‘காத்தாடி’ விமர்சனம்
Casting : Avishek Karthik, Thanshika, Daniel, Sampath
Directed By : S.Kalyan Kumar
Music By : Bhavan - Deepan
Produced By : Srinivas Sampath
‘கத சொல்லப் போறோம்’, பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’ ஆகியப் படங்களை இயக்கிய எஸ்.கல்யாண் குமாரின் 3 வது படமான ‘காத்தாடி’ எப்படி என்பதை பார்ப்போம்.
சின்ன சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வரும் ஹீரோ அவிஷேக் கார்த்திக்கும் அவரது நண்பர் டேனியும், பெரிய திருட்டு செய்து வெளிநாட்டுக்கு பறந்துவிட நினைக்கிறார்கள். அதன்படி, பணக்கார வீட்டு குழந்தையை கடத்தி பணம் பறிக்க திட்டமிடும் அவர்கள், சம்பத்தின் மகளை கடத்திவிட்டு, தன்ஷிகாவிடம் சிக்கிக்கொள்கிறார்கள். கார்களை திருடி விற்கும் தன்ஷிகா அவர்களுடன் சேர்ந்துக் கொண்டு குழந்தையின் தந்தையிடம் ரூ.50 லட்சம் கேட்கிறார். இதற்கிடையே இவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகும் குழந்தை, தன்னை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லுங்கள், ஆனால் சம்பத்திடம் மட்டும் கொண்டு போய் விடாதீர்கள், என்று கூற, பிறகு தான் தெரிகிறது கடத்தப்பட்ட குழந்தை சம்பத்தின் குழந்தை இல்லை என்பது.
அனாதையான இக்குழந்தையை வைத்து சம்பம் பெரிய அளவில் கடத்தல் வேலை ஒன்றை பிளான் செய்திருப்பதையும், அந்த குழந்தையின் பின்னணியையும் தெரிந்துக் கொள்ளும் தன்ஷிகாவும் அவரது நண்பர்களும் சம்பத்திடம் இருந்து குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
அதே சமயம், குழந்தையை உயிரோடோ அல்லது பிணமாகவோ, எப்படி இருந்தாலும் அந்த குழந்தையை கைப்பற்றியாக வேண்டும் என்பதில் சம்பம் தீவிரம் காட்ட, இறுதியில் அந்த சிறுமி காப்பாற்றப் பட்டாளா இல்லையா, அந்த குழந்தையின் பின்னணி என்ன, என்பது தான் ‘காத்தாடி’ படத்தின் மீதிக்கதை.
ஒரு சிக்னலில் தொடங்கும் படம், அந்த சிக்னலில் இருக்கும் சில மனிதர்களைக் கொண்டு நகர்வது போல இயக்குநர் கல்யாண் அமைத்திருக்கும் திரைக்கதை ரசிக்கும்படியாக உள்ளது.
அவிஷேக் கார்த்திக் மற்றும் தன்ஷிகா ஹீரோ ஹீரோயினாக நடித்ததை விட, கதைக்கான பாத்திரமாகவே நடித்திருக்கிறார்கள். ஹீரோவின் நண்பராக நடித்துள்ள டேனி, காளி வெங்கட், ஜான் விஜய், சம்பத் என படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் தங்களது வேடம் அறிந்து நடித்திருக்கிறார்கள்.
டிரவலிங் ஜானர் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இருந்தாலும், இயக்குநர் கல்யாண் திரைக்கதையை காமெடியாக கையாண்டுள்ளார். கம்பவுண்டரான காளி வெங்கட்டை டாக்டர் என்று நினைத்து அழைத்து வந்து ஆபரேஷன் பண்ணுங்க, என்று சொல்லும் காட்சியும், டேனியின் குழந்தை பருவ பிளாஷ்பேக் காட்சியும் திரையரங்கை சிரிப்பால் அதிர வைக்கிறது.
படம் பரபரப்பாக நகர வேண்டும் என்பதற்காக தான் சொல்ல வந்ததில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குநர் காமெடி காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அதை சற்று குறைத்து சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானருக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருந்தால் ‘மாநகரம்’ போன்ற ஒரு பாதிப்பை இப்படமும் ஏற்படுத்தியிருக்கும்.
ஜெமின் ஜோம் ஒளிப்பதிவும், பவன் - தீபன் இசையும் திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. எடிட்டர் விஜய் வேலுகுட்டியின் கத்திரி இன்னும் சில காட்சிகளை வெட்டியிருந்தால் படம் இன்னும் கூர்மையாக அமைந்திருக்கும்.
தற்போதைய தமிழ் சினிமாவின் டிரெண்டுக்கு ஏற்ற ஒரு படமாக இப்படத்தை கொடுக்க நினைத்த இயக்குநர் கல்யாண், சில இடங்களில் தடுமாறியிருந்தாலும், திரைக்கதையை தொய்வில்லாமல் நகர்த்தியிருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘காத்தாடி’ யை ஒரு முறை பார்க்கலாம்.
ஜெ.சுகுமார்