’காரி’ திரைப்பட விமர்சனம்

Casting : Sasikumar, Parvathy Arun, JD Chakravarthy, Balaji Sakthivel, Aadukalam Naren, Ammu Abhirami. Redin Kingsley, Nagineedu, Ramkumar Ganesan
Directed By : Hemanth
Music By : D.Imman
Produced By : S.Lakshman Kumar
கோவில் நிர்வாகம் யாருக்கு சொந்தம்? என்பதில் இரண்டு ஊர்களுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது. இதனால், கோவில் திருவிழா பல ஆண்டுகள் நடக்காமல் இருக்க, பல வருடங்களாக தண்ணீரே வராத ஆற்றை குப்பை கிடங்காக மாற்ற அரசு முடிவு செய்கிறது. தங்களது ஊர் குப்பை கிடங்காக மாறுவதை தடுக்க நினைக்கும் ஊர் பெரியவர்கள், அதற்காக கோவில் திருவிழாவை நடத்த முடிவு செய்கிறார்கள். ஆனால், கோவில் நிர்வாகம் யாருக்கு சொந்தம்? என்பதில் மீண்டும் பிரச்சனை எழ, ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி அதில் எந்த ஊர் வெற்றி பெறுகிறதோ அவர்களுக்கே கோவில் நிர்வாகம் சொந்தம், என்று முடிவு செய்யப்படுகிறது.
ஒரு ஊர் 18 காளைகளை போட்டியில் இறக்க, மற்றொரு ஊரை சேர்ந்த 18 மாடுபிடி வீரர்கள் குறைந்தது 10 காளைகளை அடக்கி விட்டால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று முடிவு செய்கிறார்கள். அதன்படி, வீட்டுக்கு ஒரு வீரர் என்று தேர்வு செய்யும் கிராம மக்கள் வெள்ளைச்சாமி குடும்பத்தை சேர்ந்த வாரிசையும் இந்த போட்டியில் பங்கேற்க வைக்க முடிவு செய்து அவரை தேடி சென்னைக்கு புறப்பட, வெள்ளைச்சாமி கிடைத்தாரா? ஜல்லிக்கட்டு போட்டி நடந்ததா? இல்லையா?, அதன் மூலம் அந்த ஊருக்கு எத்தகைய நன்மை கிடைத்தது? போன்ற கேள்விகளுக்கான விடை தான் ‘காரி’-யின் கதை.
ஜல்லிக்கட்டு போட்டியின் மூலம் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி பல அமைப்புகள் அப்போட்டிக்கு தடை கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியால் ஊருக்கும், காளைகளுக்கும் கிடைக்க கூடிய நன்மைகளை மிக விளக்கமாக சொல்லியிருக்கும் இப்படத்தின் மையக்கருவும், அதை படமாக்கிய விதமும் ஜல்லிக்கட்டு போட்டிக்கும், அதை நேசிக்கும் மக்களின் நம்பிக்கைக்கும் வலு சேர்த்திருக்கிறது.
சேது என்ற வேடத்தில் வெள்ளைச்சாமியின் வாரிசாக நடித்திருக்கும் சசிகுமார், முதல் பாதியில் சென்னை தமிழ் பேசும் சென்னை வாசியாக வலம் வருபவர், இரண்டாம் பாதியில் இராமநாதபுரம் மாவட்ட இளைஞராக மாறி தன் மக்களுக்காகவும், ஊருக்காகவும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டும்படி உள்ளது. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தனது தந்தையின் எண்ணத்தை உதாசினப்படுத்தும் சசிகுமார், இரண்டாம் பாதியில் தனது தந்தை வழியில் பயணிக்கும் போது நடிப்பிலும் பாராட்டு பெறுகிறார். சசிகுமார் வழக்கமான பாணியில் நடித்திருந்தாலும், ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கச்சிதமாக நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பார்வதி அருண், கதையுடன் பயணிக்கும் கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்திருக்கிறார். அதிலும், தனது காளையை கேட்டு அவர் மண்ணில் புரண்டு அழும் காட்சியில் கைதட்டல் பெறும் விதத்தில் நடித்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் ஜேடி சக்கரவர்த்தி, ஸ்டைலிஷான வில்லனாக கலக்கியிருக்கிறார். அவரது ஆசை கொடூரமாக இருந்தாலும், அதை வெளிப்படுத்தும் போது நடிப்பில் அசத்துகிறார்.
