’ஜப்பான்’ திரைப்பட விமர்சனம்
Casting : Karthi, Anu Emmanuel, Vagai Chandrasekar, Vijay Milton, Sunil, KS Ravikumar
Directed By : Raju Murugan
Music By : G. V. Prakash Kumar
Produced By : S. R. Prakash Babu, S. R. Prabhu
பிரபலமான கொள்ளையனான கார்த்தி, கொள்ளையடித்த பணத்தை வைத்து திரைப்படத்தில் ஹீரோவாக நடிப்பதோடு, ஆடம்பரமாகவும் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையே கோவையில் உள்ள ஒரு பெரிய நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தின் பழி கார்த்தி மீது விழுகிறது. செய்யாத குற்றத்திற்காக போலீஸ் தன்னை துரத்த அவர்களிடம் இருந்து தப்பித்து செல்லும் கார்த்தி, உண்மையான குற்றவாளி யார்? என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் ‘ஜப்பான்’ படத்தின் மீதிக்கதை.
ஜப்பான் என்ற வேடத்தில் தன்னை பொருத்திக் கொள்வதற்காக மெனக்கெட்டிருக்கும் நடிகர் கார்த்தி, அந்த வேடத்திற்காக உடை மற்றும் உருவத்தை மாற்றியதோடு, நடிப்பிலும் மிகப்பெரிய வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். எந்த விசயமாக இருந்தாலும் அதை மிக அலட்சியமாக அவர் கடந்து போகும் காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு, ஜப்பான் கதாபாத்திரத்தை ரசிகர்களிடம் அழுத்தமாக பதிய வைத்துவிடுகிறது. உடை, உடல்மொழி மட்டும் இன்றி வசன உச்சரிப்பிலும் மாற்றத்தை கையாண்டிருக்கும் கார்த்தி, ஜப்பான் என்ற நபராகவே ரசிகர்கள் மனதில் பதிந்து விடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அனு இம்மானுவேலுக்கு பெரிய வேலை ஏதும் இல்லை என்றாலும் திரைக்கதை ஓட்டத்துக்கு அவரது வேடம் உதவியாக இருந்திருக்கிறது.
ஜித்தன் ரமேஷ், வாகை சந்திரசேகர், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் விஜய் மில்டன் மற்றும் சுனில் ஆகியோர் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் ஏமாற்றம் அளிக்காமல் பயணித்திருக்கிறது.
படத்தின் தன்மைக்கு ஏற்றபடி காட்சிகளை கையாண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
திருடர்கள் உருவாவதில்லை, சமூகத்தால் உருவாக்கப்படுகிறார்கள் என்ற மையக்கருவை வைத்துக்கொண்டு கமர்ஷியலான திரைக்கதையில் தனது வழக்கமான அரசியல் பேசியிருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன்.
பொழுதுபோக்கு அம்சங்கலும், கார்த்திக்கான மாஸ் காட்சிகளோடு திரைக்கதை பயணித்தாலும், தனது வசனங்கள் மூலம் அதிகாரவர்க்கங்கள், சமூக உடகங்கள் மூலம் பரவும் வதந்திகள், தற்போதைய ரசிகர்கள் ஒரு திரைப்படத்தை பார்க்கும் கண்ணோட்டம், கமர்ஷியல் சினிமாவின் பரிதாபங்கள் என அனைத்தையும் விமர்சித்திருப்பதோடு, உண்மை நிலையை சிரிக்கும்படியும், சிந்திக்கும்படியும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன்.
யாரை பற்றியும், எதை பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் கொள்ளையனான ‘ஜப்பான்’ யார்? என்ற பிளாஷ் பேக்கை குட்டி கதை மூலம் இயக்குநர் ராஜு முருகன் சொல்லி ரசிகர்களை கலங்க வைத்துவிடுகிறார்.
திரைக்கதையில் சில தொய்வுகள் இருந்தாலும், நடிகர் கார்த்தியின் நடிப்பு அந்த குறையை மறைத்துவிட்டு படத்தை ரசிக்க வைத்துவிடுகிறது. அதிலும், கெட்டவனாக இருந்தாலும் ஜப்பான் வேடத்தை ரசிகர்கள் ரசிக்க கூடியதாக கையாண்டிருக்கும் கார்த்தி, படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறார்.
ரேட்டிங் 4/5