’கபிலவஸ்து’ விமர்சனம்
Casting : Nesam Murali, Baby Ishwarya, Nandhini, Mansoor Alikhan
Directed By : Nesam Murali
Music By : Srikanth Deva
Produced By : Buddha Films
புத்தா பிலிம்ஸ் சார்பில் நேசம் முரளி தயாரித்து இயக்கி ஹீரோவாக நடித்திருக்கும் ‘கபிலவஸ்து’ சாலையோர மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது.
பொது கழிவறையில் பிறந்த குழந்தை வீசப்படுகிறது. அந்த குழந்தையை அங்கு இருப்பவர்கள் தூக்கி வளர்க்கிறார்கள். அவர் வளர்ந்து பெரியவனாகி அந்த கழிவறையிலேயே வேலையும் செய்து வருகிறார். அந்த கழிவறையின் பக்கத்தில் சிறிய டிபன் கடை வைத்திருக்கும் பாட்டியும், பள்ளி படிக்கும் அவரது பேத்தியும் வசிக்கிறார்கள். குப்பை பொறுக்கி பிழைப்பு நடத்தும் கோவை செந்தில், குப்பை கிடங்கில் வேலை செய்யும் அவரது மகள் நந்தினி ஆகியோரும் அதே பகுதி சாலையோரம் வசித்து வருகிறார்கள்.
கழிவறையில் பணியாற்றும் ஹீரோ நேசம் முரளி, நந்தினியை காதலிக்க, அந்த காதலுக்கு அவரது தந்தை கோவை செந்தில் பச்சைக்கொடி காட்டுகிறார். பாட்டியிடம் வளரும் பேத்தியான ஐஸ்வர்யா, எப்படியாவது வாடகை வீடு எடுத்து அதில் வசிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதற்காக பள்ளி படிப்பு முடித்த பிறகு தண்ணீர் கேன் போடும் வேலையையும் செய்து வருகிறார். நேசம் முரளியும், நந்தினியும் திருமணம் செய்துக் கொண்டு குடும்பமாக பிறரை போல வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
சாலையோரம் வாழும் இவர்களின் இந்த ஆசையை இந்த சமூகம் நிறைவேற்றியதா இல்லையா, என்பது தான் படத்தின் மீதிக்கதை.
அரசங்காமோ, சமூக சேவை அமைப்புகளோ கண்டுகொள்ளாத சாலையோரம் வாழும் மனிதர்களின் கஷ்ட்டங்களை சொல்லும் படமாக கதையை எழுதியிருக்கும் இயக்குநர் நேசம் முரளி, அதை படமாக்கும் போது மட்டும், கழிவறையை சுற்றியே காட்சிகளை நகர்த்தி, தான் சொல்ல வந்ததை அழுத்தமாக சொல்ல தவறியிருக்கிறார்.
ஹீரோவாக நடித்திருக்கும் நேசம் முரளி, கதைக்கு ஏற்ற முகமாகவே இருக்கிறார். இயல்பான நடிப்பால் சில இடங்களில் ரசிக்க வைப்பவர், எந்த நேரமும் கழிவறையில் படுத்துக் கொள்வது, கையாலேயே சுத்தம் செய்வது போன்ற காட்சிகளினால் முகம் சுழிக்க வைத்துவிடுகிறார். நாயகியாக நடித்திருக்கும் நந்தினி, கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வு.
படத்தின் முக்கிய கதாபாத்திரமாக ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்ளும் சிறுமி ஐஸ்வர்யாவின் நடிப்பு சில இடங்களில் ஓவர் டோஸாக இருந்தாலும், வாடகை வீட்டில் வசிப்பதற்காக அவர் எடுக்கும் முயற்சிகளும், வீட்டை பார்த்ததும் அவர் படும் சந்தோஷத்தையும் நடிப்பால் ஜோராக வெளிப்படுத்தியிருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் மன்சூரலிகான், கோவை செந்தில் என படத்தில் நடித்த அனைவரும் வஞ்சனை இல்லாமல் நடித்திருக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகங்களாக இருப்பதோடு, புரியும்படியும் இருக்கிறது. விஜியின் ஒளிப்பதிவு பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது.
யாரும் கண்டுகொள்ளாத சாலையோர மக்களை பற்றி படம் எடுத்ததற்காகவே இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் நேசம் முரளியை பாராட்டியாக வேண்டும். மாடுகளை காப்பாற்ற கூட அமைப்புகள் இருக்கிறது, ஆனால் சாலையோரம் வாழும் மனுங்களை காப்பாற்ற யாரும் இல்லை, என்பதை வசனங்கள் மூலம் அழுத்தமாக சொல்லியிருக்கும் நேசம் முரளி, திரைக்கதை நகர்த்தலில் சற்று தடுமாறியிருக்கிறார்.
சாலையோரம் வாழ்பவர்கள் பின்னணி, அவர்கள் எப்படி இந்த நிலைக்கு வருகிறார்கள், என்பதை நேர்த்தியாக சொல்லியிருப்பவர், சில இடங்களில் லாஜிக்குகளை மீறி, சாலையோரம் வாழும் மக்களின் கஷ்ட்டங்களை மட்டுமே சொல்லியிருக்கிறார். அதிலும், அதிகப்படியான காட்சிகள் கழிவறையிலேயே இருப்பது நம்மை சற்று கடுப்பேற்றுகிறது.
இருந்தாலும், சாலையோர மக்களும் மனிதர்கள் தான், அவர்களும் மற்றவர்களைப் போல வாழ வேண்டும், அதற்கு இந்த சமூகம் அவர்களை திரும்பி பார்க்க வேண்டும், என்பதை சமூகத்திற்கு சொல்ல முயற்சித்த விதம் பாராட்டுக்குரியது. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் இப்படம் இன்னும் பல பாராட்டுக்களை பெற்றிருக்கும்.
மொத்தத்தில், ‘கபிலவஸ்து’ சாலையோர மக்களுக்கான ஆதரவு குரல்.
ரேட்டிங் 2.5/5