’கபடதாரி’ விமர்சனம்
Casting : Sibiraj, Nanditha Swetha, Nazar, Jayaprakash
Directed By : Pradeep Krishnamoorthy
Music By : Simon k.King
Produced By : Lalitha Dhananjayan
சென்னையின் ஒரு பகுதியில், மேம்பாலம் கட்டும் பணியின் போது சிதைந்த நிலையில் மூன்று நபர்களுடைய எலும்பு கூடுகள் கிடைக்கிறது. ஆனால், அந்த எலும்புக்கூடுகள் 40 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தவர்களுடையது என்பதால், அதை காவல்துறை பெரிதுப்படுத்தாமல் விட்டுவிடுகிறது. அதே சமயம், அப்பகுதியில் பணியில் இருக்கும் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரான சிபிராஜ், அந்த எலும்பு கூடுகளின் பின்னணி பற்றி ஆராயும் போது, 40 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலை மற்றும் ஒரு குடும்பம் மாயமான வழக்கு குறித்து தெரிய வருகிறது. காவல்துறையால் முடிக்காமல் விடப்பட்ட அந்த வழக்கை மீண்டும் கையில் எடுக்கும் சிபிராஜ், அந்த வழக்கின் உண்மையான குற்றவாளி மற்றும் காணாமல் போன குடும்பத்திற்கு என்ன நடந்தது, ஆகியவற்றை எப்படி கண்டுபிடிக்கிறார், என்பதை பரபரப்பான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்கள்.
சிபிராஜ் போலீஸ் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துவது போல, போலீஸ் யூனிபார்மும் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது. போக்குவரத்து காவலராக பணியாற்றினாலும், குற்றப் பிரிவில் பணியாற்ற வேண்டும் என்ற தனது ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தும் இடங்களில் கச்சிதமாக நடித்திருக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானருக்கு ஏற்ற ஹீரோவாக படம் முழுவதும் வலம் வருபவர் நடிப்பிலும் தான் பெற்ற அனுபவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
ஹீரோயினாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதாவுக்கு மிக மிக குறைவான வேலை தான். இப்படி ஒரு வேடத்தில் நடித்திருக்கும் அவருடைய பெருந்தன்மையை மனமார பாராட்டியாக வேண்டும்.
பத்திரிகையாளராக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், மற்றும் பணி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நாசர் இருவரும் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பால் கதாப்பாத்திரங்களுக்கு கனம் சேர்த்துள்ளார்கள். சிறிய கதாப்பாத்திரம் என்றாலும் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் நடிகராக கவனிக்க வைக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் கன்னட நடிகர் சம்பத் மைத்ரேயா கண்களினாலேயே நடிக்கிறார். படத்தின் முக்கியமான கதாப்பாத்திரமாக அறிமுகப்படுத்தப்படும் சுமன் ரங்கநாதன், மின்னல் போல் வந்து போகிறார்.
சைமன் கே.கிங்கின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம். குறிப்பாக பின்னணி இசையில் ஒலிக்கும் பீஜியம் திரையரங்கை விட்டு வெளியே வந்த பிறகும் நம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ராசாமதியின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு கூடுதல் விறுவிறுப்பை கொடுக்கிறது. குறிப்பாக இரவு நேர காட்சிகளை மிக நேர்த்தியாக கையாண்டுள்ளார்.
கன்னட படத்தின் ரீமேக்காக இருந்தாலும், அப்படத்தில் இருந்த சில தொய்வான காட்சிகளுக்கு கத்திரி போட்டிருக்கும் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல், படத்தை மிக நேர்த்தியாக படத்தொகுப்பு செய்துள்ளார்.
சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படம் என்று சொன்னாலும், அதற்கான அம்சங்களை குறைத்துவிட்டு, மசாலாத்தனத்தை தூக்கலாக வைத்திருப்பார்கள். ஆனால், இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, டைடில் கார்டு போடுவது முதல் க்ளைமாக்ஸ் எண்ட் கார்டு போடுவது வரை, முழுக்க முழுக்க அனைத்துக் காட்சிகளையும் சஸ்பென்ஷாகவும், த்ரில்லராகவும் நகர்த்தி செல்வது படத்திற்கு மிகப்பெரிய பலம்.
சில இடங்களில் காட்சிகளுக்கு இடையிலான தொடர்பு நேர்த்தியாக இல்லாதது சிறு குறையாக தெரிந்தாலும், அடுத்தடுத்து வரும் காட்சிகள் அதன் மூலம் உருவாகும் ட்விஸ்ட்டுகளால் அந்த குறை நிவர்த்தி செய்யப்படுகிறது.
படத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரங்களில் ஒருவர் தான் குற்றவாளி என்றாலும், ரசிகர்கள் யூகிக்க முடியாத வகையில் காட்சிகளை கையாண்டிருக்கும் இயக்குநர், ஒரு சஸ்பென்ஸ் முடிச்சை அவிழ்த்ததும், மற்றொரு சஸ்பென்ஸ் முடிச்சைப் போட்டு, அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தி விடுகிறார். இப்படி படம் முழுவதுமே, அடுத்தது என்ன நடக்கும்?, அந்த நபர் யார்? என்ன நடந்திருக்கும், என்று பல கேள்விகளை நம் மனதில் எழுப்பியவாறு திரைக்கதையை சுவாரஸ்யத்தோடு நகர்த்தும் இயக்குநர் அதை க்ளைமாக்ஸ் வரை கையாண்டிருப்பது பாராட்டுக்குரியது.
மொத்தத்தில், இரண்டு மணி நேரம் போனதே தெரியாத வகையில், படு விறுவிறுப்பான படமாக மட்டும் இன்றி, ஒரு முழுமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாகவும் 100 சதவீதம் திருப்தியளிக்கிறது.
ரேட்டிங் 3.25/5