Apr 04, 2025 06:01 AM

’க.மு - க.பி’ திரைப்பட விமர்சனம்

ccf18a9df8aa4e65fe0d68bfa56572cd.jpg

Casting : Vignesh Ravi, TSK, Saranya Ravichandran, Priya Dharshini, Niranjan, Abirami Murugesan, 'Kabali' Perumal, 'Captain' Anand

Directed By : Pushpanathan Arumugam

Music By : Dharshan Ravi Kumar

Produced By : Pushpanathan Arumugam & V International

 

உருகி உருகி காதலிப்பவர்கள், கல்யாணத்திற்குப் பிறகு சிறு சிறு பிரச்சனைகளை கூட, ஏதோ வட கொரியா - தென் கொரியா மோதல் அளவுக்கு கையாண்டு ஒரு கட்டத்தில் விவாகரத்தில் வந்து நிற்கும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய பிரிவுக்கு காரணம் என்ன ? என்பதை காதலோடு சொல்வது தான் ’க.மு - க.பி’-யின் கதைக்கரு. 

 

ஐடி துறையில் பணியாற்றும் நாயகன் விக்னேஷ் ரவியும், நாயகி சரண்யா ரவிச்சந்திரனும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். விக்னேஷ் ரவி சினிமா ஆசையால் வேலையை விட்டுவிட்டு படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட விரும்புகிறார். அவரது விருப்பத்தை புரிந்துக் கொள்ளும் மனைவி சரண்யா அவருக்கு ஊக்கமளித்து உறுதுணையாக இருக்கிறார்.  

 

தம்பதி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்...!, என்று பாராட்டும்படி இல்லற வாழ்க்கையை தொடங்கும் இவர்கள், நாளடைவில் சிறு சிறு விசயங்களில் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனைகள் மிக சாதாரணமானவை என்றாலும், அவர்களுடைய சூழல் அதை பெரிதாக்கி விட, ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்துவிட முடிவு செய்கிறார்கள். அவர்களது முடிவு அவர்களை நிரந்தரமாக பிரித்ததா? அல்லது அவர்கள் மீண்டும் தங்களை புரிந்து கொண்டு ஒன்றிணைய வழிவகுத்ததா? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வதே ’க.மு - க.பி’.

 

கிரைம் திரில்லர் மற்றும் ஆக்‌ஷன் ஜானர் படங்களை தான் நான் லீனர் முறையில் பார்த்திருக்கிறோம். ஆனால், முதல் முறையாக ஒரு காதல் கதையை நான் லீனர் முறையில் சொல்லி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் புஷ்பநாதன் ஆறுமுகம்.

 

சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விக்னேஷ் ரவி மற்றும் சரண்யா ரவிச்சந்திரன், இப்படத்தின் மூலம் கதையின் நாயகன், நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார்கள். நட்சத்திர அந்தஸ்து இல்லை என்றாலும் இருவரும் தங்களது நடிப்பு மூலம் முழு படத்தையும் சுமந்திருக்கிறார்கள். காதல் காட்சிகளில் சில இடங்களில் இவர்களது திரை இருப்பு செயற்கைத்தனமாக தெரிந்தாலும், கணவன், மனைவியாக சண்டைப்போட்டுக் கொள்ளும் காட்சிகளில் எதார்த்தமாக பயணித்து பார்வையாளர்களையும் தங்களுடன் பயணிக்க வைத்து விடுகிறார்கள்.

 

மனைவியை அடக்கி ஆள வேண்டும், என்று நினைக்கும் நிரஞ்சனின் அட்ராசிட்டி திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தினாலும், அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிராமி முருகேசன் மூலம் பெண்களின் மனக்குமுறல்களை வெளிப்படுத்தும் காட்சி பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது.

 

டி.எஸ்.கே, பிரியதர்ஷினி, கபாலி பெருமாள், கேப்டன் ஆனந்த் என சிறு சிறு வேடங்களில் முகம் காட்டுபவர்கள் கூட பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்து போகிறார்கள்.

 

இசையமைப்பாளர் தர்ஷன் ரவி குமாரின் இசையில், ஜெகன் கவிராஜின் வரிகளில்  “இறவியே...” என்ற ஒரு பாடல் மட்டுமே இடம்பெற்றாலும், முத்தான பாடலாக மீண்டும் மீண்டுக் கேட்க தூண்டுவதோடு, நம் உதடுகளை முணுமுணுக்கவும் வைக்கிறது. அமைதியான மற்றும் அளவான பின்னணி இசை கதாபாத்திரங்களின் மன உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்தும் வகையில் பயணித்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் ஜி.எம்.சுந்தர், தனது கேமரா மூலம் எந்தவித மாயாஜாலத்தையும் நிகழ்த்த முயற்சிக்காமல், கதை மாந்தர்களைப் போல், கதைக்களத்தையும் இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். 

 

நான் லீனர் முறையில் சொல்லப்படும் காதல் கதை. அதில் ஒன்று நிஜம், ஒன்று கற்பனை என இரண்டு விதத்தில் கதை சொல்லப்பட்டிருந்தாலும், அதை எந்தவித குழப்பமும் இன்றி பார்வையாளர்கள் புரிந்துக் கொள்ளும் வகையில் படத்தொகுப்பாளர் சிவராஜ் பரமேஸ்வரன், காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்.

 

காதலித்து திருமணம் செய்துக் கொள்ளும் பலர் திருமணத்துக்குப் பிறகு அதே அளவு காதலோடு வாழாமல் விவாகரத்தில் வந்து நிற்பது ஏன்? என்ற கேள்வியை கதைக்களமாக்கி, அதற்கான தீர்வையும் மிக தெளிவான முறையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் புஷ்பநாதன் ஆறுமுகம்.

 

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துக் கொள்ளும் பல தம்பதிகளிடம் திருமணத்திற்குப் பிறகு சரியான புரிதல் ஏற்படாமல் போவதற்கு காரணம், நாம் நினைத்து பார்க்க முடியாத சிறு சிறு பிரச்சனைகள் தான் என்றாலும், அவற்றை அவர்களது புரிதல் இல்லாத மனங்கள் எப்படி பெரிதாக்கி, வாழ்க்கையில் விரிசலை உண்டாக்கிக் கொள்கிறது, என்பதை காதலோடும், பிரிவினால் ஏற்படும் வலியோடும் சொல்லி பார்வையாளர்களின் மனங்களை தொட்டு விடுகிறார் இயக்குநர் புஷ்பநாதன் ஆறுமுகம்.

 

பரிட்சயமான நடிகர், நடிகைகள், பிரமாண்டமான காட்சியமைப்புகள், கலர்புல்லான பாடல் காட்சிகள், காமெடி என்ற பெயரில் கடித்து குதறும் முன்னணி காமெடி நடிகர்கள், அட்வைஸ் என்ற பெயரில் அரைத்த மாவையே அரைக்கும் முன்னணி குணச்சித்திர நடிகர்கள், இவற்றை எல்லாம் எதிர்பார்க்காமல், இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு கல்யாணம் என்ற கமிட்மெண்ட் என்றால் என்ன?, காதலி மீது காட்டும் அக்கறையை மனைவி மீது காட்டாமல் போவது ஏன்? போன்ற கேள்விகளுக்கு விடை கிடைப்பதோடு, வாழ்வில் காதல் நிலைத்திருப்பதற்கான வழியும் பிறக்கும்.

 

மொத்தத்தில், ‘க.மு-க.பி’ கல்யாணத்துக்குப் பிறகு எப்படி காதலிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கிறது.

 

ரேட்டிங் 3.5/5