’ஜீவி 2’ திரைப்பட விமர்சனம்
Casting : Vetri, Karunakaran, Ashwini, Rohini, Rama, Mime Gopi
Directed By : V.J. Gopinath
Music By : Sundaramurthy KS
Produced By : Suresh Kamatchi
எங்கோ யாருக்கோ நடக்கும் ஒரு நிகழ்வுகள் திரும்பவும், இன்னொருவருக்கு அதே போன்று நடப்பதோடு, அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வார்கள். இது தான் தொடர்பியல் விதி. இந்த கருவை கொண்டு வித்தியாசமான படமாக கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சகர்களின் பாராட்டை பெற்றதோடு, ரசிகர்களிடமும் வரவேற்பு பெற்ற படம் ‘ஜீவி’. தற்போது முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, உருவாகியிருக்கும் இரண்டாம் பாகம் தான் ‘ஜீவி 2’.
வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி ஓளிபரப்பாக உள்ள ‘ஜீவி 2’ முதல் பாகத்தைப் போல் நம்மை வியக்க வைக்கிறதா? என்று விமர்சனத்தை பார்ப்போம்.
முதல் பாகத்தில் கதாநாயகன் தனக்கு நடக்கும் சம்பவங்கள் தொடர்பியல் விதி மூலம் தான் நடக்கிறது, என்பதை அறிந்துக்கொள்வதோடு, அதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபடுவார். ஆனால், விதி அவர் நினைத்தது போல எதையும் நடக்க விடாமல், இறுதியில் நாயகன் திருடிய அவருடைய பரம்பரை நகைகள் யாருக்கு செல்ல வேண்டுமோ அவருக்கு கிடைப்பது போல முதல் பாகத்தை முடித்திருப்பார்கள்.
முதல் பாகத்தின் தொடர்ச்சியான ‘ஜீவி 2’ கதையும் அதே தொடர்பியல் விதி மூலம் பயணிக்கிறது. இந்த கதையில் நடக்கும் சம்பவங்கள் எப்படி முதல் பாகத்தின் சம்பவங்களுடன் ஒத்துப்போகிறது, என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லியிருப்பதோடு, தொடர்பியல் விதியை ஹீரோ தடுத்து நிறுத்தினாரா? இல்லையா? என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.
அமைதியான முகம் இயல்பான நடிப்பு என கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் வெற்றி, முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்தில் சண்டைக்காட்சியில் சற்று மெனக்கெட்டிருக்கிறார். மற்றபடி நடிப்பில் எந்தவித மாற்றமும் இல்லை.
கதாநாயகியாக நடித்திருக்கும் அஸ்வினி, முதல் பாகத்தைப் போல் இதிலும் பார்வை இல்லாதவராகவே நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் அவரது திருமணத்தை கதையின் திருப்புமுனையாக வைத்த இயக்குநர் இந்த பாகத்தில் அவருக்கு மீண்டும் கண் பார்வை கிடைப்பதற்கான அறுவை சிகிச்சையை திருப்புமுனையாக பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், அவருக்கு கண் பார்வை கிடைத்ததா? இல்லையா ? என்பதை மூன்றாம் பாகத்தில் தான் பார்க்க முடியும், என்பது போல் நாயகி அஸ்வினியின் நடிப்பு திறமையும் மூன்றாம் பாகத்தில் தான் தெரிய வரும் போல.
கருணாகரன் முதல் பாகத்தைப் போலவே இதிலும் படம் முழுவதும் வருகிறார். காமெடி நடிகராக அல்லாமல் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் கருணாகரன் அளவான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் ரோகிணி, மைம் கோபி, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜவஹர், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரமா, நாயகனின் நண்பராக நடித்திருக்கும் முஷாபிர் என அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி கே.எஸ்-ன் பின்னணி இசை அளவு. ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார்.டி கதைக்கு ஏற்ப பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் காட்சிகளை கச்சிதமாக தொகுத்திருப்பதோடு, படத்தை வேகமாகவும் நகர்த்தி செல்கிறார். ஸ்டண்ட் இயக்குநர் சுதேஷின் சண்டைக்காட்சிகள் எதார்த்தமாக இருக்கிறது.
முதல் பாகத்தில் வேறு ஒருவரின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கிய வி.ஜே.கோபிநாத், இரண்டாம் பாகத்தில் கதை எழுதி இயக்கியிருக்கிறார். முதல் பாகத்தில் நடந்த சம்பவங்களுடன் ஒத்துப்போகும் விதத்தில் காட்சிகளை நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் கையாண்டிருக்கும் இயக்குநர், முதல் பாகத்தில் திரைக்கதையில் முக்கிய பங்கு வகித்த ஒரு பொருளை மையக்கருவாக கொண்டு இரண்டாம் பாகத்தின் கதையை எழுதியிருப்பது சபாஷ் போட வைக்கிறது.
ஜீவி படத்தை பார்த்திருந்தாலும், ஜீவி 2 படத்தை எதிர்ப்பார்ப்புடன் பார்க்க வைக்கும் விதத்தில் காட்சிகளை ட்விஸ்ட்டுடன் நகர்த்தும் இயக்குநர் வி.ஜே.கோபிநாத், இறுதியில் இரண்டு கதாப்பாத்திரங்களை காட்டி மூன்றாம் பாகத்திற்கும் லீட் கொடுத்திருக்கிறார்.
முதல் பாகத்தின் காட்சிகள் மற்றும் யூகிக்க முடியாத திரைக்கதை, இறுதிக் காட்சியில் வரும் ட்விஸ்ட் அனைத்தும் ரசிக்க வைத்தது போல், இதிலும் பல காட்சிகள் ரசிக்கும்படி இருப்பதோடு, இறுதி காட்சியில் வைக்கும் ட்விஸ்ட் மூலம் தொடர்பியல் விதி தொடரும் என்று காட்டியிருப்பது சபாஷ் சொல்ல வைக்கிறது.
மொத்தத்தில், ’ஜீவி 2’-க்கு தொடர் வெற்றி உறுதி.
ரேட்டிங் 3.5/5