’ஜாலியோ ஜிம்கானா’ திரைப்பட விமர்சனம்
Casting : Prabhu Deva, Abhirami, Yogi Babu, Redin Kingsley, Madonna Sebastian, Yaashika Aanand, John Vijay Robo Shankar, Madhusudhan Rao, Sai Dheena, Abhirami Bhargavan, Sakthi Chidambaram, Jeagan Kaviraj
Directed By : Sakthi Chidambaram
Music By : Ashwin Vinayagamoorthy
Produced By : Trans India Media - Punitha Rajan and Rajendra M.Rajan
மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட மூன்று இளம் பெண்களின் அம்மாவான அபிராமியின் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ மதுசூதனன் மூலம் ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக பொதுநல வழக்கறிஞர் பிரபு தேவாவை சந்திக்க தனது மூன்று பெண்களுடன் அபிராமி செல்கிறார். பிரபு தேவா தங்கியிருக்கும் ஓட்டல் அறையின் கதவு திறந்திருக்க, அபிராமி மற்றும் அவர்களது பெண்கள் உள்ளே சென்று பார்க்கும் போது பிரபு தேவா பிணமாக இருக்கிறார்.
உடலில் எந்தவித காயங்களும் இல்லாத நிலையில் பிணமாக இருக்கும் பிரபு தேவாவை கடைசியாக பார்த்தவர்கள் என்பதால் கொலைப்பழி தங்கள் மீது விழுந்துவிடும் என்பதால், அவரது உடலை யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்க, அதற்குள் பிரபு தேவாவின் வங்கி கணக்கில் ரூ.10 கோடி இருக்கும் தகவல் நான்கு பெண்களுக்கு தெரிய வருகிறது. தங்களது பிரச்சனைகளை சமாளிக்க இந்த பணம் உதவியாக இருக்கும் என்பதால் பிணமாக இருக்கும் பிரபு தேவாவை உயிருடன் இருப்பது போல் காண்பித்து அந்த 10 கோடி ரூபாயை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். அவர்களால் அது முடிந்ததா?, பிரபு தேவாவின் மரணத்தின் பின்னணி என்ன? என்பதை நகைச்சுவையாக சொல்வது தான் ‘ஜாலியோ ஜிம்கானா’.
ஆட்டம், பாட்டம் என்று கலகலப்பான கதாபாத்திரங்களில் அசத்தும் பிரபு தேவா, படம் முழுவதும் பிணமாக நடித்திருப்பது ஆச்சரியமானதாக இருந்தாலும், அதை மிக அழகாக செய்திருக்கிறார். பிணமாக நடித்தாலும் தனக்கே உரித்தான சில மேனரிசங்களை சில இடங்களில் வெளிக்காட்டி நடிப்பில் அசத்துபவர், அவ்வபோது பாடல் காட்சிகளில் ஆட்டம் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தவும் செய்கிறார். குறிப்பாக இறுதிக் காட்சியில் உயிரற்ற நிலையில் அவர் போடும் பொம்மலாட்ட சண்டைக்காட்சி அசத்தல்.
மடோனா செபாஸ்டியன், அபிராமி ஆகியோருடன் மேலும் மூன்று பெண்கள் படம் முழுவதும் பயணித்தாலும், பெரிய முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறார்கள். மடோனா செபாஸ்டியன் முதல் முறையாக காமெடி செய்ய முயற்சித்திருப்பது வரவேற்கத்தக்கது. அபிராமியும் அவருடன் இணைந்து நம்மை சிரிக்க வைக்க படாதபாடு படுகிறார். ஆனால், பார்வையாளர்கள் அதை கண்டுக்கொள்ளவில்லை என்றாலும், அபிராமி...அபிராமி....என்று அவரை ரசிக்க தவறவில்லை.
யோகி பாபு, ரெடிங் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ், சாய் தினா, ரோபோ சங்கர், கதிர், ஜான் விஜய், கல்லூரி வினோத், ஒய்.ஜி.மகேந்திரன், சாம்ஸ் ஆகியோர் போதாது என்று இயக்குநர் சக்தி சிதம்பரமும், படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், பாடலாசிரியருமான ஜெகன் கவிராஜும் முக்கிய வேடங்களில் நடித்து காமெடியில் கலக்கியிருக்கிறார்.
பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கும் “போலீஸ்காரனை கட்டிக்கிட்டா...” என்ற மிகப்பெரிய ஹிட் பாடலை கொடுத்திருக்கும் பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ், சாதி சங்க தலைவராக நடித்து செய்திருக்கும் அலப்பறைகள் மூலம் இனி நடிகராகவும் கவனம் ஈர்ப்பது உறுதி.
அஷ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் எம்.சி.கணேஷ் பாபு காட்சிகளை கண்ணுக்கு குளிர்ச்சியளிக்கும் வகையில் படமாக்கியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் சக்தி சிதம்பரம், அதர பழசான கதையோடு மீண்டும் பயணித்திருந்தாலும், தனது பலமான காமெடிக்கு திரைக்கதையில் முக்கியத்துவம் கொடுத்து படத்தை ரசிக்க வைக்கிறார்.
நாயகனை படம் முழுவதும் பிணமாக நடிக்க வைப்பது மிகப்பெரிய சவால் என்றாலும், அதை மிகச்சரியாக செய்திருக்கும் இயக்குநர் சக்தி சிதம்பரம், பல தடுமாற்றங்களுடனும், சில குறைகளோடும் படத்தை இயக்கியிருந்தாலும், குடும்பத்துடன் பார்க்க கூடிய கலகலப்பான பொழுதுபோக்கு படத்திற்கான அனைத்து அம்சங்களையும் அளவாகவும், நேர்மையாகவும் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், ‘ஜாலியோ ஜிம்கானா’ ஜாலியோ ஜாலி...
ரேட்டிங் 3/5