Oct 02, 2020 04:51 PM

’க/பெ.ரணசிங்கம்’ விமர்சனம்

4ececddff1a01e5d1063d6ace0b6dd65.jpg

Casting : Vijay Sethupathi, Aishwarya Rajesh, Rangaraj Pandey, Public Star Durai Sudhakar

Directed By : Virumandi

Music By : Ghibran

Produced By : KJR Studios - Kotapadi J. Rajesh

 

அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரங்கராஜ் பாண்டே, முனிஷ்காந்த், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘க/பெ.ரணசிங்கம்’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜெ.ரஜேஷ் தயாரித்திருக்கும் இப்படம் இன்று ZEE5 ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படம் எப்படி என்பதை பார்ப்போம்.

 

ராமநாதபுரம் மாவட்டம் தான் கதைக்களம். அம்மாவட்டத்தில் முக்கிய பிரச்சினையான தண்ணீர் பிரச்சினை உள்ளிட்ட எந்த பிரச்சினையாக இருந்தாலும், மக்களை திரட்டி போராடும் குணம் கொண்டவர் விஜய் சேதுபதி. அவரது போராட்ட குணத்திற்காகவே அவரை திருமணம் செய்துக் கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஊருக்காக போராடிக் கொண்டிருந்த விஜய் சேதுபதி, தனது குடும்பத்திற்காக சம்பாதிக்க வெளிநாடு செல்ல, அங்கு ஏற்படும் விபத்தில் உயிரிழந்துவிடுகிறார். உயிரிழந்த கணவரின் உடல் சொந்த ஊருக்கு வர முடியாத சூழல் ஏற்படும் போது, தனது கணவர் பாணியில் பல விதமான போராட்டங்களை நடத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது கணவரது உடலை, தனது ஊருக்கு கொண்டு வந்தாரா, இல்லையா, என்பது தான் கதை.

 

வெளிநாட்டுக்கு சென்று சம்பாதிக்க ஆசைப்பட்டு ஏஜெண்டுகளிடம் மக்கள் ஏமாறுவது மற்றும் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள், அங்கு கஷ்ட்டப்படுவது போன்றவற்றை தான் திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஆனால், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையை, இதுவரை எந்த திரைப்படத்திலும் சொல்லாததை, இப்படத்தில் இயக்குநர் விருமாண்டி ரொம்ப அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

 

கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் வந்தாலும், அவரது நாயகராக வரும் விஜய் சேதுபதி எப்போதும் போல மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் தனது காட்சிகளை கையாளுகிறார். ஊர் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தண்ணீர் பிரச்சினைக்கு முடிவு கட்டுபவர், அதே பிரச்சினைக்காக கலெக்டரிடம் பேசும் போது, அரசு அதிகாரிகளுக்கு வலிக்காதவாறு ஊசி போடுகிறார்.

 

கைக்குழந்தையோடு இறந்த கணவரின் உடலுக்காக போராடும் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது பணியை மிக சிறப்பாக செய்திருக்கிறார். ”இதுபோன்ற வேடங்களுக்கு இவரை விட்டால் வேறு ஆள் இல்லை”, என்று சொல்லும் அளவுக்கு நடிப்பை வெளுத்து வாங்குகிறார்.

 

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இவர்களுடைய கதாப்பாத்திரைத்தை சுற்றியே முழுப்படமும் நகர்ந்தாலும், கலெக்டராக நடித்திருக்கும் ரங்கராஜ் பாண்டே தனது சிறிய வேடத்தின் மூலம் தன்னையும் மக்களிடம் பதிவு செய்துவிடுகிறார்.

 

‘களவாணி 2’ மற்றும் ‘டேனி’ ஆகிய படங்கள் மூலம் அறியப்பட்ட பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் எண்ட்ரி சர்பிரைஸாக இருக்கிறது. ஒரு சில காட்சிகளில் வந்தாலும், இதற்கு முன்பு நடித்த கதாப்பாத்திரங்களில் இருந்து சற்று வித்தியாசமான தோற்றத்தில், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துவிட்டு போகிறார். 

 

என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு ராமநாதபுரத்தின் வரட்சியையும், ஐஸ்வர்யா ராஜேஷின் சோகத்தையும் நம் மனதிற்குள் இறக்கிவிடுகிறது. தனது திறமையை காட்டாமல், கதைக்காக மட்டுமே காட்சிகளை கையாண்டிருக்கும் ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். ஜிப்ரானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையுடன் பயணிக்கிறது. இசையையும் காட்சிகளையும் பிரித்து பார்க்க முடியவில்லை.

 

தண்ணீர் பிரச்சினையோடு தொடங்கும் படம் பெரும்பாலான மக்கள் அறியாத ஒரு பிரச்சினையைப் பற்றி மிக அழுத்தமாக பேசியிருப்பதோடு, அரசு எந்திரம் மக்களை எப்படியெல்லாம் வாட்டி வதைக்கிறது என்பதையும் விவரிக்கிறது.

 

ஒரு பிரச்சினைக்காக போராடும் பெண், மாவட்ட ஆட்சியரை சந்திக்கிறார். அதன் பிறமு மத்திய அமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோரை சந்திக்கும் வழிகள், ரெகுலர் பார்மெட் கதையாகவும், பழைய காட்சிகளாக தெரிந்தாலும், அந்த குறைகளை இயக்குநர் விருமாண்டி வைத்த கிளைமாக்ஸ் மறைத்து விடுகிறது. 

 

அதிலும், துபாய் நாட்டில் உயிரிழந்த பிரபல நடிகையின் உடல் சுமார் 48 மணி நேரத்தில் அவரது சொந்த நாட்டிற்கு வந்தடைவதை பிளாஷ் செய்தியாக ஒளிபரப்பும் ஊடகங்கள், பிழப்புக்காக வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் சாமாணியர்கள், அங்கு உயிரிழந்தால் அவர்களது உடல் சொந்த ஊருக்கு வர அவர்கள் எப்படிப்பட்ட போராட்டம் நடத்த வேண்டும், என்பதை இதுவரை எந்த ஊடகமும் வெளிக்கொண்டு வரவில்லை என்பதை சவுக்கடியாக சொல்லியிருக்கிறது.

 

மொத்தத்தில், ‘க/பெ.ரணசிங்கம்’ பாராட்ட வேண்டிய போராளி.

 

ரேட்டிங் 3/5