Nov 21, 2019 06:46 PM

‘கே.டி (எ) கருப்பு துரை’ விமர்சனம்

6daed39f9a734adfe3403cc6ce296495.jpg

Casting : Mu.Ramasamy, Nagavishal

Directed By : Madhumita

Music By : Karthikeya Murthy

Produced By : Vikram Mehra, Siddharth Anand Kumar

 

’வல்லமை தாராயோ’, ‘கொல கொலயா முந்திரிக்கா’ ஆகியப் படங்களை இயக்கிய பெண் இயக்குநர் மதுமிதா இயக்கத்தில், சரிகமா சார்பில் விக்ரம் மெஹரா, சித்தார்த் ஆனந்த்குமார் தயாரிப்பில், எழுத்தாளர் மு.ராமசாமி, சிறுவன் நாகவிஷால் ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கே.டி (எ) கருப்பு துரை’ எப்படி என்று பார்ப்போம்.

 

இயக்குநர் மதுமிதா இதற்கு முன்பு இயக்கிய திரைப்படங்களுக்கும், இந்த படத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் இருப்பதை படத்தின் டிசைனே சொல்லி விடுகிறது. இருந்தாலும் எந்தவிதமான எதிர்ப்பார்ப்பு இன்றி, சாதாரணமாக படம் பார்க்க உட்காரும் நம்மை, படம் ஆரம்பித்த 10 வது நிமிடத்தில், ஆச்சரியப்பட வைக்கும் இயக்குநர் மதுமிதா, ஒரு வயதானவரையும், ஒரு சிறுவனையும், வைத்துக் கொண்டு, செண்டிமெண்ட் மற்றும் நகைச்சுவை என இரண்டையுமே எதார்த்தமாக கையாண்டிருப்பதோடு, வாழ்க்கையின் மறுபக்கத்தை ரொம்ப சாதாரணமாக விளக்குவது தான் ‘கே.டி (எ) கருப்பு துரை’ படத்தின் கதை.

 

பெண் குழந்தை பிறந்தால் கல்லிப்பால் ஊற்றி கொலை செய்யும் கொடூரத்தை பல தமிழ்ப் படங்கள் பேசியிருந்தாலும், வயதானவர்களை கருணை கொலை செய்யும் வழக்கம் தமிழகத்தில் இருந்ததை இதுவரை எந்த தமிழ்ப் படமும் காட்சிப்படுத்தாத நிலையில், அதையே கருவாக எடுத்துக் கொண்டிருக்கும் இயக்குநர் மதுமிதா, அதற்கான திரைக்கதையில் சிறுவன் கதாபாத்திரத்தை பயன்படுத்திய விதம் ரசிக்க வைக்கிறது.

 

ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்த கருப்புதுரை, உடல் நிலை பாதிக்கப்படும் போது, அவர்களது பிள்ளைகள் அப்பாவை கருணை கொலை செய்துவிட முடிவு செய்கிறார்கள். இது தெரிந்து, யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு  வெளியேறும் கருப்புதுரை, கோவில் ஒன்றில் தஞ்சம் அடைய, அதே கோவிலில் வளரும் ஆதரவற்ற சிறுவனான குட்டியின் நட்பு கிடைக்கிறது. இருவரும் சேர்ந்து பயணிக்க, இருவருக்கும் இடையிலான உறவு பாசமிகுந்ததாக மாற, ஒரு கட்டத்தில், குட்டியும், கருப்பு துரையும் பிரிய வேண்டிய சூழல் ஏற்படும் போது, அவர்கள் அதை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள், என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

எழுத்தாளர் மு.ராமசாமி கருப்பு துரை கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். கோமாவில் இருந்து திடீரென்று கண் விழித்து எழுந்துக்கொள்வதில் வெளிப்படுத்தும் அசத்தலான நடிப்பை, பிரியாணி சாப்பிடுவது, மது குடிப்பது, பள்ளிபருவ காதலியை சந்திப்பது என அனைத்துக் காட்சிகளிலும் அள்ளி வீசுகிறார். சில இடங்களில் சிறுவனின் பேச்சை கேட்டு, ஆச்சர்யத்துடன் சிரிப்பதில் கூட, கருப்பு துரை என்று ஒருவர் இருந்தால் இப்படித்தான் இருப்பாரோ, என்று நினைக்க வைத்துவிடுகிறார்.

 

KD a Karuppu Durai Review

 

குட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாகவிஷால், பார்ப்பதற்கும் குட்டியாக இருந்தாலும் நடிப்பில் படு கெட்டிக்காரராக இருக்கிறார். அதிலும் திருநெல்வேலி மாவட்ட தமிழில், வசன உச்சரிப்பில் கலக்கும் சிறுவன், எந்தவித தயக்கமும் இன்றி நடிப்பில் அதிரடி காட்டுகிறார்.

 

மு.ராமசாமி மற்றும் நாகவிஷால் இவர்கள் இருவரை சுற்றி கதை நகர்ந்தாலும், படத்தில் வரும் சில சிறு சிறு வேடங்கள் கூட கவனிக்க வைக்கிறது. 

 

ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் கெம்புராஜ் படத்திற்கு மிகப்பெரிய பலம். திருநெல்வேலி மாவட்டத்தின் அழகியலோடு, இரவுகளின் அழகையும் நாம் உணரும்படி காட்சிகளை படமாக்கியிருக்கிறார். கார்த்திகேயா மூர்த்தியின் இசையில் பாடல்கள் இனிமையாகவும், பின்னணி இசை கூர்மையாகவும் இருக்கிறது. மொத்தத்தில் கதையுடனே பயணிக்கும் இசையையும், ஒளிப்பதிவையும் பிரித்துப் பார்க்கவே முடியவில்லை. இவர்களின் பணிக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் விஜய் வெங்கட்ரமணன்.

 

ஆதவற்ற சிறுவனான குட்டி வாழ்க்கையை புரிந்து வைத்திருக்கும் அளவுக்கு கூட, ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்த கருப்பு துரை புரிந்து வைத்திருக்கவில்லை. குட்டியுடன் பழகிய பிறகு அதை புரிந்துகொள்ளும் அவர், தனது வாழ்க்கையை மீண்டும் வாழ தொடங்குகிறார். அது எப்படி, என்பதை இயல்பான காட்சிகளோடு, ரசிக்கும்படியான திரைக்கதையோடு சொல்லியிருக்கும் இயக்குநர் மதுமிதா, கருப்பு துரை போல குடும்பத்திற்காகவே வாழ்ந்து, தங்களது வாழ்க்கையை வாழாமல் இருப்பவர்களுக்கு, வாழ்க்கை என்றால் என்ன? என்பதை தெளிவாகவும், கவிதை போல இனிமையாகவும் சொல்லியிருக்கிறார்.

 

அதே சமயம், அட்வைஸ் செய்யும் வகையில் படத்தை நகர்த்தாமல் ஜாலியாக, இரண்டு மணி நேரம் போவதே தெரியாதவாறு, எதை எந்த அளவுக்கு சொல்ல வேண்டும் என்பதை சரியான அளவில் சொல்லியிருக்கும் இயக்குநர் மதுமிதாவுக்கு ரசிகர்களின் கைதட்டலோடு, விருதும் கிடைக்கும் என்பது உறுதி.

 

ரேட்டிங் 3.5/5