’காத்துவாக்குல ரெண்டு காதல்’ விமர்சனம்
Casting : Vijay Sethupathi, Nayanthara, Samantha, Maran, Shreesanth, Redyn Kingsly
Directed By : Vignesh Shivan
Music By : Anirudh Ravichander
Produced By : Vignesh Shivan, Nayanthara, S. S. Lalit Kumar
தான் ஒரு unlucky என்று நினைத்துக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு, உன்ன விட இந்த உலகத்துல lucky-யான ஆள் யாருமே இல்ல, என்று சொல்லும் அளவுக்கு ரெண்டு காதல் கிடைக்கிறது.
கண்மணி, கத்திஜா என்ற இரண்டு பெண்கள் தனது வாழ்க்கையில் வந்த பிறகே சூனியமான தனது வாழ்க்கை சூப்பரானதாக நினைக்கும் விஜய் சேதுபதி, தன்னிடம் ஐ லவ் யு சொல்லும் இரண்டு பெண்களிடமும் மீ டூ என்று சொல்கிறார்.
ஒருவனுக்கு ஒருத்தி தான் நமது பண்பாடு என்றாலும், தனக்கு நயன்தாராவும் வேண்டும், சமந்தாவும் வேண்டும் என்று அடம்பிடிக்கும் விஜய் சேதியை விட்டுக்கொடுக்க முடியாமலும், விலகிச்செல்ல முடியாமலும் தவிக்கும் நயன்தாரா சமந்தா ஆகியோர் இறுதியில் என்ன முடிவு எடுத்தார்கள், என்பதே படத்தின் கதை.
பல்வேறு காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றி பெற்ற இரண்டு பொண்டாட்டி ஜானர் கதையை, தற்போதைய 2k காலக்கட்டத்திற்கு ஏற்ப இயக்குநர் விக்னேஷ் சிவன் அமைத்திருக்கும் திரைக்கதை சுவாரஸ்யமாகவும், நியாயமாகவும் இருக்கிறது.
கஷ்ட்டப்படாம காரியம் சாதிக்க முடியுமா? என்று கேட்டால், அது விஜய் சேதுபதியால் முடியும் என்று தான் சொல்ல வேண்டும். நடிக்காமலேயே நல்ல நடிகர் என்று பெயர் எடுத்து வரும் விஜய் சேதுபதி ராம்போ என்ற கதாப்பாத்திரத்தில் அசால்டாக நடித்து அப்ளாஸை அல்லுகிறார். தனது காதலை வெளிப்படுத்த கமல்ஹாசன் போல கஷ்ட்டப்பட்டு நடிக்கவில்லை என்றாலும், இரண்டு காதலுக்காக தான் ஏங்குவதை கண்களின் மூலமாக பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
கண்மணி என்ற ரோலில் நடித்திருக்கும் நயன்தாராவும், கத்திஜா என்ற ரோலில் நடித்திருக்கும் சமந்தாவும் திரைக்கதையில் சரிசமமான பலத்தோடு வலம் வருகிறார்கள்.
சமந்தாவை நயன் கத்திமா என்று செல்லமாக அழைப்பதும், நயன்தாராவை சமந்தா அக்கா என்று அழைக்க முயற்சிப்பதும், என்று இவர்களுக்கிடையே நடக்கும் செல்ல சண்டைகள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது.
என்னதான் நடிப்பில் சமந்தாவோடு சரிசமமாக போட்டி போட்டு நடித்தாலும் நயன்தாரா சீனியராகி விட்டார் என்பது திரையில் அப்பட்டமாக தெரிகிறது. அதனால தான் சமந்தா நயனை அக்கா என்று அழைப்பது போன்ற காட்சியை இயக்குநர் விக்னேஷ் சிவன் வைத்திருக்கிறார் போல.
தோற்றத்தில் அக்காவோ ஆண்டியோ, நடிப்புல இன்னமும் நான் சூப்பர் ஸ்டார் தான் என்பதை பல இடங்களில் நயன்தாரா நிரூபிக்க, சூப்பர் ஸ்டாருக்கே டப்பு கொடுக்கும் சமந்தாவின் நடிப்பும் டாப்பு டக்கராக இருக்கு.
அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். ரொமாண்டிக் காட்சிகளில் அவரது பீஜியம் வேற லெவல். விக்னேஷ் சிவனின் பாடல் வரிகள் சாதாரணமாக இருந்தாலும், அனிருத்தின் இசை ஆட்டம் போட வைக்கிறது.
எஸ்.ஆர். கதிர் மற்றும் விகய் கார்த்திக் கண்ணன் ஆகியோரது ஒளிப்பதிவு கலர் புல்லாக இருக்கிறது. நயன்தாரா மற்றும் சமந்தாவை அழகாக காட்டுவது போல் விஜய் சேதுபதியையும் ஸ்மார்ட்டாக காட்ட மெனக்கெட்டு இருக்கிறார்கள்.
இரண்டு பெண்கள் ஒரு ஆண், அவர்களுக்கு இடையிலான காதல் மட்டுமே படம் என்றாலும், அந்த காட்சிகளை போரடிக்காத வகையில் ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்திருக்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படாத வகையில் அனைத்து காட்சிகளையும் அளவாக தொகுத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.
இயக்குநர் விக்னேஷ் சிவனின் தேவதை என்பதை நயன்தாரா இன்னொரு முறை நிரூபித்திருக்கிறார். நயன்தாரா கூட இருந்தால் விக்னேஷ் சிவனின் படங்களில் ரொமாண்டிக் காட்சிகள் கடல் அலைப்போல் ஆர்ப்பரிக்கிறது. கூட சமந்தாவும் இணைந்திருப்பதால் மனுஷன் காதல் ஒலிம்பிக்கையே நடத்தியிருக்கிறார்.
”இட்லி, தோசை, ரஜினி கமல் என எனக்கு இரண்டும் பிடிக்கும், அதுபோல உங்க ரெண்டு பேரையும் பிடிச்சிருக்கு” என்று விஜய் சேதுபதி பேசும் வசனம் கொஞ்சம் ஓவராக இருப்பது போல் தெரிந்தாலும், அவையும் பெண்களும் ஒன்றா? என்று கேள்வியின் மூலம், சர்ச்சை ஏற்படும் இடங்களை கூட சரி செய்துவிடுகிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் இடையிலான கெமிஸ்ட்ரி, சமந்தா மற்றும் நயன்தாரா வேடங்களை சரிசமமாக திரைக்கதையில் பயன்படுத்தியிருப்பது, திரைக்கதை மற்றும் காட்சிகள், இசை என அனைத்துமே படத்திற்கு ப்ளஸ்ஸாக இருக்கிறது.
முதல் பாதியில் முழு படமும் முடிந்துவிடுவது போல் திரைக்கதை அமைத்திருப்பது படத்திற்கு சின்ன மைனஸாக இருந்தாலும், இண்டர்வேல் பிளாக் அந்த மைனஸை கூட பிளஸாக மாற்றிவிடுகிறது.
மொத்தத்துல, சிரிச்சி, கைதட்டி ஜாலியாக ஒரு படம் பார்க்க வேண்டும் என்றால் அதுக்கு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் சரியான தேர்வு.
ரேட்டிங் 4/5