளைகள் அனிகா விக்ரமன், ஜெகன் ஆகியோருடன் ஆதரவற்ற சிறுவனான சந்தோஷையும்  பிள்ளையாக வளர்க்கிறார். ஆர்.வி.உதயகுமாரின் இறப்பிற்கு பிறகும், மூன்று பேரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள்.

 

அனிகா விக்ரமனை, சந்தோஷ் சரவணன் தங்கையாக பார்க்கிறார். ஆனால், அனிகாவோ அவரை காதலனாக நினைத்து அவர் மீது ஆசையை வளர்த்துக் கொள்கிறார். அதே சமயம், சந்தோஷ் சரவணனும், சோனு லட்சுமியும் காதலிக்கிறார்கள். அனிகாவின் விபரீத ஆசையை அறிந்துக்கொள்ளும் ஜெகன், சந்தோஷ் சரவணனுக்கும், சோனு லட்சுமிக்கும் திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்கிறார். இவர்களது திருமணம் நடந்ததா? இல்லையா?, அனிகா விக்ரமனின் விபரீத காதலால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? என்பது தான் ‘இது கதையல்ல நிஜம்’ படத்தின் கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் சந்தோஷ் சரவணன், துடிப்பான இளைஞராக கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். முதல் படம் போல் இல்லாமல் அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.

 

பெரும்பாலும் காமெடி வேடங்களில் நடித்து வரும் ஜெகன், முதல் முறையாக அழுத்தமான கதாபாத்திரத்தில் அமர்க்களமாக நடித்திருக்கிறார். சகோதரனாக பார்க்க வேண்டியவனை தனது தங்கை காதலனாக பார்க்கும் விஷயம் அறிந்து அவர் கலங்குவதும், அதே தங்கைக்காக அவர் எடுக்கும் முடிவும் அதிர்ச்சியளிக்கிறது.

 

நாயகியாக நடித்திருக்கும் சோனு லட்சுமி கிராமத்து பெண் வேடத்திற்கு கனகச்சிதமாக பொருந்துகிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அனிகா விக்ரமனின் நடிப்பிலும் குறையில்லை.

 

வில்லனாக நடித்திருக்கும் ஜெரால்டு, ஆர்.வி.உதயகுமார், டிபி கஜேந்திரன், கோவை சரளா, செண்ட்ராயன், நான் கடவுள் ராஜேந்திரன் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

ராஜதுரையின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு, படத்தின் கதாபாத்திரமாக வரும் நீர்வீழ்ச்சியை கூடுதல் அழகோடு காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

தாஜ்நூரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருப்பதோடு, வரிகள் புரியும்படியும் இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி அமைந்துள்ளது.

 

எழுதி இயக்கியிருப்பதோடு படத்தை தயாரித்திருக்கும் இயக்குநர் கண்ணன் ராஜமாணிக்கம், முக்கோண காதல் கதையை வித்தியாசமான முறையில் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

 

காதல், காமெடி, ஆக்‌ஷன் என கமர்ஷியல் பார்மூலாவில் திரைக்கதை  அமைத்திருக்கும் இயக்குநர் நாயகி சோனு லட்சுமியின் மரணத்தின் மூலம் படத்தை சஸ்பென்ஸாக நகர்த்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

 

படத்தில் சில குறைகள் இருந்தாலும், காதல் கதையை வித்தியாசமான கோணத்தில் கொடுத்திருப்பதோடு, எந்தவித திணிப்பும் இல்லாமல் நேர்த்தியாக இயக்குநர் கண்ணன் ராஜமாணிக்கம் இயக்கியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘இது கதையல்ல நிஜம்’ பரவாயில்லை ரகம்.

 

ரேட்டிங் 2.5/5