Jan 28, 2024 07:12 AM

’ஜெய் விஜயம்’ திரைப்பட விமர்சனம்

3023759c798fe3bf0818056ceea7db31.jpg

Casting : Jai Akash, Akshaya, Atchaya Ray, ACP Rajendran, Michael Augustine, Diwakar, Dr Saravanan, Baskar

Directed By : Jeyashatheeshan Nageswaran

Music By : Sathish Kumar

Produced By : Jai Akash Films

 

நாயகன் ஜெய், அவரது மனைவி நாயகி அக்‌ஷயா கந்தமுதன், தங்கை மற்றும் அப்பா ஆகியோருடன் ஒரு வீட்டில் குடியேறுகிறார். ஜெய் ’ஹலுசினேஷன்’ என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதனால், இல்லாத ஒரு விசயத்தையும், நடக்காத ஒரு சம்பவத்தையும் நடந்ததாக கற்பனை செய்துக்கொள்வார். இதனால் அவரை அவரது குடும்பத்தார் பத்திரமாக பார்த்துக் கொள்வதோடு, அவரை வெளியே எங்கும் செல்ல விடாமலும் பார்த்துக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் ஜெய்யின் மனைவி அக்‌ஷயா, தங்கை, அப்பா என அவருடன் இருக்கும் அனைவரும் பொய்யாக நடிக்கும் உண்மை தெரிய வருவதோடு, தற்போதைய காலக்கட்டத்தில் இருந்து பத்து வருடங்களுக்கு முந்தைய காலக்கட்டத்தில் வாழ்வதாக ஜெய்யை நம்ப வைத்துக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்கள் அப்படி செய்வது ஏன்? என்ற பின்னணியை சுவாரஸ்யமாக சொல்வது தான் ‘ஜெய் விஜயம்’ படத்தின் கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் ஜெய், குழப்பம் மிக்க ஒரு வாழ்க்கையை வாழக்கூடிய மனிதராக மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார். நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை அவருடன் இருப்பவர்கள் கற்பனை என்று சொல்லி அவரை நம்ப வைக்கும் போது, தடுமாற்றத்துடன் அதை ஏற்றுக்கொள்பவர், தனது மனநிலையையும், தான் ஏமாற்றப்படுவதையும் அறியும் போதும் தடுமாற்றம் மிக்க நடிப்பை மிக சரியாக வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் அக்‌ஷயா கந்தமுதன், அழகாக இருப்பதோடு, ஹோம்லியான லுக்கில் ரசிகர்களை கவர்கிறார். நடிப்பிலும் குறையில்லை.

 

ஜெய்யின் தங்கையாக நடித்த நடிகை, அப்பா கதாபாத்திரம் என படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் பெரும்பாலும் புதுமுகங்களாக இருந்தாலும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

பால் பாண்டியின் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும் கதைக்கேற்ப பயணித்திருக்கிறது. பொருளாதார ரீதியிலான கட்டுப்பாடுகளுக்கு இடையே முழு படத்தையும் காட்சிப்படுத்தியிருப்பது படம் முழுவதும் தெரிகிறது. சதீஷ்குமாரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அளவு.

 

எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஜெயசதீஷ்வரன் நாகேஸ்வரன், யூகிக்க முடியாத ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை மிக சுவாரஸ்யமான திரைக்கதையோடு பயணிக்க வைத்திருக்கிறார். ஜெய்க்கு உள்ள மனநோய் மற்றும் அவரை சுற்றி நடக்கும் மர்மமான சம்பவங்களின் பின்னணி என்ன? என்ற எதிர்பார்ப்போடு முதல் பாதி படம் படு சுவாரஸ்யமாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டாலும், அவை யூகிக்க முடியாதபடி இருப்பது படத்தின் மிகப்பெரிய பலம்.

 

குறைவான பட்ஜெட்டை வைத்துக்கொண்டு ஒரு நிறைவான படத்தை கொடுக்க முயற்சித்திருக்கும் நடிகர் ஜெய் ஆகாஷ், தயாரிப்பாளராக ஒரு நல்ல படத்தை கொடுத்திருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும். இருந்தாலும், இந்த பட்ஜெட்டில் இப்படி ஒரு படத்தை கொடுத்ததற்காக நடிகர் ஜெய் ஆகாஷ் மற்றும் இயக்குநர் ஜெயசதீஷ்வரன் நாகேஸ்வரனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். 

 

படத்தின் மேக்கிங்கில் சில குறைகள் இருந்தாலும் அவை பொருளாதாரத்தால் ஏற்பட்ட குறைகள் என்பது தெரிகிறது. அந்த குறைகளை புறம் தள்ளிவிட்டு பார்த்தால்,  ரசிகர்களால் தவிர்க்க முடியாத ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் இந்த ‘ஜெய் விஜயம்’.

 

ரேட்டிங் 2.8/5