சசிகுமாரின் அப்பாவாக நடித்திருக்கும் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நாகி நீடு, பிரேம், சக்யுக்தா ஆகியோரது நடிப்பும், ரெடின் கிங்ஸ்லியின் காமெடியும் அளவாக இருக்கிறது.
இராமநாதபுர மாவட்டத்தின் வறட்சியை கண் முன் கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா, இரண்டாம் பாதியில் அதே ஊரை விவசாய பூமியாக காட்சிப்படுத்திய விதம் நேர்த்தி. ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடுகளின் வேகத்தையும், வீரியத்தையும் மிக நேர்த்தியாக படமாக்கியிருப்பவர் காரி காளையின் முறைப்பைக் காட்டி நம்மை பயமுறுத்தவும் செய்திருக்கிறார்.
டி.இமான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. வழக்கமான தனது பாணியை தவிர்த்திருக்கும் டி.இமான், தனது அடையாளமே இல்லாமல் புதிதாக இசையமைத்திருக்கிறார். குறிப்பாக பின்னணி இசைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது.
இயக்குநர் சொல்ல நினைத்ததை மக்களிடம் சரியான முறையில் படத்தொகுப்பாளர் டி.சிவனந்தீஸ்வரன் கொண்டு சேர்த்திருந்தாலும், முதல் பாதியில் காட்சிகளை மெதுவாக நகர்த்தியிருப்பதை தவிர்த்திருக்கலாம்.
கதை எழுதி இயக்கியிருக்கும் ஹெமந்த், ஜல்லிக்கட்டு போட்டியின் மூலம் மாடுகளை மக்கள் கடவுளாக தான் வணங்குகிறார்களே தவிர, அவற்றை எந்த விதத்திலும் துன்புறுத்துவதில்லை, என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். அதே சமயம், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க போராடுகிறவர்கள், குதிரை பந்தயத்திற்கு ஏன் தடை கேட்பதில்லை என்றும், குதிரை பந்தயத்தால் குதிரைகள் எப்படி துன்புறுத்தப்படுகிறது, என்பதையும் சொல்லியிருக்கிறார்.
ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றி கதை நகர்ந்தாலும், சமூக பிரச்சனையையும் படத்தில் பேசியிருக்கும் இயக்குநர் ஹேமந்த், ஆடு,மாடு, பறவைகளும் உயிர் தான், அவற்றையும் நாம் நேசிக்க வேண்டும் என்ற மெசஜை மிக அழகாக சொல்லியிருக்கிறார்.
சசிகுமாரை தேடி சென்னைக்கு வரும் ஊர் பெரியவர்கள் சிறுமியை உடன் அழைத்து வருவது, அந்த சிறுமிக்கு உணவகத்தில் ஏற்படும் கொடுமை, போன்றவை திணிக்கப்பட்டவையாக இருக்கிறது. படத்திற்கு எந்த வகையிலும் ஒட்டாத அந்த காட்சிகளை தவிர்த்திருக்கலாம். அதேபோல், அம்மு அபிராமியின் கதாபாத்திரமும் எதற்கு என்று தெரியவில்லை.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக மட்டும் இன்றி, தரிசாக கிடக்கும் நிலங்களை குப்பை மேடாக மாற்றும் ஆட்சியாளர்கள், அதனால் அழியும் கால்நடைகள் மற்றும் பறவைகள் என பல விஷயங்களை படம் பேசியிருந்தாலும், அதை கமர்ஷியலாகவும் சொல்லி, ரசிக்கும்படி படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் ஹெமந்த் மற்றும் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் லக்ஷமன் குமார் இருவரையும் வெகுவாக பாராட்டலாம்.
மொத்தத்தில், ‘காரி’ காளையை போல் தரம்.
ரேட்டிங் 3.5/5