‘காலக்கூத்து’ விமர்சனம்
Casting : Prasanna, Kalaiyarasan, Dhanshika, Srushti Dange
Directed By : M.Nagarajan
Music By : Justin Prabhakaran
Produced By : Madurai Sri kallalagar Entertainment
”காதல் உயிரை பறிக்கும், நட்பு உயிரை கொடுக்கும்” என்பதை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் படம் தான் ‘காலக்கூத்து’.
அனாதையான பிரசன்னா, சிறு வயது முதலே கலையரசனோடு நட்பாக பழகி வருகிறார்கள். உயிர் பிரியா நண்பர்களான இவர்களில் கலையரசன் கல்லூரி மாணவியான தன்ஷிகாவை காதலிக்க, பிரசன்னாவை சிருஷ்டி டாங்கே காதலிக்கிறார்.
மாலை நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பது, காலை நேரத்தில் கல்லூரி வாசலில் அமர்ந்து தன்ஷிகாவை சைட் அடிப்பது என்று கலையரசன் வெட்டியாக சுற்றினாலும், பிரசன்னா பொருப்பாக வேலை செய்யும் நல்ல பிள்ளையாக இருக்கிறார். இதற்கிடையே கலையரசன் தங்கச்சியை கலாய்க்கும் கவுன்சிலர் பையனை பிரசன்னா அடித்துவிட, அங்கே இவர்களுக்கு எதிரி உருவாகிறார்கள். இதற்கிடையே, சும்ம இருந்த பிரசன்னா பின்னாடி சுற்றி...சுற்றி...காதலிக்கும் சிருஷ்டி டாங்கே, ஒரு கட்டத்தில் பிரசன்னாவை கழட்டி விட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துவிடுகிறார். காதல் தோல்வியால் பிரசன்னா அப்செட்டானாலும் அதை காட்டிக்கொள்ளாமல் எப்போதும் போல இருக்க, கலையரசனின் காதலுக்கும் பிரச்சினை வந்துவிடுகிறது.
தன்ஷிகாவின் முறை பையனுக்கு அவரை திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முடிவு செய்ய, அவர் கலையரசனிடம் தகவல் சொல்லிவிடுகிறார். தனது காதல் தான் காணாமல் போய்விட்டது, தனது நண்பனின் காதலை ஜெயிக்க வைக்க வேண்டும், என்று நினைக்கும் பிரசன்னா கலையரசன் மற்றும் தன்ஷிகாவுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ய, இந்த சமயத்தில் கவுன்சிலரின் ஆட்கள் பிரசன்னாவை பலி கொடுக்க முடிவு செய்கிறார்கள். அதே சமயம் தன்ஷிகாவின் குடும்பத்திற்கும் விஷயம் தெரிய அவர்கள் ஒரு பக்கம் கலையரசன் - தன்ஷிகாவை தேட, திருமணம் நடந்ததா இல்லையா, பிரசன்னா என்ன ஆனார், என்பது தான் ‘காலக்கூத்து’ படத்தின் க்ளைமாக்ஸ்
மதுரை தான் படத்தின் கதைக்களம். ஆனால், ஹீரோக்கள் பிரசன்னாவும், கலையரசனும் மதுரை ஸ்லாங்கை பேச ரொம்பவே கஷ்ட்டப்பட்டு இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சாதாரணமாக பேசினாலே போதும் என்ற முடிவுக்கு இயக்குநர் வந்திருப்பது கலையரசன் கதாபாத்திரத்தைப் பார்த்தாலே தெரிகிறது.
படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே வேகத்தில் திரைக்கதை நகர்கிறது. செண்டிமெண்ட், காதல், ஆக்ஷன் என்று அனைத்துமே ரொம்ப ஸ்லோவாகவே நகர்வது இப்படத்தின் மிகப்பெரிய மைனஸ்.
பிரசன்னா, கலையரசன் இருவர் தோற்றமும், கதாபாத்திர அமைப்பும் மற்றும் மதுரை பின்னணியும் ஏதோ பெருசா சொல்ல போறாங்க, என்று ஆரம்பத்தில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் இயக்குநர் எம்.நாகராஜ், இறுதியில் குண்டு சட்டியில் குதிரையை ஓட்டிவிட்டு ஓய்ந்துவிடுகிறார். ரசிகர்களின் ஆறுதலுக்காக, படம் எதை சொல்ல வருகிறது என்பதை, ஒரு எண்ட் டைடிலை போட்டு முடித்துவிடுகிறார். (இதை ஆரம்பத்திலேயே செய்தால் மக்கள் தப்பித்திருப்பார்களே இயக்குநரே)
வெற்றியை தேடிக் கொண்டிருக்கும் பிரசன்னா, சிறு சிறு வேடங்களில் இருந்து ஹீரோவுக்கான அடையாளத்தை பெற முயற்சித்துக் கொண்டிருக்கும் கலையரசன், இருவருக்கும் இப்படம் எந்த வகையிலும் உதவியாக இருக்கப் போவதில்லை. குச்சிக்கு சுடிதார் போட்டது போல ரொம்பவே ஒல்லியாக இருக்கும் தன்ஷிகாவின், முகத்துல கல்லூரி மாணவிக்கான எந்த அடையாளமும் இல்லை. சிருஷ்டி டாங்கே இரண்டு மூன்று காட்சிக்கு வந்துவிட்டு போகிறார்.
பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் படத்திற்கு சற்று பலம் சேர்த்திருப்பதோடு, ஆக்ஷன் காட்சிகளும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.
கலையரசன், பிரசன்னா, தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே என்று படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் மதுரை பின்னணிக்கு ஒட்டாமல் போனாலும், மற்ற நடிகர்கள் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள். குறிப்பாக கவுன்சிலரின் தம்பியாக நடித்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் சுகேஷ், ஒரு சில காட்சிகள் வந்தாலும் கவனிக்க வைக்கிறார். ஆறடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்தோடு இருக்கும் அவரை இயக்குநர்கள் சரியாக பயன்படுத்தினால், கோடம்பாக்கத்தை மிரட்டும் வில்லனாக நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார்.
நண்பர்கள் பழகுறாங்க, பாசமாக பேசிக்குறாங்க, காதலிக்கிறாங்க, மது குடிக்கிறாங்க, கல்யாணம் பண்ணிக்குறாங்க, பிறகு செத்து போறாங்க, இதை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரத்திற்கு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர், அதை நான்கு மணி நேரம் படம் போன்ற உணர்வை படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தி இருப்பதோடு, கெளரவ கொலை என்ற விஷயத்தை சொல்ல வந்துவிட்டு, எதை எதையோ சொல்லி, இறுதியில் எதையும் சரியாக சொல்லாமல் விட்டுவிடுகிறார்.
மொத்தத்தில், இந்த ‘காலக்கூத்து’ கேலிக்கூத்தாகவே உள்ளது.
ஜெ.சுகுமார்